ஞாயிறு, ஜூலை 29, 2012

கனவு நிறுத்தம்


   
ரோஸ்நிற சக்கரங்களும்,
மஞ்சள்,பச்சைநிற இருக்கைகளும்,
கைப்பிடியில் தொங்கும் 
சிவப்புக் குஞ்சலமுமாக 
புல்வெளிகளில் அலையவும் 
மைதானத்தில் வட்டமிடவும் 
முதுகு வளைத்து 
சாலையில் போட்டியிட்டு 
விரையவுமான 
கற்பனையிலிருந்து -அப்பு 
வெளிவந்தபோது 
சைக்கிள் பொம்மை விற்ற 
சிக்னலிலிருந்து
வெகுதூரம் வந்திருந்தது 
பேருந்து.
சிக்னல் பொம்மைகள்
கடையில் விற்பதில்லை 
கிடைக்கும் 
கடைகளுக்கு 
அம்மா போவதில்லை.              

சனி, ஜூலை 21, 2012

ஆடுகளம்


    
தொடக்கத்தில் 
பரத புஷ்பாஞ்சலி ,
பின் 
சற்றே கதகளி
கொஞ்சம் மோகினியாட்டம் 
அதன்பிறகுதான்...
அற்புதம்.
பறந்து பறந்து 
பாலே ....
தாவியும் ,மிதந்தும் 
அலைந்துவிட்டு ,
இப்போது 
கம்பியைப் பற்றி உந்தி 
முகம் பதித்துத் 
தொங்கிச் சிரிக்கும் 
சிறுவனாகி விட்டது 
யாரோ கட்டி,
அறுந்து ,
மிச்சமிருந்த கட்சித் தோரணம்.

வியாழன், ஜூலை 12, 2012

அப்பு,நீ என்னவாகப் போறே....


யாருமே விஞ்ஞானம் படிக்கலியாம்
அதனால்,
அப்பு விஞ்ஞானியாகட்டும்
என்கிறாள் அம்மா.
"ஊர்ப்பிள்ளைங்க எல்லாம் 
கம்ப்யூட்டர் படிச்சு 
கைநிறைய வாங்கையில 
நம்ப பிள்ள கொறஞ்சு போகலாமா....?"
பாட்டியின் கேள்வி.
"கோடிகள் சேர்க்க 
என்னாலாகாது .....
மெரிட்ல கிடைச்சா 
டாக்டராகட்டும்"-அப்பா...
அவ்வப்போது வந்துபோகும் 
அத்தையும் ,மாமாவும் கூடச் 
சொல்கிறார்கள் -
கப்பலோ விமானமோ 
ஓட்டப்படி"-என்று...
அப்பு விரும்புவது 
சூப்பர்மேன் அல்லது பேட்மேன் வேலை...
பாடிக்கொண்டே திரியும் 
எதிர்ச்சாரி 
டீக்கடைச் சிறுவன் ஆக
விரும்புவதை 
அப்பு யாரிடமும் சொல்வதில்லை...

செவ்வாய், ஜூலை 03, 2012

சால மிகுத்துப்பெயின்

இவ்வார(8 07 12)கல்கியில்  கரிசனத்தின்
பிறை வெளிச்சமே
பேரொளியாய்க்
கூசுகிறது...
இது பழக்கமில்லை....
புறக்கணிப்பின் இருள்
அகண்டமாய்ச் சூழ
அகட்டி அகட்டி விழித்தே
பழகிய விழிகளுக்குத்
தாளாது....

விரையும்
இடைநில்லாப் பேருந்தின்
சன்னலோரமாய்க்
காட்சிப்படும்
முதியவளோ,நோயாளியோ
பெறும் அதிர்வுக்கீற்று
போதும்...

புத்தனின்
மெலிய கரங்கள்
கபிலவஸ்துவின்
கனம் தாங்கா ...

ஞாயிறு, ஜூலை 01, 2012

எனது கோப்பைகள் நிரம்பிய அந்தரம்

குவளைகளில் 
என்ன நிரம்பியிருக்கிறது...
உதடு தீண்டும்வரை புலனாகாது !
கற்பனைகளை 
உடைக்கும் 
உப்பிட்ட வெந்நீர்!
"தொண்டைக்கு இதம்"
அசட்டுச் சிரிப்புடன்,
குறிப்பு சொல்லி 
ஏமாற்றமும் சேர்த்து கொப்பளிப்பேன் ....
குவளையின் அழகும்,
வடிவும் பார்த்து ,பரவசத்தில் 
தாகம் மறப்பேன்...
குளிர் நீரோ,பானமோ 
பகிர்வாய் என 
ஆடும் குவளைகளின் முன் 
கால்கடுக்கிறேன் ...
நீ காத்திருப்பது 
கைகூப்பலுக்கா?

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...