செவ்வாய், அக்டோபர் 23, 2018

உரையாடல்களின் தேசம்


................
அதிகப்பிரசங்கி
பட்டிவாய் என்றெல்லாம் 
காலகாலமாக வையும் 
மெல்லினப் பதங்களை 
நன்கு இறுக்கி முறுக்கி
நெகிழிப்பைக்குள் திணித்து
வீசியெறி முதலில்..

ஸ்வச் பாரத்

கேள்வி என்பது பதிலுக்கானது என்ற
மூடப்பழங்கதையோடு
விடாது கேள்விக் கல் போட்டுக்கொண்டிருக்கும் காகங்களே..
சாடி நிரப்பவே உங்கள் காலம் போதாது 
இதுவோ ஆழ்பாழ்கிணறு
மந்தையாய்ப் பின் வரும்
வரம் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது
பிறவிப்பயன் எய்தினீர்
***
தேர்ச்சட்டகங்களின் மேல் 
அகன்ற மார்பு விம்ம விம்ம நின்றபடி
கரமுயர்த்தி ஆசீர்வதிக்கும்
உங்கள் அழகிய லட்சமதிப்பு துவராடைகளின் 
வெளிச்சத்துக்காக 
கூசும் கண்மூடிச் சற்றே நின்றமைக்காக..
என்ன தின்ன
என்ன உடுக்க
எப்படி நிற்க
எப்படி நடக்க
யாரை நேசிக்க
யாரை வாசிக்க
யாரை வணங்க
யாரைத்தூற்ற
எல்லாம் உங்கள்
சுட்டுவிரலுக்கு உரிமையாக்கவா

எம் சோற்றில் உப்பு உண்டு
இன்னும் கொஞ்சம் துப்பு உண்டு
இது உரையாடல்களின் தேசம்
ஒற்றைக்குரல்களின் சந்தைமதிப்பு 
சட்டெனப் பாதாளம் போகும்
அக்டோபர் 1 முகநூல் வழி த மு எ ச க வழி வெளியானது 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...