இடுகைகள்

2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உமா மோகன் கவிதைகள்-அதீதம்

படம்
1 கேளாமனம்
ஆசைதான் எல்லோருக்காகவும் பிரார்த்திக்க கைஎன்னவோ வழிநடையில் சுவர் தாண்டி நீட்டிக்கொண்டிருக்கும் செம்பருத்தியை வீட்டு மாடத்தில் பூசிக்கப் பறிக்கிறது
2 விலங்கு 
ஒரு கேவல் எழும்பி வெடித்தால்தான் என்ன
3 படைப்பாளி
கவிதை எழுதி நீண்ட காலமானது ஆரஞ்சு நிறத்தில் காரட் சிறுவேர்சூழ் சிவப்புமுள்ளங்கி ஓடடைந்த புளி உருண்டு உதிரும் நெல்லி மணக்கும் பசிய மல்லி
கழுவி ஆய்ந்து அடுக்கி .. இதன் ஒரு கீற்றையும் படைக்க இயலா வெறுமையுடன் இன்றும் ஏடு மூடவேண்டியதுதான் ***
டிசம்பர் இரண்டாம் இதழ் 2014

அன்புடை நெஞ்சம்...

படம்
எனக்கு கம்பீரம்  உனக்கு திமிர்  எனக்கு எரிச்சல்  உனக்கு ஈர்ப்பு  எனக்கு அதிசயம்  உனக்கு அனாவசியம்  கான்க்ரீட்டில் பொழியும் நீர் போல்  வழிந்தே போகிறோம்  கழுவிக் கழுவி ஊற்றும் வாழ்க்கைக்கு  இது போதும்  என்ன... நீர் எப்போதும் நீயல்ல  நான் எப்போதும் தரையல்ல 

பங்கு

படம்
கப்பக்கார வூடு என்ற பெயரை 

நிலை நிறுத்த  அரசுமாமா  கப்பல் செதுக்கிய  வீடு கட்டினார் அதற்கு எதிர்வீடாகிய அந்தஸ்தே  போதுமாக இருந்தது எங்களுக்கு  குண்டான்களில் சொட்டிய மழைநீரும்  ஒற்றைத் தாழ்வாரம் முழுக்க  புழுக்கைபோடும் ஆடுகளும்  எப்போதும் புகைவிசிறும் அடுப்படியும்  கொடிகளில் தழைந்து தொங்கும்  பழந்துணிகளும்வெடித்த தரையும்  இருந்தபோதும்  முறைவைத்து அழைக்க முடிந்தது. அரசுமாமாவை . க்ளாஸ்கோ ரொட்டியை எங்களுக்கும் பங்குவைக்க மறந்ததே இல்லை  மீனா அத்தை 
சகலமும் உள்ளடக்கிய  புதிய நகரியத்தில்  அங்கிள் ஆண்டிகளின் கால்புன்னகை  கண்டே வளரும் பிள்ளைகள் அதிலும் கால் புன்னகையே வீசுகிறார்கள்  அரசுமாமா  க்ளாஸ்கோ ரொட்டி  கப்பக்கார வீட்டின் எதிர்வீடு  எதைச் சொன்னாலும் .....

முகம் தேடுகிறேன்

படம்
கதுப்புகளில் சதை பற்றாத காலத்தின் கறுப்புவெள்ளைப்படம்  தேர்வின் அச்சம் வழியும்  ஹால் டிக்கெட் படம் தொடங்கி  சுற்றுலாக் கணங்கள்   திருமணக்கோலம்  நட்பு,உறவு எவ்வளவோ படங்கள்  வயதுகளின், தருணங்களின்  சாட்சியாய் .. யார்யார் வீட்டிலோ , விருந்திலும் விழாவிலும்  சேர்ந்துநில்லு...சேர்ந்துநில்லு... முன்னே வாங்க இப்பிடி .. உபசரிப்பும் தர்மசங்கட நெளிவும்  எப்படிப் பதிவாகின   காணக் கூடுவதில்லை  பிறகு 

கண்ணாரக் காண்

படம்
உண்மையைச் சொல்  உண்மையைச் சொல்  என்கிறாய்  உண்மையைத்தான் சொல்கிறேன்  வேலியோரத் தும்பைப்பூவையும்  அகன்ற திரையில்  உருப்பெருக்கிப் பார்த்தே  அறிந்துகொள்ளும் உன்னிடம்  எப்படி விளக்குவேன்  உண்மை இதுதான்  இவ்வளவுதான் என்று......

