மனசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, அக்டோபர் 14, 2018

உடைந்தது

உங்கள் தெருவிலும்
கேட்டிருக்குமே
உங்கள் மூதாதைக்
காலத்தின் நீலத்தில்
வானத்தை மாற்றுபவன் குரல்
அதற்கு முன்னர் வந்தானா
பின்னரா
கடலை மாற்றுகிறவன்
உடைந்தது எதுவாயினும் பற்றவைப்பேனென்று
நேற்று ஒருவன் கூவியது கேட்டீரோ

என் அம்மை 
மனசைக் கையிலெடுத்துக்கொண்டு 
வாயிலுக்கும் உள்ளுக்குமாக
நடந்துகொண்டிருக்கிறாள்
வந்தால் சொல்லுங்கள்

ஞாயிறு, ஜூன் 09, 2013

புத்தனும் நானும்


வனமலர்கள் சில மலரக் கூடும்
வெடிப்பெலாம் குழம்ப
குளம் நிறையக் கூடும்...
ஓடியாச் சுள்ளிகளோடு
உயர்ந்து நிற்கும் மரம்
பசிய துளிர்களின் வாசத்தைத்
தானே தலையசைத்து
ரசிக்கக்கூடும் ....
விசும்பின் துளி வீழும்
தேவகணத்தைத் தொடரும்


இந்த வரிசையில்
தேவனுடையதோ-
சாத்தானுடையதோவான
கனியும் கிடைக்குமென ...


கிடைக்குமென
காத்திருக்கிறான்
பாசி படர்ந்த புத்தன்.....
பாசி
ஈரத்தின் விளைவல்லவென
நோன்பு தொடங்கு
முன்  யுகத்திலேயே
உபதேசித்தது நினைவிருக்கிறது.

சனி, மே 11, 2013

மன்னித்துவிடுங்கள்..


இது போதும் எனச் சொல்லும்
அதிகாரம் எனக்கில்லை ..
வேண்டும் என்பதும்.....



நானே விலகிடினும்
நிழலைப் படம்பிடித்துக்
கொண்டாட ஏழு பேர் குழு
அமைத்தாகிவிட்டது....


ஒளியின் வீச்சை
உள்ளங்கை மடங்கலில்
பிடித்துவிட்டதாக
அல்பதிருப்தி..


சொர்க்கத்தில் பறவைகள்
இப்படித்தான் சிறகடிக்கும்
என்கிறான் -தானே
 தானியம் இறைத்தவன்போல் ...


ம்ஹூம் 'என்பதை
ம்'என்றும்
'ஐயோ'என்பதை
'ஆஹா'என்றும்
மொழிமாறாட்டம் நடத்துகிறது
நாவு..


ஆன்ம ஒளி குறித்த
சொற்பொழிவாற்றத் தயாராவதால்
கடவுளுக்கு
இன்று நேரம் தர இயலாது

ஞாயிறு, டிசம்பர் 30, 2012

அறிவாய் செறிவாய்..


நீலமென்றோ...
மஞ்சளென்றோ ...
சிவப்பு என்றோ..
அறுதியிட முடியா
வண்ணக்குழம்பின் கரையில்
நின்று
இவளுக்கு நிறம் தேறத் தெரியுமோ...?
தொக்கிய கேள்வியும்
மக்கிய மனதுமாய்ப்
பார்த்திருக்கிறேன் ...
லாவகமாய்த்
தூரிகை பிடிக்கிறாய்..
வாழி மகளே !

செவ்வாய், டிசம்பர் 25, 2012

தவிப்பின் குரல்

பேசு..பேசாதே..
உன் கண்ணும்  மறைத்திருக்கலாம் ..         
பொட்டு வை..வைக்காதே..
சிறிது,பெரிது,...நீளம்..குட்டை..
உன் மேலாடை ,ஆபரணம்..
பழசு புதுசு..,
மாறு..,மாறாதே..,
சிரி.. பல் தெரியவேண்டாம்...
இருள் தவிர்..
ஒளியும் தவிர்..,

எதையும் சொல்லுங்கள் கேட்கிறேன்..
எந்த வயதில்,இடத்தில்,
நலம் அழிக்க வாய்ப்பிலாத
பத்திரம் தருவீர்..?

வியாழன், அக்டோபர் 11, 2012

அபி உலகம் -10

சாலை தாண்டி ஓடித் திரும்பும் 
அபியைத் திட்டுவதா ,
பத்திரமாக மீண்டதற்கான 
பெருமூச்சோடு 
அணைத்துக் கொள்வதா 
எனத் திகைத்திருக்கும் 
அம்மாவை 
மேலும் குழப்புகிறாள் 
அந்தக் காலிமனையில் 
கொத்தித் தின்ன ஏதுமற்று 
ஏமாந்து திரும்பும் 
காக்கைகளிடம் 
காட்பரிஸ் பகிர்ந்து 
திரும்பும் அபி...

