புதன், ஜூலை 06, 2016

துயரநதி

நீங்கள் சொல்வதே அறம்
நீங்கள் செய்வதே
கேட்பதே
பார்ப்பதே
ருசிப்பதே 
நினைப்பதே எல்லாம் எனில்
நீங்கள் மட்டுமே பிறந்திருக்கலாம்
நாங்களும் பிறந்துவிட்டோமே

**************************************************************
திருகிக்கிள்ளப்பட்ட
காம்பு நைந்து கிடக்கிறது
தன் பொழுதுவரை
விகசிக்கவே ஆசை

அந்த மலர்
கொடியிலேயே இருந்திருக்கலாம்
கொத்தாக மொட்டுவிட்டிருக்கலாம்தொடுக்கத்தோதாக
காம்பு விரியாமல்
இருந்திருக்கலாம்
ஒவ்வொரு விரலுக்கும்
ஒவ்வொரு பார்வை

பூ
பூத்திருக்கிறது
அதுதான் முடியும்
**********************************************************************
மிகுந்த துயரோடு
ஏந்திக்கொண்டிருப்பதால்
தளும்புவதாகச் சொன்னது
குவளை
குவளைகளின்
உயரம்,கனம்,நிறம்,
மேல்பூ
எத்தனை பார்த்தீர்கள்
அழும் வழக்கமுண்டா
கேட்டீர்களா
ஏந்துபவன்,எடுப்பவன்
கவிழ்ப்பவன்
எவர் துயரையும்
எடுக்கும்போதே உணர்ந்து
தளும்பத் தொடங்கிவிடுகிறது
எதைச்சரித்தாலும்
சரிபாதி அதன் துயரநதி
நதிமூலம் தேடப்புகுந்தால்
கண்டடைவீர் களிமண்
மிதித்தவளின்
கண்ணீர்ச்சுனையை
அதுவரை
உப்புக்கரிக்கும் பானமே
உமக்கு விதிக்கப்பட்டது
என்ன பொல்லாத துயரம்
எத்தனையோ போல
உடைத்தால் போயிற்று
*********************************************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...