10 12 14 விகடன் சொல்வனத்தில் வெளியான கவிதை  படம் -நன்றி ராமலக்ஷ்மி ராஜன் 

தெரியாதிருந்தது

படம்
ஒரு பார்வை,ஒரு தொடுகை,
ஒரு புன்னகை,
ஒரு தலையசைப்பு ,
ஒரு "ம் 
எதையாவது உதிர்த்து 
ஒரு சுடரை ஏற்றமுடியும் 
என்று தெரியாமலே இருந்தது...
தெரிந்திருந்தால் 
பொருட்படுத்தியதன் அடையாளமாக 
ஒரு வசவையேனும் ..எறிந்திருக்கலாம் 

செவிபடாது மிதந்தலையும் கானம்

படம்
வரி சொல்வாய்  கருவி சொல்வாய்  எத்தனையாவது நொடியில் எந்தக் கருவி முடிந்து  எது தொடங்கும்  கூட எது இழையும் என்பதும் அறிவாய்  குரல் எப்போது குழையும்  எங்கே நிமிரும்  முத்திரை விழுந்திருப்பது எங்கே  சாயல் வேறெங்கு உண்டு எல்லாம்  பிரித்துக் கலைத்து  ஆறிய தேநீரோடு பாடலை அருந்திய  நாட்களின் சாட்சியான  தோப்புமில்லை
கடைக்கார வைத்தியும் காலமானார் 
ஒலிநாடாக்கள் சுழலவும் வழியில்லாது  மரப்பெட்டியின் ஓரத்தில்  தூசியோடு துயில  பதிவகங்கள் தேவையிலா உலகில்  தரவிறக்கும் தனியாளாக  நீயும் நுட்பம் கற்றிருக்கலாம் 
ஏதோ ஒரு  வானொலியோ ,தொலைக்காட்சியோ  வழங்கும் பாடலுக்குள் புகவியலாது  மணல் மிதிக்கும் என் பாதங்களைப்போல்  நீயும் உணர்வாயோ 
19 11 14 விகடன் சொல்வனம் பகுதியில் இடம்பெற்ற கவிதை

எனக்குத் தெரிந்தவன்

படம்
ஊர்ப்பக்கம் போனா
பொவொண்டோ வாங்கிவாஎன்பான் 
பன்னீர் சோடா மறக்காம குடி  மாயவரம் தாண்டுமுன் என்பான் 
டிகிரி காபிக் கடைகள்தோறும்  குடித்துப்பார்த்து   அசல் நகல் சொல்லிடுவான் 
பச்சைத்தேநீர்,பால்கலந்தது ,இஞ்சி மிளகு  எதெது எவ்வெப்போது  பட்டியல் உண்டு அவனிடம்  பழச்சாறு கடைக்காரனிடம்  நீரும் சர்க்கரையும் அருகில் நின்று கலந்தால்தான்  திருப்தி அவனுக்கு 
என் வீட்டின் காபி பில்டர்  அவன் தந்த பரிசுதான்  டிகாக்ஷன் பக்குவமும் சொல்லித் தந்தான் 
மதுக்கூடமொன்றிலிருந்து தள்ளாடி வெளியே விழுந்த  அந்த நாளில்  அவனை நான் பார்த்திருக்க வேண்டாம் - அவன் குழந்தையோடு 

கமலஹாசனின் ரசிகைகள்

படம்
ஒல்லிக்குச்சி கமல்
அவள் ஒரு தொடர்கதையில்
எச்சில் விழுங்கிப் பாடுகையில் ரசித்தவள் 
மெச்சி அக்கா... சப்புன்னு அறைஞ்ச கோபாலக்ருஷ்ணன்
கீதாவின் பிரியன் நினைத்தாலே இனிக்கும் மைக்
சிம்லா ஸ்பெஷல் மைக்
சேர்ந்து பாட முடியா வருத்தம் பூரணிக்கு வில்லனாக்கி விட்டதில்
பாரதிராஜா மேல் கொலைவெறி
சிகப்பு ரோஜா பார்த்த கிரேசிக்கு சான்சே இல்ல -இந்த வார்த்தை
அப்போது புழக்கத்தில் வந்திருந்தால்
ராஜபார்வைக்குப்பின் தேவி
இதைத்தான் சொல்லித் திரிந்திருப்பாள் சரோஜினியின் கணவன் குள்ளமாக இருந்ததில்
பிரச்னை ஏதும் தெரியவில்லை
அப்புவுக்குப்பின் குருவின் காலத்தில்
தொங்குமீசை விரும்பிய
சச்சு அக்கா புரிந்துகொண்டாள்
சுருண்ட மீசைக்காரன் பின்னால்
விமலா சுற்றியதை -
அது தேவர் மகன் விளைவு என்று.... கனவுகளைப் பங்கிட
யார் யாரோ வந்தபோதும்
"கமலாசனின் "ரசிகைகள்
இருந்துகொண்டே இருந்தார்கள்
படங்களை வெட்டி ஒட்டியபடி...
பாடல்களை முணுமுணுத்தபடி...
சண்டை போடும்,சங்கடப்படும் ,
சங்கடப்படுத்தும்
கமல் ஹாசன்களையும் ரசித்தபடி....

சக உதிரிகள் அல்லது சாமான்யர்கள்

படம்
இழவு வீட்டிலும் 
பிணமாகக் கிடக்க வரம் கேட்கும்  "முன்னிலை"யாசகர்களின் உலகில்  அவன் நுழைந்ததேயில்லை.....
கிடைத்தது தின்று  கிடைத்ததில் வாழ்ந்து  கிடைத்த வழியில் சாவான்  விருப்பத் தேர்விலாமல் ... . இடிந்து குலையும் கட்டிடம்  கவிழும் இரயில்  வெடிக்கும் குண்டு  எங்கும் ஒப்புக் கொடுத்தபடி  உதிர்கிறான் ...
உதிரி மனிதன் ஒருவனை  குப்பைக் குள்ளிருந்து  மீட்டெடுக்கும் மஞ்சள் தொப்பிக்காரன்  காமெராக் கண்கள் தின்ன  அவனை அனுப்பியவாறே  தானும் உதிரி சாம்ராஜ்யப் பிரஜையே  எனச் சொல்லாமல்  நகர்கிறான்  இன்னொரு காலோ கையோ 

தேடியபடி... 

இல்லாமல் இருப்பதுவும் இருப்பு

படம்
என் பெயர் எனக்கானது என்றிருந்தேன்
பெயரின் சுருக்கம்,குறுக்கம்
எதுவும் பெருமையோடு ஏற்றிருந்தேன்
பெருமைகள் பெயருடையதா
என்னுடையதா
பிரித்தே அறியவில்லை
பிறிதொருநாள் என் பெயர் சொல்லி
எவரோ அழைத்தது
எவரையோ
என்றறிந்தபோது
அது எனதானது மட்டுமில்லை
என்றானபோது
நான் என்று உங்களிடம்
எதை அறிமுகம் செய்வது
நான் என் பெயரிலும் இருக்கலாம்
 இல்லாமலும் இருக்கலாம்

வாய்ப்பினால் ஆனது

படம்
அச்சத்தின் துளிகளால் எனது பெருங்கடல் தளும்பிக்கொண்டிருக்கிறது. எப்போதும் வறண்டுபோகும் வாய்ப்புடன் அமுதம் ஒரு குட்டையில் .. அமுதம் பருகக்கூடிய வாய்ப்பை அலையாடிக் கொண்டிருக்கும் கட்டுமரத்தின் திரைச் சீலையில் முடிந்திருக்கும் சாவி கிட்டியவுடன் திறப்பேன் என்கிறான் அங்கே தூண்டிலோடு திரியும் கிழவன். எனக்கோ அவன் தனது ஓட்டைக் குவளையில் நிரப்பியது போக மீதமிருப்பது அமுதக்குட்டையின் கானல் நீரே என்றஎண்ணம். கட்டுமரம் அசைந்துகொண்டிருக்கிறது அசைவின்றித் தூண்டிலோடு குந்தியிருக்கிறான் கிழவன் 2014 ஆகஸ்ட்  11 திண்ணை இணைய இதழில்

சார்த்திய கதவு

படம்
இருகரமும் விரித்து நடந்தேன்
எல்லோரையும் தழுவிக் கொள்ளவும்
ஆதுரமாய்த் தலைகோதவும்
பாராட்டி வழித்துத் திருஷ்டி கழிக்கவும் 
ஆறுதலாய்க் கன்னம் தட்டவும்
முதுகு தடவிப் பாரம் இறக்கவும்
தோதாக இருக்கட்டுமென
இருகரமும் விரித்துதான் நடந்தேன்…
என் கையில் தராசு வந்தது எப்போது ?
சல்லிசாய்க் கிடைக்கும் வம்புகளும்
சரமாய்த் தொடரும் அம்புகளும்
நாணயக் குறைவான நாணயங்களும்
வாசனை நோட்டுகளும்
வசதியான எடைக்கற்களும்
மாறி மாறி உட்கார்ந்திருக்கும்
இந்தத் தராசே என் கையாகிப்போன
நொடி எது…
நிறுத்தலே வாழ்க்கையா ?
வல்லமை இணைய இதழில் செப் 5 2014

ஒன்றாக என்றால் ஒன்றாக இல்லை

படம்
டயர் உருட்டியபடியே 
வாய்ப்பாட்டைத் தப்பாய்ச்சொல்லி 
என்னிடமே குட்டு வாங்கிய 
மண்ணெண்ணெய் வண்டிக்காரர் மகன் ரவி 
ஒன்பதோடு ஒதுங்கி 
மார்க்கெட் தாதா ஆகிவிட்டான்...

இறங்கும் காற்சட்டையை
இழுத்துவிட்டவாறே 
நோட்டு சுமக்கும் துரை 
லாரிஷெட்டில் அண்ணனோடு ..

பின்னலைத் திருகாமல் 
பேசத்தெரியாத வசந்தியிடம் 
சீனிசாரின் பிரம்பு விளையாடியபின் 
அவள் கல்யாணத்தில்தான் 
பார்த்தோம் 
பத்தாம்வகுப்பு பி பிரிவு சார்பில் 
குங்குமச்சிமிழ் பரிசோடு ...

சீதர் என்றே அறியப்பட்ட ஸ்ரீதர்
தப்புக்கணக்கிற்காக  
 மைதானத்தில் முட்டிகசிய 
சுற்றிய நாளிரவு 
பதினைந்து ரூபாயோடு ஓடிப்போனான்...

முன்னாள் மாணவர் சந்திப்புக்கு 
மெல்லவும் ,துப்பவும் தெரிந்து 
மிட்டாயோடு வெளியேறிய 
இருபத்து ஏழுபேர் கூடினால் 
போதுமென்கிறார் 
இப்போதைய தலைமை ஆசிரியரும்......

படம் -இணையம்

பிட்சாந்தேஹி

படம்
கவனம்பதியாப் 
பாடலின் நடுவிலும்  ஒற்றை வயலின் இழுப்பில்  உயிர் துளிர்க்க வைப்பவன் 
பெயரறியாத் தெய்வத்திற்காக சம்பங்கிப் பூக்களை  நெருக்கித் தொடுத்துக் காத்திருப்பவன் 
மலிவுவிலைத் துப்பட்டாவிலும்  கவின் சித்திரம் பதித்தவன் 
நாற்பது ரூபாய்த் துண்டுப் பாவாடை  நாலுமுழம் அரளியிலும்  உங்கள் வேண்டுதல்களுக்காகக்  தேவியை  ஆவாஹனம் செய்துவைப்பவன் 
நிமிடங்களில் கடக்க இயலாமல்  நாசிமூடி நகரும்  தெருமுனையில்  நாள்முழுதும் நின்றபடி  திடமானதொரு தேநீர் கலப்பவன்  
யாரோ வாங்கவோ, புறக்கணிக்கவோ போகும், பழச்சுளைகளின் மேல் கவனமாக  பாலிதீன் போர்த்துபவன் .....
நம்பிக்கையுடன் வாழ  இன்னும் இருக்கிறது உலகம் 
23 7 14 ஆனந்தவிகடனில் வெளியான கவிதை

அபி உலகம்-நீண்ட இடைவெளிக்குப் பின்

படம்
வாசல் முருங்கையின்
வலுவில்லாத கிளைகளில்
கூடு கட்டியது  பறவை
வழக்கம்போல் பூ உதிர்க்கப் போன
அபியிடம்
அம்மா உச்சு கொட்டினாள்..
ஏம்மா ..
பாவம் அபி ..அந்தக் கூடு
கலைஞ்சுரும்
கலைஞ்சா என்ன
நம்ப வீடு மாதிரிதானே
அம்மா ..அது கூடு கட்டும்போது
நீ பார்த்தியா
ம்ம்...கொஞ்ச கொஞ்சமா குச்சி வெச்சு
ரெண்டு நாளாக் கட்டுச்சு அபி....
நீ மோசம்மா....
ஏண்டா....
பாத்துகிட்டே சும்மாதானே இருந்தே ...
சொல்லியிருக்கலாம்ல...
என்ன அபி  பூ உலுக்குவான்னா....
இல்லம்மா...நம்ப வீடு கட்டும்போது
அப்பாகிட்டே
சிமென்ட் பாத்து வாங்கச் சொன்னீல்ல

என் தோழி

படம்
ஜூலை 7 அதீதம் இணைய இதழில் 
பட்டாம்பூச்சிகள் இங்கேதான்
சுற்றுகின்றன.
மஞ்சள் கறுப்பி ,ஆயிரம் குட்டி
போட்டிருப்பாள் போல…
அவளைக் கொண்டாடி
ஒரு நூறு கவிதை எழுதியிருப்பேன்…
அவளோடு நடப்பெல்லாம்
ஒரு தோழி போல் பகிர்ந்திருப்பேன் ..
நகைச்சுவைத் துணுக்குகளை
வாசித்துக்காட்டி சிரித்ததும் உண்டு …
எனக்குப் பிடித்த பாடலை
கள்ளக் குரலில்
பாடிக்காட்டி அபிப்பிராயமும்
கேட்டிருக்கிறேன்…
அவள் வலப்பக்க பூ தாவினால்
பிடிச்சிருக்கு…
இடப்பக்கமென்றால் சரியில்லை…
எல்லாமே கழிந்த நாட்களில் நிகழ்ந்தவை….
இப்போதுகூட
மகளின் மழலையர் வகுப்பு
வண்ணப்படமே நினைவுகளைக் கிளர்த்தியது..
ஒரு வண்ணத்துப்பூச்சியின்
ஆயுள் குறித்த அறிவியல் உண்மை
சொல்லாமல்
என் மஞ்சள் கறுப்பியைத் தேடித் தருவாயா
அவளை மறந்து
அனாதையாய் விட்டதற்காக மன்னிப்புக் கேட்கவேனும்…
**

ஜெயமோகனுக்கு எதிரான பெண் படைப்பாளிகளின் கண்டன அறிக்கை

படம்
வணக்கம்

எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல் மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின் சிந்தனைப்போக்கையும் வரலாற்றையும் மாற்றியமைத்தார்கள். அத்தகையசக்திவாய்ந்த எழுத்தானது அடிப்படைவாதிகளது இருப்பிற்கான களமாக அமைந்துவிடும்போது, அந்தச் சமூகமே சீரழிந்துபோகும் கெடுவாய்ப்பு இருக்கிறது. அந்த இழிநிலையை நோக்கி தமிழிலக்கியம் நகர்ந்துகொண்டிருக்கிறதோ என்ற அச்சங்கலந்த ஐயம், அண்மைக்காலமாக சில இலக்கியவாதிகளது பொறுப்பற்ற பேச்சினால் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுள், ஜெயமோகன் செய்துவரும் இலக்கிய மேட்டிமைத்தனங்கள் சொல்லுந்தரமற்றவை.அதிகாரத்தரப்பை உயர்த்திப்பிடித்தல், சிறுபான்மையினரைத் தரந்தாழ்த்துதல், பிறமதங்கள்பால் சகிப்புத்தன்மையற்று இந்துத்துவத்தை முன்னிலைப்படுத்தல், இடதுசாரி சிந்தனையாளர்கள்பால் காழ்ப்புணர்வைக் கொட்டுதல், வரலாற்றைத் தன் நிலைப்பாடுகளுக்கியைந்தபடி திரிபுபடுத்துதல் இவற்றோடு ஆணாதிக்கத்தின் தடித்தனமும் அவரது எழுத்துக்களில் புரையோடிக்கிடக்கிறது. காலாகாலமாக ஆண்களே இந்தச் சமூகத்தை வழிநடத்திச் செல்லும் மேய்ப்பர்கள் என்ற ஆண்மையவாதத்திலிருந்தபடி தொடர்ந்து பெண…

இன்னொரு மரணம்

படம்
கட்டைல போறவனே  என யாவரையும் கரித்த  பரமசிவம் தாத்தாவை  நகர
மயானம்  காரில்தான் அழைத்தது.
ஈட்டாத செல்வம் முகூர்த்த நாள் மரணம்  பூஇறைக்காத  துப்புரவான பயணம் தாத்தாவுடையது 
சமைக்க அலுப்பான  ஏதோ ஒரு இரவு போலவே  மயானத்திலிருந்து திரும்புகையில்  பக்கத்துக்கு வீட்டில் நாதஸ்வரமும்  மேசைமேல் பரோட்டா பார்சலும் 
"போனா இப்பிடிப் போவணு ம்"  "பொசுக்"கென்று முடிந்த வாழ்வை  எடுத்தபின் வந்த அத்தை  பாராட்டிக் கொண்டிருந்தாள்  குறைந்தபட்சம் -அவளாவது  அழுதிருக்கலாம் இல்லை  சண்டைபோட்டிருக்கலாம் .....

நெஞ்சு இரண்டாக

படம்
ஆடை குலைக்கும் கைகள்
அப்படியே துண்டாக,
நெறிகெட்ட நினைப்பு வந்த
நெஞ்சு இரண்டாக,
தொட்டதும் தலைவெடிக்க,
தொடருமுன்
தொடைகிழிக்க
அவளுக்குப் பலம் தரவோ
அடுக்காக வரம் தரவோ
ஆரு சாமி இருக்கீங்க ..

குழந்தைப் பருவத்திலேயே
குறுவாள் கொடுத்திடவா...
தவழும்போதே
தற்காப்புக் கலை சொல்லவா..

பேன்,சிரங்கு பெருமையோட
பழஞ்சட்டை வாசத்தோட
காயும் வயித்தோட
கண்ட வழியோடும்
வறுமைக்குப் பொறந்த மக்கா
இத்தனையும் தாண்டி இத்துப்போன உன் உடம்பு
என்ன தருமுன்னு வந்தான்
வந்தவழி மறந்த நாயி... —

வலியின் தோற்றம்-3

படம்
பசுமையான காட்சி 
விரியும் மலர்
கனிந்த முகம் 
நெகிழ் குரல் 
கடலும் வானுமான நீலச் சங்கமம் 

வர்ணக் குழம்பை விசிறும் கதிர்
சர்க்கஸ் கோமாளிபோல் வளைந்து தொங்கி
கவனம் கேட்கும் மேகம்
ஜன்னலோரக் காற்று
குறும்புக் குழந்தை ...

கண்ணுக்கும் மனதுக்கும்
குறுக்கே மறிக்கிறது
வலி

வலியின் தோற்றம்-2

படம்
நான் சொல்லாததை 
எது சொல்லிவிடும் 
பாவனைகளில் வெளிப்பட்டுவிடாதபடி 
பயின்றிருக்கிறேன் 
வெளிச்சம் அருகிருப்பதாகவும்
நம்பிக்கையிலேயே ஆக்சிஜன்
உற்பத்தியாகும் என்றும்
புன்னகையால் பசியை அடக்கவோ,கடக்கவோ
முடியுமென்றும்
என் சொற்களால் உன்னையும் உணரவைப்பேன்
ஆனால் ...என் வலியை.....

வலியின் தோற்றம் -1

படம்
உடல் மொழியில், வாய் மொழியில்,
ஒரு தலையசைப்பில் ,
உன் இதழ்க்கடை நெளிவில் 
எப்போதோ பிறந்துவிட்டிருக்கிறது இது 
அணுவைத் துளைத்த கடலானதும்
ஒரு கடல் ஏழு ஆனதும்
எப்போதென்று தெரியவில்லை...
ஏழோடு நிறைந்துவிடும்
என்பதே இப்போதைய நம்பிக்கை

வீதி நாடகம்

படம்
அவள் வாளைப்
பாடநூலில் பார்த்திருக்கிறாள்...
கத்தி..சமையலறையில் 
அரிவாள் தேங்காய் உடைக்கவும் 
வேலிக்கொடியைக் கழித்துவிடவும்....
துப்பாக்கி தம்பியின் தீபாவளி...

உச்சிமுடி பிடித்திழுத்து
தெருவோரம் மிதிப்பவனுக்கு
எச்சில் போதும்
அவள் தூய்மையைக்
கூண்டிலேற்றும் சொற்களுக்கு
எதிர்ப்பதமும் தெரிந்தவள்தான்...
முகம்சுளித்தபடி ஒதுங்கும்
மகளின் நாகரீகம்
ஆயுதம் தரவில்லை
அவனோடு சேர்ந்து மிதிக்கிறது
அவமானமும் அழுத்தமும்

புன்னகைக்கு மணமுண்டா ..

படம்
உனக்கு வியப்போ ,எரிச்சலோ, வரலாம்.... ஆனாலும்,இதற்கு விடை தா.... ரூபியின் புன்னகையில்  சமையலறை தாளிப்பு வாசமும், அம்மாவின் புன்னகையில்  கவலைகளின் கசங்கிய வாசமும், தேவாவுக்கு இழப்பின்  அழுகல் வாடைச் சிரிப்பும், ரஞ்சியிடம் பொறாமையின்  மழுப்பலான குப்பைநெடியும் , உணர்ந்தேன்  என்றாயே.... என் இதழ் உதிர்ப்பதில்  நீ உணர்ந்ததென்ன 

அங்கீகாரத்தின் குரல்

படம்
நான் பேசாமல் என்னோடு 
பேசிக் கொண்டிருந்திருக்கலாம் 
பேசாத உன்னோடு பேசிக் கொண்டிருப்பதாய் 
மட்டுமே புரிந்து கொண்டு 
கேட்காத உன்னோடு பேசிக் கிடந்திருக்கிறேன்
என் துயரெலாம் இப்போது
என்னைப் பற்றியே அல்ல
ஏந்திக் கொள்ள யாருமின்றி
சுவரில் மோதித்
தரையில் புரண்டுக்
காற்றில் கைவிரித்தழும்
என் சொற்களை
எப்படி ஆறுதல் செய்ய.....

-லதாம்மாவின் மரணம்

படம்
நான் ஏறிய பேருந்து,
அடுத்த தெருப் பள்ளிக்கூடம் , எங்கும் ஒட்டப்பட்டிருந்தது  அந்தக் கண்ணீரஞ்சலி சுவரொட்டி ...
முட்டைக் கண்ணன் என்றோ, தனா என்றோ கூப்பிடப்பட்ட  லதா அண்ணன் அதிலே  தனபால் ஆகியிருந்தான்...
வருந்தும் பா தனபால் குடும்பத்திற்குள்  லதாவும் அடக்கம் என்றும் தெரியவில்லை, லதாம்மாதான்  ஆதிலட்சுமி என்றும் தெரியவில்லை
பறக்கும் தலையும் மூளிக்காதும், தாம்புக் கயிறுமாகவேதிரிந்த  லதாம்மாதான்  கொத்துச் சங்கிலியும்  குறிப்பாகப் புன்னகையுமாகச்  சுவரொட்டியில் பார்க்கிறாள்  என்றும் தெரியாமல்தான்  அன்று கடந்தேன் என்பதைச் சொல்லித்  துக்கம் விசாரிக்கலாமா ..... 

7 5 14-ஆனந்தவிகடனில் வெளியானது.

சில நூறு கிலோ மீட்டர்களும் கொஞ்சம் மைல் கற்களும்-எஸ் வி வேணுகோபாலன்

படம்
டார்வின் படிக்காத குருவி நூல் வெளியீட்டு நிகழ்ச்சி குறித்து எழுதிய பகிர்வு கவிதைக்கும், கவிதை தொகுதிக்கும் தலைப்பு வைப்பதில் பெண் கவிஞர்கள் நேர்த்தியான கவனம் செலுத்துபவர்கள். உலகப் போர்களுக்கு ஆண்களே காரணம் என்று இடித்துரைக்கும் நோக்கில் ரஷ்ய கவி அன்னா அக்மதோவா  தமது படைப்பு ஒன்றுக்கு எம் டபிள்யூ 2 என்ற தலைப்பிட்டார் ! கிறிஸ்துமஸ் தாத்தா பற்றித்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். சாண்டினியா கிளாஸ் என்று கிறிஸ்துமஸ் பாட்டியை உருவகப்படுத்தினார் பெல்லா அக்மதூலினா.  அலுவலக மனைவி என்ற தலைப்பில் கவிதை ஒன்றைப் படைத்தார்அன்னா மேரி. இப்படி தலைப்புகளிலேயே கலகக் குரல் எழுப்பும் பல பெண் படைப்பாளிகளைப் பார்க்கிறோம். கவிஞர் உமா மோகன் அவர்களது டார்வின் படிக்காத குருவி என்ற தலைப்பும் அப்படித்தான்...பரிணாம வளர்ச்சி குறித்து அறியாத குருவி என்றும், டார்வின் படிக்க விடுபட்ட குருவி என்றும் வெவ்வேறு பொருள் தரும் தலைப்பு அது. காணாமல் போய்க் கொண்டிருக்கும் உயிரினம் பற்றிய அற்புதக் கவிதை அது.  சொல்லவரும் சமூக அதிர்ச்சிக்கு ஏற்ப பயன்படுத்தப்படும் சொற்கள் இவை என்றார் ஆயிஷா இரா நடராசன். 
ஜனவரி 11 அன்று பாண்டிச்சேரியி…