செவ்வாய், நவம்பர் 21, 2017

மறைக்கும் குழல்

வெற்று நெற்றியில் 
ஒற்றைவிரலால் தள்ளிக்கொண்டேயிருக்கும்
முதியவளின் கண்ணை 
இன்னும் மறைக்கிறது
சுருண்டு ஆடும்
குழற்கற்றை
***********************************************

விழுதுகள் படர்ந்த தூரம் விட்டுப் 
பாதை போடச்சொல்லி கெஞ்சிப்பிழைக்கும்
பிழைப்பில் ஆலென்ன
அரசென்ன
சிறுமை சிறுமை எனக்கரைந்த காகம் 
அமர மின்வடமும் தோதுதான்


**********************************************

பிடித்திருப்பது எதுவெல்லாம் 
எனப்பிட்டு வைக்கத் 
தெரியாத பிரியங் கொள்ள 
நாடினேன் பிதாவே
பிட்டுப்பிட்டு வைப்பதென்ற வரியை மட்டும்
கோடிட்ட இடத்தில் நிரப்பியது நீயா
நானேதானா


*********************************************************


கைகளுக்குள் நிறைந்த நீரும்
கையிடுக்கில் உறுத்திய மணலும்
இப்போதும் இருக்கிறது
ஆற்றில் இல்லாத ஈரத்தை
அங்கேதான் கண்டடைந்தேன்



******************************************************

யாராவது ஒருவர் அரங்கிலிருந்து வாருங்கள்எ
ன மந்திர வித்தைக்காரர் அழைக்கும்போது 
நீ போவாயென நானும்
நானோ என நீயும்
ஆசனத்தை இறுகப்பற்றியவாறு பார்த்துக்கொண்டோம்.
தற்காலிகமாக தொலைவதில் 

என்ன சுவாரசியம் என 
நிச்சயம் சொல்லிக்கொள்வோம்
அடுத்த சண்டையில்


*****************************************************


பெருக்கெடுக்கும் கண்ணீர்நதியை விட
அதிகம் நனைத்து விடுகின்றன
வீழாது சுரந்து நிற்கும்
சில துளிகள்




***************************************
















கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...