திங்கள், அக்டோபர் 15, 2018

கிளி அமர்ந்த கிளையின் துளிர்

பொய்தான் எனத்தெரிந்தும் 
பாவங்களோடு கவனித்தலும் 
பொய்யே என உணர்ந்தும் 
பாவமாய்ச் சொல்லி முடிப்பதுமாக
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து
மெய்யாகத் தளர்கிறது வாழ்க்கை

***********************************************
அவ்வளவு தளர்ந்த முதுகைத் தாங்குகிறது
யாரோ விட்டுப்போன கோல்
பெருமூச்சு விட்டுக்கொண்டன கால்கள்

**************************************************************

தெப்பக்குளத்தில் ஆடும் நிழல் 
கோபுரத்துடையதாகவும் 
பறந்தோடும் புறாவுடையதாகவும் 
இரண்டையும் சேர்த்த வானத்தினதாகவும்
உன் கண்களோ
படியேறியிறங்கும் பாதங்களின்மேல்
*************************************************************

கிளி அமர்ந்த கிளையிலிருந்து 
பறக்கிற துளிர் 
உதிர்வது 
மரத்திலிருந்துதானா

**********************************************************************
எப்படியும் இயலாது
அதுபோலொரு வெள்ளைப்பூவை மலர்விப்பது
மல்லிகைக்கொடிக்கு மட்டுமல்ல
 தெருவோரத்தும்பைக்கும்
கைகூப்பி விட்டு வருகிறேன்


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...