பிரியங்களின் தடம்

இவரைத் தெரியுமா
அவரை...
விசாரித்துக்கொண்டே நகர்கிறது கணிணித்திரை
தெரிந்த மாதிரியும்
தெரியாத மாதிரியும் கூட
மேலவீதி வேப்பமரவீடு
கண்ணாடிக்காரர் மகன்
என்பது போல் மேலதிகக்
குறிப்புகளோடு கேட்காதவரை
ஆத்தாவுக்குப்
போட்டியில்லை

**************************************
எல்லா மரமும்
பூத்திருக்கிறது என்பதற்காக
சோம்பிவிடாது பூக்கும்
மரத்தடியில் 
விழுந்து வணங்குகிறேன்.
முருங்கையை
ஆட்கொண்ட தெய்வத்தின் பெயர் தேடாதீர்

***************************************

இந்தப்பிரியத்தை
வரைந்து காட்ட முடிந்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும்
நிறம் தீட்ட உன்னை 
அழைத்திருக்கலாம்
பேச்சுக்கு சொல்வது
போலவே
நீயும்
திருத்தங்கள் சொல்லியிருப்பாய்
பிறகு அது
உன் ஓவியமாகி இருக்கும்
என் பிரியம்
வழக்கம்போல மிதியடிக்கு அருகே சுருண்டிருக்கும்

****************************************************
இது நான் சொல்ல விரும்பியது
யாரோ சொல்லி விட்டாராமே
நான் சொல்ல வந்தது
இல்லையென்றாகி விடுமா

*********************************************
திரும்பிப் பார்க்காமல் 
போக வேண்டும் என்பது
திரும்பிப் பார்க்கும்போது
மறந்து விடுகிறதோ

***********************************

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை