அம்மாவின்நெளிமோதிரம்

நெளிமோதிரம் 
ஒன்றிருந்தது அம்மாவிடம்.
மாங்காய் நெக்லஸும்
குழுப்படத்திற்கு 
நெளியைப்போட்டுக்கொண்டு போனபோது 
தெரியாது
முகமே புள்ளியளவு தெரியும் படத்தில் 
நெளியெல்லாம் பதியாதென்று
மாங்காய் நெக்லஸ் எப்படியிருக்குமென்பதை 
எங்கள் யாரையும்விட 
எங்கள் ஊர் கூட்டுறவு வங்கி தராசும் 
கடன்பிரிவு ஊழியரும் நன்கறிவார்
விரலில் 
போட்டுக்கொள்ள முடியாமல் 
இற்றுப்போன நெளி 
இப்போதும் என் பெட்டியில் கிடக்கிறது
மாங்காய் நெக்லஸ் பழைய மாடல்
என்ற ஊகத்தில் அழித்தபோது 
அதிலும் 
மோதிரம்தான் செய்யலாம் என்றார் பத்தர்.
வருசாவருசம் வெக்கப் போனப்பயெல்லாம் 
தேச்சு பாத்ததிலயே 
தேஞ்சு போயிருக்கும் என்று 
சமாதானம் செய்த அம்மாவுக்குத் 
தெரியவில்லை 
எங்களுக்காக எப்போதும் தேயும் 
அவளுக்கு என்ன மிச்சமென்று

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை