செவ்வாய், அக்டோபர் 23, 2018

அம்மாவின் பழஞ்சீலை

வாழ்வை வாழ்வாக்கிடும் பூங்குயிலை
 பார்க்கவே நேரவில்லை
ஆயினும் அதற்கோர் வருத்தமுமில்லை
எனக்கொரு தரிசனமுண்டோ

****************************************************************
காரைபெயர்ந்த சுவரெங்கும் படிந்த 
மழை ஈரத்துக்குள் 
ஆனை துதிக்கை உயர்த்த
அம்பாரியில் விரிக்கப்போதுமாய் இருந்தது
அம்மாவின் பழஞ்சீலை

*****************************************************************
கதவைத் திறந்திருக்கையில்
வெளியேறுவதைப் பற்றிய கவலையில்லை
மூடிய சன்னல்களின் இடையே 
எம்பிக்குதிக்கத் தோன்றுமளவு

*****************************************************************
முழங்காலில் முகம்புதைத்து 
விழியுயர்த்திப் பார்த்திருந்த சன்னலுமில்லை 
வாயிலுமில்லை 
அங்கிருந்து நீண்ட வெளியுமில்லை
நீயுமில்லை

****************************************************************
நீள் தொரட்டிக்கும் வளைகிளைக்கும் நடுவே 
இறுக்கிக்கொள்ளமுடியாத 
பற்றைத்துறந்த ஒற்றை முருங்கை 
வரமறுத்த வீம்பின் திருப்தியோடு 
கொதிக்கிறது
அவள் கிளறிக்கொண்டிருக்கிறாள்

**************************************************************
படம் ராமலக்ஷ்மி ராஜன் 


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...