செவ்வாய், டிசம்பர் 19, 2017

சன்னத நட்சத்திரம்

இன்று ஒரு நட்சத்திரம் கேட்கிறேன் 
மௌனமாய் நகர்கிறது வானம் 
உன் முகம் போலவே எதையும் காட்டா இருள் 

சன்னதம் கொண்ட சந்தர்ப்பங்களை 
மீள்நினைவு கொள்ளவும் அறியாது 
மௌனமாகக் கல் பொறுக்கிக்கொண்டு 
அமர்ந்திருப்பாள் கனகா அத்தை
யாருமிலாத பொழுது ரகசியமாகக் கேட்பாள்
அப்பிடிஎல்லாமா கத்தினேன்
தலையசைத்தாலும்
அவள் கண்களில் தெரிவது திருப்தியா
அவநம்பிக்கையா
இன்றுவரை புரியவில்லை 


என்னால் முடிந்தது
அமாவாசை வானிடம் நட்சத்திரம் கேட்பது
பின்
மௌனத்தை எதிரொலிப்பது



ஈர மணல்

சிப்பியும் சங்கும் அள்ளி வராதவர் 
காலோடும்
ஒட்டிவந்துவிடுகிறது
ஈரமணல்


*******************************************************
தொலைவதற்கான ஆயத்தம் தேடலாக மாற
தேடலுக்கான ஆயத்தம் 
தொலைதலாகவில்லை
இருக்கிறேன்
இருக்கலாம்

***********************************************************
அழாதே எனச்சொல்லவில்லை
காலையில் அழாதே என்றாய்
பக்கத்து கண்ணாடியில் தற்செயலாக நோக்கிய
அழுவதற்கான காரணங்கள் 
திகைத்து நின்றன

****************************************************************

கிள்ளக்கிள்ள துளிர்க்கும் 
பசலைக்கொடிக்குப் புரிகிற மாதிரி 
ஒருமுறையாவது நன்றிசொல்ல வேண்டும் 
முடிந்து போகுமுன்

*********************************************************************
நேற்று மாலை வெளிச்சத்தைவிட 
இந்தக்காலை வெளிச்சம்
பூரணம் காட்டுகிறது
இடையில் வந்த இருள் 
தள்ளிநின்று சிரிப்பதை 
நான் கேட்க விரும்பவில்லை
பார்க்கவுமில்லை
அட..
அதைத் தெரியவே தெரியாது என்றே வையுங்கள்

*****************************************************************************


திங்கள், டிசம்பர் 04, 2017

மூக்குத்திப் பெண்கள்


எப்படியோ முடிந்தது
பிய்த்துப் பிடுங்கும் வறுமையிலும்
தோடு மூக்குத்தியை ஆடை போல அடிப்படையாய்ப்
பார்க்க
அதனினும் கொடிதான பொழுதுகளில்
அடகுக்குப் போகும் போதும்
கவுரவத்தைக் காப்பாற்றடி என்று
காதணிகள் கண்ணீரோடு சொல்லிப் போனது
எண்ணெய் படிந்த ஒற்றைக்கல் மூக்குத்தியிடம்
அணிவிக்கும் பொழுதுக்கு
வைபவப் பெருமையை அடையாவிடினும்
தோடுகள் மூக்குத்தியை
துணைச் சொல்லாகவே ஏற்றன.
அறியாத வயதில் சுழற்றிவிட்ட திருகைக்
கழற்றும் கொடுமை கருதியே பிழைத்தது
பலநேரம்
துயரங்களில் சின்னது என்ன பெரியது என்ன
பாழாய்ப்போன கண் கலங்குகையிலெல்லாம்
தொண்டையடைத்து வழியும் சளியைச்
சிந்திஎறிந்தால் இறங்கும் பாரம்
இடையூறுஎன்னவோ குத்தும் திருகுதான்
உழைப்பின் நெருப்பு தணலும் முகத்தில்
மிஞ்சிய ஒற்றைப் பொட்டாக
ஒற்றைக்கல் மூக்குத்தியின் சுடரிலே
இருள் கடந்த நாட்கள்தான் எத்தனை
முத்து பெரியம்மா எது தவறினாலும்
மெனக்கெட்டு திருகு கழற்றி
வெள்ளிக்கிழமை எண்ணெய்க் குளியல்களில்
சிவப்புக்கல்லும் வெள்ளைக்கல்லும்
தனித்தனியாகவே தெரியுமளவு ஏழுகல்லையும்
காத்து வந்தாள்
அவள் பொறுமையின் பெருமைகளில் ஒன்றாகவும்
திறமையாகவும் சொல்லப்பட்ட அதையும்
பறித்துச் சென்றான் குடிகார பெரியப்பன்
குடல் வெந்த மரணத்தில்
பழஞ்சீலையில் சுருண்டுகொண்டு
குளிர்மறந்த நாட்களில்
நாம் அறிந்திருக்கவில்லை
அந்தக் கணப்பை மூட்டிக் கொண்டிருப்பது
அம்மையின் மஞ்சளேறிய மூக்குத்தியில்
மிச்சமிருந்த நெருப்பென்பதை

ஆசையின் சுடரை வைரமாக்கிய பெண்டிரின்
கைகளுக்கு விலங்குண்டு
கோசும் தொங்கலும் கூடிய அந்தஸ்தின் அடையாளம்
இரண்டில் ஒன்றைக்கைவிட எடுத்த முடிவில்
வலதாகவே இருப்பதன் சௌகர்யம்
வீடு சொல்லிக் கொண்டேயிருக்கும்
இடது தேவலாம் என்றாலும்
எந்தப்பக்கம் என்பது அவள் தேர்வல்ல
ராஜமாதாக்களின் நிரந்தர அசௌகர்யங்களில்
ஒன்று
நிரந்தர சளித் தொங்கலாய் ஆடிய புல்லாக்குகளாக
இருந்திருக்கக் கூடும்

கட்டைவிரல் கீழ் யானை

கண்முன்னால் நின்று கொண்டிருக்கும் யானை 
துதிக்கை தூக்கி பிளிறுமுன்
இதோ 
இந்தக்கட்டைவிரல் நுனியால் 
அழுத்திவிடலாம் போலத்தான் இருந்தது

*************************************************************
சுரைக்கொடி யோசிக்கவில்லை 
கூரை கிடைக்காது குப்பைகளோடு பிணைந்து படர
யாரோ ஒதுங்கிய இடமென்ற
கவலை 
அந்தப்பிஞ்சுக்குமில்லை

*************************************************************
ஏதாவது சொல்லியிருப்பாய் 
என்ற சமாதானத்தோடு புலன் தீட்டுகையில் 
மௌனத்தின் கல்லை அழுத்தி 
அடைத்துவிட்டுப் போனாய்
குகை இருளுக்கு வெளியே அதிரும் முழக்கங்கள் 
யார் கேட்க
இங்கோ ரும் ரும்மெனச் சுற்றுகிறது
மிச்சம் வைத்த மூச்சு

****************************************************************





முளைக்குச்சி உடைவதையும் 
கயிறு நைந்து அறுவதையும் 
யாரும் உவப்பதில்லை
சுற்றுக 
அனுமதிக்கப்பட்ட தூரம் மட்டும்
உன் கயிற்றின் விட்டம் உன் உலகு
எனதும் 
நாம் அடித்த முளைகளின் மேலிருக்கட்டும் 

எப்போதும்
ஒரு கண்

****************************************************************

எதைக்குறி பார்ப்பதென்றே
முடிவுசெய்ய விடாமல்
கரகரவென்று சுற்றும் சக்கரத்தின் முன் 

அம்புடன்
நிற்கிறது வாழ்க்கை


*****************************************
குமுறிக்குமுறி புரளும் நினைவுகளைப் 
புதைத்துவிட்டு 
மேலே இரண்டு நித்யகல்யாணிச்செடி வளர்த்து
வசவுகளை வார்த்தே வந்தாலும்
அதுவும் சிரிக்கிறதே
பூ மனசுதான்


***********************************************************************************



தழையுணர்த்தும் சிறுவாழ்வு

உலுக்கி உலுக்கி ஆட்டியபோதும்
முருங்கைக்கிளை 
சிரித்துக்கொண்டு நிமிர்ந்துவிடுகிறது
பெருமழைசொரிந்த
நேற்றைய சலிப்பெங்கே என்றால்
நம் காலடியில் உதிர்ந்து பறக்கும்
இலைகளைச் சுட்டியபடி
ஓராயிரமாய்க் கிழிந்து தொங்கும் 
வாழையிலையை வருடப்போகிறது

ஏறியிறங்கும் அணிலுக்கும் 
ஒண்டு இடுக்கில் நார் சேர்க்கும் காக்கைக்கும் 
ஆட்சேபமின்றி இடம்

மழையைக்குடிக்கும்
ஒளியைத்தின்னும்
இளவெயிலில் தழையுணர்த்தும்
சிறுவாழ்வு
சொல்லிக்கொள்கிறோம்
எதற்கும் இடந்தரா எம்முடையதைப் 
பெருவாழ்வென்று


சேதாரமிலா உபச்சாரம்

வருத்தங்களை உருக்கி உருக்கி 
இழையத்தட்டி நகாசு கிகாசு செய்து 
புத்திமதிகளை 
நாலு கல்லோ சலங்கையோ செதுக்கி 
அமுக்கி அமுக்கி ஓரம் மூடி 
அடக்கமாகப் பெட்டியிலிட்டு 
வைத்திருங்களேன்
செய்கூலி சேதாரத்தோடு நல்ல விலை போகும்
நல்ல விலை கொண்டு நாயை விற்பார்
நாயிடம் யோசனை கேட்பதுண்டோ
எதற்குப் பின் வருத்தத்திடம்
உபசார வார்த்தைகள்




சாலையோர அங்காளம்மை-2

முழம் முழமாய்ச் சுற்றி வைத்த பந்துகளிலிருந்து
ஒரு கிள்ளு கூடத்தராது ஒயர்கூடையில் பதுக்கியபடி
தன்னை வணங்க காசு வீசும்
வாகனதாரிகளை மறித்துவிட்டு
பேரத்தின் எரிச்சலை வெற்றிலை எச்சிலாய்ப்புளிச்சிடும்
பேச்சியின் பேச்சும் கூவலும் 

அத்துணை சுவாரசியம்
எவரோ எப்போதோ சார்த்திய

மஞ்சள் சுங்கடியில் சான்னித்தியம் அருளும் 
அங்காளிக்கு 





மீனின்குரல் கேட்கும் தூண்டில்

வனத்தில் நிறைந்திருந்த
வயலட் சிறு பூக்களின் பெயர் தெரியவில்லை
வண்ணத்துப் பூச்சிக்கும் எனக்கும்
அதனாலென்ன

********************************************************
கு
ளத்தின் பாடலை 
நீங்கள் தவளையின் குரலில் கேட்கிறீர்கள் 
உங்கள் தூண்டில் மீனின் குரலில் கேட்க 
நானோ நீரின் குரலில்

********************************************************
தூறலில் தொடங்காத 
மழையையும் 
பழகிக் கொள்கின்றன தொட்டிச் செடிகள்
***************************************************************

கண்ணாடித்தாள் போலச் சிறகு விரிக்கும் வண்ணத்துப்பூச்சி 
எங்கு கிழிபடுமோ 
பதட்டமாயிருந்ததில் 
சற்றுமுன் கிழித்த இதயம் மறந்து போனது

******************************************************************


வெள்ளி, டிசம்பர் 01, 2017

உதிரி செவ்வந்தி

உதிரி செவ்வந்தியை இட்டு 
கமலம் 
வரைந்த வாசலைத் தயக்கத்துடன் 
சாய்ந்து சாய்ந்து நனைக்கிறது மழை 
திருநாள் எங்கபோகுது 
நா எங்க போறேன் 
அட இந்த உதிரி செவ்வந்தியும்தான் 
எங்க போகுது
நீ வா தாராளமா
மழையிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாள்
அவள்



தளராடைவேளை

மாற்றிப்போட்ட சேலையின் ஓரப்பிசிறுவழி
கொடியிலிருந்து சொட்டிக் கொண்டிருக்கிறது
வெளியில் நான் விட்டுவந்த
மழை
கேட்கவேண்டும் எனத் தோன்றும் பாடல்கள்
எதையும் தேட நேரமில்லை
மெழுகுவத்தி கரைந்தே விடுமோ என்ற அச்சத்துடன்
ஊதிஊதி அணைத்து அணைத்து
ஏற்றிக் கொண்ட இரவுகளுக்கு
இருந்த வாசம்
இன்றைய நாசியில் அரூபமாய்
இறுக்கமாய்த் தோள் சார்த்திய வயலினை
இழைக்கும் விரல்களை நினைத்தபடி
வெங்காயம் நறுக்கும்
இந்த தளராடைவேளையின் பரபரப்பு
என்றாவது மணக்கக் கூடும்

குருதியின் நீர்மை

சொட்டுச் சொட்டாய் உதிர்ந்து கொண்டிருக்கிறது
எவ்வளவற்றை ஏந்திவிட முடியுமோ
அவ்வளவையும் ஏந்திவிடக் கை குவிக்கிறேன்
ஏந்திய மறுநொடி வழிந்தபோதும்
மழைத் துளியே உன்மீதிலான காதலைத்தான்
எப்படித் துறப்பேன்
உள்ளிறங்கி உள்ளிறங்கி

என் ரத்தக் குழாய்களில்
பயணிக்கும் பேரன்பு உனக்கு வாய்க்காதபோதும்
என் குருதியின் நீர்மை நீதானெனக்
கற்பித்துக் கொள்கிறேன்
பைசாசத்தைக் கூட்டு சேர்த்துக் கொண்டு
வெறியாடும் பொழுதுகளையும் மன்னித்து
பழரசமருந்தி இசைபாடும் 

காவிய நாயகனாக உருவகித்துக்
காத்திருக்கப் பழகுகிறேன்



வியாழன், நவம்பர் 23, 2017

வீழ்சருகின் குரல்

தரையோடு படர்ந்து கிடக்கிறது குப்பைக்கீரை
பெயரின் கண்ணாடியில்
முகம் பார்க்கத் தெரியாதவரை
பிழைத்தேன்

********************************************************

வீதிகளற்ற கனவில் 
தினமும் தாவிக்கொண்டிருக்கும் பட்டாம்பூச்சி 
எதிர்ப்படும் கைரேகை பட்டழிகிறது

***********************************************************
புல்லையும் அளவாகக்
கத்தரித்துவிட வேண்டிய
உலகில் 
விடுதலை கீதம்
பாடிச்சுற்றும் பொன்வண்டே
உன் சின்னச்சிறகுகள்
கண்டு பட படக்குதென் இதயம்


***************************************************************
மேல் கீழாக எழுதிப் பார்த்தேன்
கீழ்மேலாகவும்
இடவலம் வல இடம்
எப்படி எழுதிடினும்
குன்றா கசப்பு 
தேனால் மெழுகித்தான் என்ன


************************************************************
விழுதாடிக்கொண்டிருந்த
காற்றைப் பார்த்து சிரித்துக்கொள்கிறது
அடர்கிளை
இங்கோ
அடர்கிளையின் இலை
துறந்த ஒற்றைக்குச்சி


**********************************************************
கழிவிரக்கப் புன்னகைக்குப் பதில்
காறித் துப்பிவிட்டு
சுருண்டது நிழல்


*****************************************************

இந்த நதியின் அலைகளுக்கப்பால்
இந்த முகடுகளின் மேகப்பூச்சுக்கப்பால்
இந்த நீலத்தின்
கூசும் ஒளிக்கப்பால்
இருப்பதெல்லாம் இருள்
ஏன் இத்தனை திரை


********************************************************
இலை இலை இலை
அடுக்கடுக்கடுக்காக
இலை
வளைந்து நெளிந்து
நுழையும் கீற்று அதுபோக்கில்தான் தரை தொடுகிறது
கோணல் புன்னகையென
சலம்புகிறது வீழ்சருகு


**********************************************************
எதுவுமே நினைக்காதவர்கள்
பற்றிக்கூட
என்ன நினைப்பார்களோ என 

நினைத்துக்கொள்கிறீர்கள்


நனையும் குப்பை


கோடி கோடி இலைகள்
உதிர்ந்து கொண்டே இருக்கின்றன
அந்த ஒற்றை இலை
சுழன்று விழுந்தது
ஓரலை இழுத்து விழுங்கியது
ஏனோ நடுங்குகிறது


***********************************************

உங்களைப்பற்றி 
நினைத்துக்
கொண்டேயிருக்கையில் நீங்களே 

வருவது அற்புதம்தான்
நினைத்த மாதிரியே
வந்திருந்தால்


************************************************

நசநசத்துக்கிடக்கிறது
குப்பை
ஞாபகங்களைப்போல
மழையில் நனைந்துகொண்டு


***************************************************
யாரையோ யாருக்கோ
பிடித்திருக்கிறது
அது
உங்களுக்குப் பிடிக்கிறதா
என்பதே உங்கள் பிரச்னை


***********************************************


செவ்வாய், நவம்பர் 21, 2017

அப்படியும் இப்படியும்

இறந்தவன் பெயரை எப்படி மாற்றுவது
இறப்பதற்கு முன்பாகத்தான்
அழகான ஒரு படத்தை முகநூலில்
அடையாளப்
படமாக்கியிருக்கிறான்
முகவரிக்குறிப்பேட்டில்
அலைபேசி சேமிப்பில் எண்ணாக எழுத்தாக
அடங்கிக்கிடக்கும் நினைவுகளை
முகநூல்வழி ஆட்டிப்படைக்கும்
அவனிடம் சொல்ல வழியில்லை
போனவன் பெயரைநினைவூட்டாதே என
இவனிடமாவது 
சொல்ல முடியுமெனத் தோன்றவில்லை
*******************************************************************

பாதுகாப்பாக உணர 
முற்படுகிறது ஒரு ஆயுதம்
ஏந்தியிருப்பவனும்
 எதிர்கொள்பவனும்
 மறைத்தும் மாற்றியும் 
ஏமாற்றியும் 
பாதுகாப்பைப் போர்த்திக்கொள்ளத் 
துடித்துக்கொண்டிருக்கையில்
ஆயுதத்தின்
பாதுகாப்புணர்வுக்கென்ன அவசரம்
**************************************************
ஆயுதங்கள் அறிவதில்லை அழிக்கவே பிறந்த கதை

*************************************************************
இது உனக்கான நேரம் என்பதை 
எப்படியாவது சொல்ல விரும்புகிறாய்
நீயே மறந்தும் போகிறாய்
வேறு வழியின்றி
**************************************************
இப்படி இருப்பதில்
குற்றவுணர்வு மிக
அப்படி ஆக முயல்கிறாய்
அப்படி இருப்பதிலும்
குற்றவுணர்வு கிளைக்கும்
எப்படியேனும் மாறத் துடிப்பாய்
அப்படி இப்படி இருப்பவர்கள்
அப்படியே இருப்பதைக் கண்டு
வியந்தபடி
*********************************************



வீட்டுக்குப் போகும் வழி


நாம் வீட்டுக்குப் போகும் வழியில்
இரண்டு அல்லிக் குளங்கள்
ஒரு ஆறு 
கொண்டையன் வாய்க்கால் ஆற்றில் சேர்த்தியா
என்ற சந்தேகமும் இருந்தது
பாதையோரப் புளியமரங்களின் முதற்குத்தகை
நமக்கு
கொடுக்காப்புளி.,அருநெல்லி,
நாவற்பழத்துக்கு சற்றே பாதை விலகியும்
நடையிலும் ஓட்டத்திலும் சேர்த்தியிலா போக்கில்
சிதறாது சேகரிக்க முந்தி வேண்டியே
முந்திப்போட்ட தாவணிகள்
திடீர் பாண்டி கட்டங்கள் 
நேரமிழுத்தபோதும்
அம்மையர் புலம்பவில்லை
குட் டச் பேட் டச் தெரியாத தடிக்கழுதை என்று
வாசலில் வண்டி ஏற்றி கம்பிச் சிறையிலிருந்து
கட்டிடச் சிறைக்கு இடம் மாறித் திரும்பும்
ஏழுவயதுப் பெண்ணிடம் 
எப்படியும் சொல்லிவிடவேண்டும்
இவ்வார விடுமுறையில்
என்ன இருந்தாலும்
காலில் முள் படாத நாகரீக காலம் இது

வண்ணக் குழம்போடு திரியும் கடவுள்

எந்த இரண்டு புள்ளியில் பொறி உறங்குகிறது
எனத் தெரியாது 
மாற்றி மாற்றி உரசிக் கொண்டிருக்கிறோம்
நேசத்தின் இலைகளின்மேல் பனி மூடிக் கிடக்கிறது
பசிய ஒளி சுடராமல் இற்று விழுந்து விடுவோமோ
என்று நடுங்குகிறது கிளையோடு
காற்றோ தன்னிடம் வனம் உரையாடக் காத்திருப்பதாகப்
புறப்பட்டு வருகிறது
தப்பித் தப்பி நடக்கும் எல்லாவற்றுக்கும்
அமரத்துவம் பூசிவிட

வண்ணக் குழம்போடு
திரிகிறான் கடவுள்
அவனிடமிருந்து பிழைப்பதுதான் பெரும்பாடு

எங்களுக்கென.....

பேசத்துவங்குமுன் சற்றே
தொண்டை கமறுகிறது
உனது சொற்களா எனதா
எதைத் துப்புவது என்ற
தள்ளுமுள்ளுதான்
இதற்கு விக்ஸ் என்செயும்
ஸ்ட்ரெப்ஸில்ஸ் தான் என் செயும்


*************************************************

நீங்கள் நம்பவே போவதில்லை
எங்களுக்கென்று ஒரு உயரம்
இருந்ததையும்
எங்களுக்கென்று ஒரு துயரம்
இருப்பதையும்

கண்ணீராலாவதென்ன
***********************************************

கதவைத் தட்டுபவர்கள் என்று
யாருமே இல்லை
மின்சார அழைப்புமணி 
வைக்கத்தொடங்கிய பின்னும்
கதவைத்தட்டி அழைப்பவர்கள்
கதவைத்தட்டி நுழைபவர்கள் இருந்தார்கள்
அப்படி யாரும் தட்டாத
பொழுதுகளிலும்
தட்டிய ஒலியின் பிரமையில்
திடுக்கிட்டு எழுமளவு
கதவைத் தட்டும் ஒலி நம் இதயத்தில்
கேட்டுக்கொண்டிருந்தது
இங்கோ தட்டுவதற்கானதல்ல கதவு
என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்
எப்படி நுழைகிறார்கள் என்பதுதான்
தெளிவாகவில்லை


கிணற்றகல இருள்

இருளை விசிறுகிறவர்கள்
ஒளியைக் கைப்பற்ற 
உங்களைத் தூண்டுகிறார்கள்
அது விதியாகத்தான் இருக்கட்டுமே

**********************************************

கிணற்றகல இருளில் மிதந்து கொண்டிருந்த 
இரண்டு 
நந்தியாவட்டைகள் மட்டும்
இன்னும் வெளிச்சமாக

**********************************************

தூவானத்துக்கென்று
தனி நிறம்
உங்கள் எந்த தூரிகையிலும் இல்லாதபடி

********************************************************
நினைத்தது நிஜம்
நினைக்காததும்
இங்கிருப்பதெல்லாம்
இங்கில்லாததும்தானே

*****************************************************

செம்பருத்தியின் அடர்சிவப்பு காணாதவனே
சாம்பிய முகத்தோடு நாள் திறப்பதன்றி 
ஏது வழியுனக்கு

***************************************************************


போகாத இடங்களின் பட்டியல்


அதாவது 
போக வாய்க்காத இடங்களின் பட்டியல்
இது ஒன்றும் நிலாவையும்
செவ்வாயையும் 
அமெரிக்காவையும் அண்டார்டிகாவையும் பற்றியதல்ல
ஊரிலேயே முதலில்
பால் சர்பத் அறிமுகப்படுத்திய தேரடி
முருகன் கடை
தெருமுனையில் கண்ணாடிப்பெட்டிக்குள்

 உப்பியபடியே இருக்கும் 
பூரிகளின் காவலனாக 
பாய்லர் முன்
நின்றவாறே வானையும் பூமியையும்
தேநீர் ஆற்றிப்பிணைத்த மணிகடை
பேன்பார்ப்பதும்
பூ தைப்பதுமாக உறவாடி
கீழத்தெரு குடிபோன
பேபியக்காவின் புதுவீ்டு
இன்னபிற தலங்களே


முற்றுப்புள்ளிக்கு முன் உள்ள தூரம்

உங்கள் கண்களுக்கே 
புலப்படாத 
ஒரு முற்றுப்புள்ளிக்கு முன் 
எவ்வளவு தூரம்

*************************************
அவரவர்க்கென்று
பிரத்யேக பாவமும்
பிரத்யேக சொல்லும்
பிரத்யேக தூரமும்
பிரத்யேக வேகமும்
பிரத்யேக ஆயுதங்களும்
*****************************************

அவள் பெயர் கொண்டவள்
அவள் போலில்லை
அவள் போலிருப்பவள்
அவள் பெயர் கொள்ளவில்லை
எப்போதேனும் 
இவள் அவளையும்
அவள் இவளையும்
நினைவூட்டி
திடுக்கிட வைத்து விடுகிறார்கள்

********************************************
உங்களிடம் எப்படி எல்லோரும் 
கேள்விகளைத் தயக்கமின்றி எழுப்புகிறார்கள்
நீண்டகாலமாக இதையே யோசிக்கிறீர்கள்
நீங்கள் யோசிக்கத் தொடங்கியதிலிருந்தும்
அதற்கு முன்பாகவும்
அது அப்படிதான் இருக்கிறது 
கேட்டுக் கொண்டே இருக்கும்வரை
இருக்கும்

*****************************************************
பார்க்காதது போல
நகர்ந்தார்
ஆசுவாசமாக இருந்தது

*****************************************

இரட்டை நீல டிக்

எல்லாவற்றையும் எப்படியும் 
திட்டமிடும் வீட்டிலும் 
திடீரெனப் பூத்து விடுகிறது 
ஒரு பூ

***********************************************

அட்டை கிழிந்த 
முனை மடிந்த அந்தப் புத்தகத்தினுள் 
மயிலிறகெல்லாம் இல்லை 
ஆனாலும் 
எடுத்து எடுத்து 
பார்த்துக் கொண்டிருக்கிறேன்


***************************************************
இரட்டை நீல டிக்
மற்றும் பேரமைதி
இதுவும் விடையாகலாம்


******************************************
யாரேனும்
என்றேனும்
எப்போதேனும்
புரிந்து கொள்ளக்கூடும்
இல்லாமலும்....

எதனால்தான் என்ன
எனும்போது
அதனாலும் ஒன்றுமில்லை
ஒன்றுமில்லை என்பதில்
எல்லாம் இருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம்


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...