ஜனவரிப்பூக்கள் -2

முள்ளிருக்கிறது என்ற நினைப்பில்
ஓரக்கண் பார்வையோடு கடந்துவிட்ட
ஆரஞ்சுப்பூங்கொத்தைத் தயங்காது 
வளைத்துப்பறித்து
முகத்தோடு உரசியபடி
ஏழாவதுவயதில்போல
மென்குதிநடையோடு போக
இந்த முகம்தான் தடைஎனில்
கொஞ்சம்நில்லுங்கள்
சற்றேதிருகி எடுத்துத் தந்துவிடுகிறேன்


************************************************
உலர்ந்த கேள்விகள் 
கொடிக்கம்பியில் சேர்ந்துகொண்டேபோகின்றன
கிளிப்பே துணை
கிளியை நினைத்தீர்களா என்ன
உங்கள் நினைப்பிலும்
இந்தப்பிழைப்பிலும் வீசுகிறதுகாற்று


*******************************************
வாய்மூடி நகர்வதில் பிழையில்லை 
உனக்குத் தெரியாது 
உனக்குப் புரியவில்லை 
என்று சமாதானித்துக் கொள்வதில்
சிரமமில்லை
உதட்டைச்சுழித்தபடி மட்டும்போகாதே

***********************************************
நொண்டிக்கொண்டிருந்த அந்த நாய்க்குட்டி
அப்படியாகவே நினைவின் சித்திரத்தில்
தங்கிவிட்டது
அபூர்வ விருந்தாளியாக வந்தவருக்கு
அதுவோ 
கால்ஆறி,வயதேறி ,நுரைதள்ளி
வண்டியிலும் ஏறிப்போய்விட்டது
விசாரித்தபோது
துரத்திய நாள்தவிர்த்து
சொல்லிமுடித்தோம்

********************************************************
மறந்திருக்கும் எனநினைத்ததை
நினைத்திருப்பதும்
நினைவிருக்கும் எனநம்பியதை
மறந்திருப்பதும்
சுவாரசியம்.

அசுவாரசியமாகவும் இருக்கலாம்
***************************************************


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை