ஜூலை நிறைவில்

அப்போது தோன்றவேயில்லை
அதன்பிறகும்
நீயுமிருப்பாய்
நானுமிருப்பேன் என்று
***************************************
நீ போகாமலிருந்திருக்கலாம்
போனாய்
நீ வராமலிருந்திருக்கலாம்
வந்தாய்
நீ பேசாமலிருந்திருக்கலாம்
பேசினாய்
நீ எழுதாமலிருந்திருக்கலாம்
எழுதினாய்
எனக்கென்ன என்று கேட்கிறாயோ
நீ
பெண்ணல்லவா
எப்படி மறந்தாய்

**********************************************
காற்றைத்தேடி நீங்கள் சென்றிருக்கையில்
காற்று சுவாதீனமாக
புரண்டு திரும்பியிருக்கிறது
நல்லவேளை
காற்றின் இருப்பு வாய்க்காவிடினும்
காற்றின் தடம் புரிகிறது
நெஞ்சுகொண்டமட்டும்
இழுத்துவிட்டுக்கொண்டு
இன்னும் குறை காலம்
வாழ்ந்துவிடலாம்

************************************************************
நமது உரையாடலின்
பிசுக்கு
போவதேயில்லை
போகவேண்டும் என்று பூரண விருப்பமுமில்லை
அடுத்தமுறை எச்சரிக்கையாக
இருக்கவேண்டும்
தவறாமல் நினைத்துக் கொள்வதுதான்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்