வெள்ளி, மே 04, 2012

மோகினிச் சொல்

.ஏப்ரல் 30 கீற்று இணைய இதழில் வெளியானது 

ஒரு சுள்ளிக்கட்டு சுமந்து சென்றாய் நீ

சிறியதும், பெரியதும், நீளமும், குட்டையுமாய்
அடக்கி மடக்கிக் கட்டி வைத்திருந்த கட்டுமீறி 
ஒரு சுள்ளி பாதையில் விழுந்து விட்டது.
பின்னால் வந்த ஒருவன் எடுத்துப்பார்த்தான்.
"கோடு போலிருக்கே...."
இன்னொன்றைத் தேடி வைத்து இணை கோடாக்கினான். 
பக்கத்திலிருந்தவன், கேலிச்சித்திரக்காரன் போல்
ஒரு வளையத்தை மேலே வைத்து,
"தலையும்,கையும்" எனச் சிரித்தான்.
கேட்டுக் கொண்டிருந்த மூன்றாமவன்,
தோதான இன்னும் இரு குச்சியால் 
உடல் கொடுக்க, உயிர் கொடுக்க வந்தான் மற்றவன்.
ஆடை ஒருவர் தர,"மூளியாக இருக்காதே" என 
ஆபரணம் சூட்டினாள் ஒருத்தி.
பால் பழத்தோடு ஒவ்வொருவர் போஷாக்கு தர,
லாஹிரி வஸ்துக்களோடு சிலர் சந்தித்ததாகவும் கேள்வி!
மறுநாள் நீ திரும்புகையில் 
ஒற்றைச் சுள்ளி மோகினி அங்கே உலவுவதாகவும் 
சூட்சுமக் கயிற்றின் முனை பிடித்தவாறு 
வழிப்போக்கன் வெகுகாலம் முன்பு கடந்துவிட்டதாகவும் 
கதைத்துக்கொண்டிருந்தார்கள் .....
உன்னிடமும் சொன்னார்கள் "எச்சரிக்கையாக இருக்கும்படி..."

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...