அழுத்திதேய்த்த போது(காது)

அவள் காதுகளைத் தேய்த்துக்குளித்து நாளாயிற்று 
என திடீரெனத் தோன்றியது
அழுத்தி அழுத்தி
தேய்க்க முற்பட்டபோது
குளியல் வேளைகளில்
மனதில் பதிந்திருந்த 
அடுப்பிலேற்றிய குக்கரின்
அழுத்தம்
முடிக்காது கிடக்கும்
பிள்ளையின் வீட்டுப்பாடம்
முறைத்தபடி வெளியேறிய
கணவன் தள்ளாடி வருவானோ என்ற பதட்டம்
இன்னும் இன்னுமான
அழுக்குகளின் அவசரத்தில்
காது கழுவ மறந்தே போனது நினைவில் வந்தது
இன்று தேய்த்துவிடலாம் என்று அழுத்தி இழுத்ததில்
காது நீளும் எனத்
தெரியவில்லை
நீண்ட காது கேட்பதோடு
நில்லாமல்
பேசவும் செய்கிறது.
அதுவும்
எதிர்த்துப்பேச வேண்டாமென வாய்க்கு
சொல்லித்தந்ததெல்லாம்
புரியாமல் பேசுகிறது
மௌனியாய் இருக்க
மனதிற்கு இட்ட கட்டளைகளை உடைத்துப்
பேசுகிறது
வாயாடி "யாக இல்லாதவளின் காது
கர்ஜிப்பதைத்தாங்க இயலாமல் முதலில்
வீடு காது பொத்திக்கொண்டது.
பின்னர் ஊர்.
விசாரித்த போது காது தேய்த்த கதை தெரியவந்ததால்
காது தேய்க்காது அழகியாக மாற 
விளம்பரப்படங்கள் உருவாகின்றன
ஒரு காது வளர்ந்ததுபோதும்
அவள் அவர்களாவது
ஆபத்து என்ற எச்சரிக்கையோடு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்