திங்கள், மே 16, 2016

முகநூலில் அன்னையர் தினம்

எதையாவது செய்து ,சொல்லி
எரிச்சலூட்டி விடுகிறீர்கள் 
கிழித்தாக வேண்டிய 
நாட்காட்டித்தாள் தனது
கடைசி மணித்துளிகளைப் படபடப்புடன்
கடந்துகொண்டிருக்க
கடக் என்ற எலிப்பொறியின் சப்தம்
எழுப்பிய வெற்றிஉணர்வு
சற்றேதணித்திருக்கிறது எரிச்சலை
நாளை இந்தஇடத்தை
நிரப்ப எலிகள் இருக்குமாதெரியவில்லை

******************************************************
உறவுகளைக் கொண்டாடுவது வாளேந்திய தருணமாக 
மாறிவிட்ட காலங்களில்தான்
ஒவ்வொரு உறவுக்குமான
தினங்கள் பெருகி
மூழ்கடிக்கின்றன 
பசி தீராவிடினும்
பழங்கணக்கின் அசைபோடலுக்காவது
வேண்டியிருக்கிறது பொய்ப்பல்

************************************************************
கண்ணோடும் வயிற்றோடும் மட்டுமே
காலமெல்லாம்
பிணைந்திருக்கிறது 
அன்னையுடனான கொடி
அவள் கண்ணீராகவும்
உங்கள் ருசியாகவும்
உணரப்படாத
தாயைக் கொண்டாடத்
தலைப்படுவீரோ மானிடரே

***********************************************************

வியாழன், மே 05, 2016

முகமற்றவளின் முகம் தெரியும்

முகமற்றவளாகவும்
பெயரற்றவளாகவும்
அறியப்படாமல்
ஆன்மா உள்ளவர்களைக்
கேள்வி கேட்கிறாள்
கேள்வி கேட்டதால்
குடல்சரிந்து போகுமுன்
உடல்சரிந்து போனவள்
கற்றவர் தேசமானாலென்ன
கடவுளின்
தேசமானாலென்ன
பெண்ணுக்கிருப்பது
சிதைத்திடத்தோதான
உறுப்புகள் மட்டுமே
வாருங்கள்
நமக்குக்கோஷம் போடும்
வாதம் செய்யும்
கண்ணீர் விடும் வேலையிருக்கிறது
தேர்தல் நேரம் வேறு
அடுத்து எவளுக்காவது
நிகழ்கையில் பார்த்துக்கொள்ளலாம்


சொந்த முற்றமிலா வாழ்வு

முல்லை மலர்வதும்
வாழை மடலவிழ்வதும்
பார்க்குமளவெல்லாம்
வாய்க்கவில்லை
சொந்த முற்றமின்றி 
சோற்றுக்கவலை துரத்தும்
வாழ்வில்

போலச் சிறக்குமொரு வாழ்வு


ஏப்ரல் 20 முகநூலில்

கொஞ்சம் பேசிக்கொண்டிருக்க முடிவு
செய்யும்போது தெரிகிறது
பொழுதோ நீயோ
போய்விட்டிருப்பது
***********************************
வேப்பம்பூக்களை
வாரி வாரி எடுத்து வைக்கிறேன்
எங்கோ பூத்திருந்த போது
இழுத்த வாசம் 
இன்றில்லை
**********************************

எப்படி மீண்டேன் தெரியுமா
சிறு தொடுகை ஒன்றால்
அது
நீயன்று-
காற்றிலாடிய சிற்றிலையின் உரசல் எனப் புரியுமுன்
உயிர் ஊறிவிட்டது

****************************************
பூவரச இலைகளைக் குழை
குழையாக ஒடித்துப்போட்ட
ருக்குவிடம்
யாரும் கேட்டதேயில்லை
இதை உன் வீட்டு ஆடுமாடு
தின்னுமா
காயவைத்து சுடுநீர்
வைப்பாயா என்றெல்லாம்

மதிலுக்கு அப்பால் தெரியும்
செம்பருத்திக் கிளையை
இழுத்து மடக்கிவிடுமளவு
இப்போது வளர்ந்துவிட்டோம்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...