அது இதுவல்ல

ஏப்ரல் 27 வல்லமையில்வெளியானது
அது இதுவல்ல
கடிகாரம் எனச் 
சொல்லலாம்தான் !
ஆனால்…
உன்-இடது கையிலிருந்து 
அவிழ்த்தோ ,
என்ன செய்வதெனத் 
தெரியாமல் அடுக்கியுள்ள 
எண்ணற்ற அன்பளிப்பு 
சுவர்க்கடிகாரம்
உறைகளைப் பிரித்தோ
தந்து விடலாம் என 
நிம்மதி அடையாதே !
என் பதட்டம் வேறானது. 
அதில்தான் வைத்திருந்தேன் 
புதிய சமையல் குறிப்பு 
முயன்று பார்க்க,
மகனுக்கான வரைபடம் 
வரைந்து முடிக்க,
நாங்கள் நட்ட 
தென்னம்பிள்ளை பற்றி 
தோழியிடம் விசாரிக்க,
தலையணை அருகே 
அலைபேசியோடு
சுருண்டிருக்கும் அம்மாவின் 
நலம் கேட்க,
எல்லாவற்றுக்குமான 
என் மணித்துளிகளையும்…!
என்ன பெயரிட்டு யாரிடம்,
எவ்விடம் கேட்பதெனத்
தெரியவில்லை.
கடிகாரம் என்று மட்டும் சொல்லி விடாதே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை