ஜனவரிப்பூக்கள் -5

எதிர்பார்த்து ஏமாறுவது
வழக்கம்தான்
எதிர்பார்ப்புக்குமுன்பே ஏமாறுவது
எதிர்பாராதது
****************************************************

ஒருகவிதை சித்திரம்போல
அமைந்துவிடுகிறது
ஒருசித்திரம் கவிதைபோல
அமைந்துவிடுகிறது
நாம்தான் நம்மைப்போலவும்
அவர்களைப்போலவும் இல்லாது....


****************************************
யாரோ என்பவர் யாரோதான் 
யார் யாராகவோ 
நீங்கள் நினைத்துக்கொள்வதற்கு 
யாரும் பொறுப்பல்ல

**********************************************
இயல்பாகப் பேசாதீர்கள் 
இயல்பு மீறிப்பேசாதீர்கள்
இதுவே இயல்பென்று பேசாதீர்கள்
இயல்பு தாண்டியதென்றும் பேசாதீர்கள்
பேசாதிருத்தலை
இயல்பாக்க இயலுமா பாருங்கள்
எல்லாம் இயல்பாகிவிடும்

*******************************************
அந்தநாள் வந்துவிட்டதென்று
நீங்கள் தயாராகிறீர்கள்
அந்தநாளுக்குத்தெரியுமா
நீங்கள் காத்திருப்பது
வேறுதிசையில் திரும்பிவிடப்போகிறது

**********************************************
வெட்கமாகத்தான் இருக்கிறது
தெருநாய்முன்
விழும் ரொட்டித்துண்டு போல
உன் பச்சாதாபத்துக்காகக் காத்திருப்பது

பழகிவிட்டது வெட்கம்
*************************************

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை