உங்கள் உலகம்

நாட்டு நடப்பு பேசுவீர்களா
வீட்டு நடப்பு வெளிநடப்பா
என்னதான் இருக்கும்
மாலை மங்குமுன் தொடங்கி
இருளை அலட்சியம் செய்து
இடையில் தேநீர்க்கடைவரை சென்றுமீண்டு
மதகடிச் சுவர் அதிரஅதிரச்சிரித்து
மனமின்றி
ஒருக்களித்து நிற்கும் சைக்கிள்களை
உருட்டியபடியும் பேசிப்பேசித்
தீராக்கதைகளோடு
கூடிப்பிரியும்
ஆண்களின் உலகம்
ஆச்சர்யம்,எரிச்சல்,ஏக்கம்
ஏன் பொறாமைகூடத்தான்
எங்கள்காலம் அது
இப்போதெல்லாம் முகநூலில் கூடி
முன்பின்னாய்ப் பேசி
எல்லோரும் சமமென்றே உறுதியாச்சு
ஆனாலும்
ஒற்றைக்கொரு நிமிடம்
எவராவது சொல்லிவிடுகிறீர்கள்
ஏதோவொரு
சாராயப்புட்டியின் பெயரை
விருப்பக்குறியிடும் விரலைஇழுத்துக்கொண்டு
பார்க்காததுபோல்
கடக்கிறோம்
உங்கள் உற்சாக எதிரொலிகளை
உங்கள் உலகம்
இன்றும் தனிதான்
என்ன
எட்டி நின்று பார்த்துச்செல்லலாம்
உரையாடலின் இடம் உங்களுக்கானது
வெளி உங்களுக்கானது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை