போக்கிடம்

8 4 12 கல்கியில் வெளியான கவிதை                                             
 
 
 
 
 மணல்
செங்கல்...மனைவிலை,
ஆட்கூலி...வேலைநிறுத்தம் 
எந்தக் கவலையுமின்றி ,
மொட்டைமாடி 
நீர்த்தொட்டியின் 
பின்புறக்கூட்டிலிருந்து
எட்டிப் பார்க்கிறது 
பெயர்தெரியாக்குருவி. 
**********************************
கைப்பை,கடன் அட்டை,
கள்ள நோட்டு,சில்லறை 
எந்தக்கவலையுமின்றி
தனியாளாய்ப் புறப்பட்டு 
தந்திவடத்தில் அமர்ந்து 
சிறகு தூக்கி 
அலகை நுழைக்கிறது காகம்
இருப்பை எடுக்கிறதோ,
அழுக்கு கோதுகிறதோ... 
***********************************
மச்சுப்படி,மாங்கிளை ,
கட்டைச்சுவர் 
ஏறி,தாவி.குதிக்கும்
அணிலுக்குத் தொண்டனாகி 
ஓடிப்போய்விட்டது மனசு-
நாற்காலியில் புதைந்திருக்கும் 
என்னைக்கைவிட்டு !
கவலைகளைக் கைமாற்ற 
இடமறியாது திகைப்பதைப் 
பார்த்து -சிரிக்கிறது 
ஒற்றைச் செம்பருத்தி.
                            

கருத்துகள்

கலையரசி இவ்வாறு கூறியுள்ளார்…
குருவி, காகம், அணில் போன்ற ஐந்தறிவு உயிரனங்களுக்கு எந்தக் கவலையுமில்லை. ஆனால் ஆறறிவு மனிதனுக்கோ கவலைகளுக்குப் பஞ்சமில்லை. அருமையான கவிதை.
கல்கியில் வெளிவந்தமைக்குப் பாராட்டுக்கள் உமா.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி கலையரசி .கவலைகளைப் புதைப்பதா ,கவலைகளைப் புதைக்கும்
இடத்தைக் காப்பதா என்பது நம் முன் உள்ள சவால் அல்லவா...i
கீதமஞ்சரி இவ்வாறு கூறியுள்ளார்…
தடுமாறும் இதயத்தின் கவலைகளைத் தற்காலிகமாகத் தள்ளிவைக்கவேனும் இயற்கையின் உருவுகளுக்குள் சில கணங்கள் ஒதுங்கி வெளியேற வேண்டும். அழகான கவிதை. பாராட்டுகள் சக்தி.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க நன்றி கீதா

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்