புதன், ஜனவரி 30, 2013

ஸ்னேஹலதாவுடன் ...



இந்த இக்கணம்
என்னுடையது....
காற்று அறையும் முகத்தில்
வந்து வந்து விழும்
கற்றை முடியொதுக்கி
ஒதுக்கி...
கைநோவதும் பொருட்டில்லை...

வெம்மையின் உப்பு பூசும்
ஒவ்வொரு நொடியும்
கூடிக் கூடி
என்னுடையதாகும்
கணங்களில் இருக்கிறேன்..

ஸ்னேஹலதாவைச்
சந்திக்கச் செல்லும்
இந்தப் பயணம் முக்கியமானது...

ஒவ்வொருமுறையும்
இந்தக் கணங்களைப் பற்றிக்
கதைத்திருப்பது
எங்கள் வழக்கம்...

எதுவும் சொல்லமாட்டாள்
இம்முறை.

புதிதாய் வாங்கிய
கண்ணாடி
முன் நெற்றிக் குழலைக்
கண்ணிலிருந்து தள்ளி வைப்பதால்
அந்தக் கற்றை
காரணமில்லை -
துளிர்த்து இறங்கும் துளிகளுக்கு..

நேற்றைய பயண விபத்தில்
மரித்து
கண்ணாடிப் பேழையில்
உறங்கும் ஸ்னேஹலதா
கேட்டிருந்த
இதன் ஜோடிக் குளிர்க் கண்ணாடி
என் கைப் பையில்...

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...