செவ்வாய், அக்டோபர் 09, 2012

ரெட்டை வரி நோட்டு




இருளின் முற்றுப்புள்ளி 
வெளிச்சத்தின் 
தொடக்கப் புள்ளியாய் 
இருந்திருக்கலாம் .
ஆனால்..
இருளின் நீள அகலத்துக்குள் 
இடுங்கிப்போன 
வெளிச்சத்தின் முற்றுப்புள்ளியும் 
அதுவானதால் ,
காற் புள்ளிகளோடு  கதைத்தபடி 
இருளின் வரி நீண்டு கொண்டே .....
 உங்களால் 
அதனிடம் ,முற்றுப்புள்ளியை 
நினைவூட்டமுடியுமா ?

செவ்வாய், அக்டோபர் 02, 2012

ஒரு குடம் தண்ணி ஊத்தி....

கீற்று இணையத்தில் இன்று 

                                                                  

கவிழ்ந்த தென்னங்கீற்றாய் 
விரிந்த பஞ்சுத்தலை கோதி
கால் நீட்டிக் கிடக்கும் 
கிழவியைப் 
போகவரப் பார்த்திருக்கிறேன்...
ஒருவேளை 
இவள் அறியக் கூடுமென ,
ஒருநாள் கேட்டேன் 
புதிய வீட்டின் 
வாசலோரப் பூஞ்செடிகள் 
எத்தனைகுடம் 
நீரூற்றியும் 
ஒரு பூ கூட பூக்காததன் 
மர்மத்தை..!
தளும்பத் தளும்ப 
நீர் நிறைந்திருந்த 
குளத்துக்கு
குடங்கள் போதாதென 
வன்மமாய்ச் சிரித்தாள்...
மனநிலை பிறழ்ந்தவளோ
என நழுவியபோது 
பின்னால் சொல்லிக்கொண்டிருந்தாள்
வீடுகளாகிவிட்ட 
குளக்கரையில்,வெகுகாலமாய் 
கூட்டிய செங்கல்லினுள் சிற்றகலாகக் 
காவலிருந்த 
பேச்சி 
தான்தானென்று...!

MY SONG.... MY STORY..-1


மீள்பகிர்வு 
                                                     

தேநீர்க்கடையின் 
பண்பலைப்பாடலையோ,
தேநீரையோ-சிலாகித்தபடி 
நீங்கள் கூடியிருக்கையில் 
மௌனமாகச் சில்லறை தந்து 
விலகிப்போகும் 
அவனும் ஒரு பாடலாசிரியன் என 
உங்களுக்குத் தெரியாது ..
அவன் தெரிவிப்பதுமில்லை...
மிகுந்த பிரயாசையோடு 
அவன் எழுதிய வரிகளை 
கருவிகள் விழுங்கியதை -
அவன் பொறுத்துக் கொண்டான் 
வெற்றிக்குப்பின்னான 
ஒரு நேர்முகத்தில் 
தான் தாண்டியதான சவால்களில் 
சொல்லிக்கொள்ளலாம் என்று...!
எவர் பெயரும் போடாது
 ஏதோ ஒரு படத்தின் பின்னொட்டாய் 
வந்த பாடலை 
நூறாய் அழுத்தும் கள்ளத்தகடுகளும் 
ஏந்தவில்லை...
அவன் எழுதிய அந்த ஒற்றைப்பாடலை 
பெயர் சொல்லாமல் யாரேனும் 
முணுமுணுத்தால் கூடப் போதும்.
யாரோ போல் இவனே கேட்டும் 
இருப்பில் இல்லாததாய் 
வானொலிகளும் மறுத்துவிட்ட 
அவன் பாடலை நீங்கள் 
அறிவீர்களா?

சனி, செப்டம்பர் 29, 2012

விலங்கியலார் கவனத்திற்கு

மீள் பகிர்வு 

சிறகிருப்பதாக                                               
சொல்லியிருந்தார்கள்
அதனால்
தான் பறவையாய்இருக்கலாம்
என நினைத்தது .
ஒருநாள்
இறகுகளால் கோர்த்த
சிறகைக்காணோம்
கல்லாய் இறுகிய
பாறை இருந்தது ....
சமயத்தில்
பறக்க முடிகிறதே என
பரிசோதித்தபோது
சக்கைகள் சேர்ந்த
தக்கை தெரிந்தது ....
வளர்ச்சியா?
மாற்றமா?
வளர்சிதைமாற்றமா?

வியாழன், செப்டம்பர் 27, 2012

தங்க வேட்டை !



   
மீள் பகிர்வு 



நெற்றிச்சுட்டி
...........................                                     
தோடு ..ஜிமிக்கி ...
மாட்டல் ....,
சங்கிலி ,நெக்லஸ் ...
...........................
.........................
..........................
வளையல் ..மோதிரம் ,
..........................
.........................
.........................
விளம்பரத்தாளை
வைத்துவிட்டு
எழுந்த  தமிழரசி 
காது .மூக்கின் 
வேப்பங்குச்சி மாற்றினாள்ll   lllllllllllllllllllllll
குறிப்பு!
கோடிட்ட இடங்கள்
அவளுக்குப்பெயர்
தெரியா நகைகள் ....

புதன், செப்டம்பர் 26, 2012

MY SONG...MY STORY...2





அவன் பாடிய 
அந்த இரு பாடல்களையும்,
உரக்கப்பாடிடவும்,
முடிந்தால்-ஆடவும் 
தீராத ஆவல் கனன்றபடி அவன்....
ஒரு குத்துப்பாடலும்,ஒரு கானாபாடலும் 
பாடிப் பிரபலமடையாதிருந்த 
அவனை 
நீங்களும் அறிவீர்கள் ..
பிரமாதமான பக்திப் பாடகனாக ...
எந்த மேடையிலும் ,
தன விருப்பமாகவோ,
நேயர் விருப்பமாகவோ 
தன பாடலிரண்டையும்
பாடவே முடியாது போன 
அவன் 
குளியலறைக்குள் முயன்றபோது 
அதுவும் 
பக்திப்பாடலாகவே தொனிக்கிறது ... 

செவ்வாய், செப்டம்பர் 18, 2012

வழியும் நிழல்கள்


ஒட்ட நறுக்கியபோது 

சட்டமிட்டிருக்கலாம்...

ஓரப்பிசிறுகள்

வழிய வழிய ...

முக்கோணம்..

நீள்சதுரம்...

செவ்வகம்...கோளம்... 

விரிந்து,வளர்ந்து,வளைந்து .....

கொண்டேயிருக்கிறது 
.........................
நிழல்!

நறுக்கிய நிழல் 
உற்சாகம் கொப்பளிக்க உயர்ந்து 
தலைக்குமேல் 
சிரிக்கும்போது,
சிறுநடுக்கம்....

தள்ளிவிட்டும் சிரிக்குமோ...?

செவ்வாய், செப்டம்பர் 11, 2012

வலி பற்றிய கதைகள்...

10 9 12  உயிரோசை இணைய வார இதழில் வெளியானது


வலியின் திரவம் 
வழிந்தோடியது...

காய்ந்த கோடுகளின் 
அடையாளம் 
வரி வரியாய்ப் படிந்திட 
வலியின் கதைகளைப் பேசியபடி 
பொழுதுகள் விடிகின்றன...
முடிகின்றன..

நேற்றைய வலியோ ,இன்றையதோ...
சென்ற வருடத்தையதோ..
உன்னுடையதோ,என்னுடையதோ...
சொல்லிக்கொள்ள,
வியக்க,ஒப்பிட...
வலிகள் ஏராளமாய்!

வலி பிழிந்த நொடிக்குத் 
தொடர்பிலாது 
தக்கைச் சொற்களாய் மிதக்கின்றன 
வலி பற்றிய கதைகள்  -

வியாழன், செப்டம்பர் 06, 2012

புல்லின் விசும்பு


 பாறையின் கீழ் 
வேர் விட்டு,
சூரிய சுவாசத்துக்குத் 
தவித்து 
தவித்து ...
த......வி....த்து... 
இதழ் நீட்டுகிறது புல்....
பேரழுத்தங்களையும் 
பிளப்பாய் என்ற 
உன் 
விசுவாசிப்பில் திறந்தது 
புல்லின் விசும்பு...!

சனி, ஆகஸ்ட் 25, 2012

வாழ்வின் தருணங்களை எழுப்புதல்



ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு 
வர்த்தக வளாகம் 
எது வேண்டுமானாலும் 
எழுப்புங்கள்...
தனிமனைகளாகக் கூடப் 
பிரிக்கலாம்.
நோக்கம்போல் செய்யுங்கள்....
சுவரொட்டி ,ஒலிபெருக்கிப் பாடல்கள்,
தட்டிப்படங்கள்,துண்டு விளம்பரங்கள்                   
கோலாகலத் தோரணங்களை 
விலக்கி நுழைவதும்,
கட்டி இறங்குவதுமான உற்சாக முகங்கள்...
வியர்வை ,கசங்கல்,காத்திருப்பு,
தள்ளுமுள்ளு தாண்டி...
கண்ணீரும் புன்னகையும் 
கைத்தட்டலும் சீழ்க்கையுமாய் 
யார் யார் வாழ்வையோ 
அங்கீகரித்த பொழுதுகள் 
அந்த கிழிந்த திரைக்கு 
கீழும் ,
உடைந்த இருக்கைகளின் ஊடேயும் 
உறைந்து கிடக்கின்றன ....
அவற்றை தக்க முறையில் 
அடக்கம் செய்துவிட்டு 
மூடிக்கிடக்கும் 
பழைய திரையரங்கை 
நோக்கம் போல் மாற்றிக்கொள்ளுங்கள் ...
தினமும் காட்சி தொடங்குமுன் 
ஒலித்த 
பழைய பாடலின் எதிரொலி 
தொடர்நதால்
பயப்பட  வேண்டாம் 
மணி அடித்ததும் நின்றுவிடும் 

திங்கள், ஆகஸ்ட் 20, 2012

உன்னோடு போனது துக்கம்



எந்த வீட்டிலும்
பிலாக்கணம் பாடவும் 
எந்தச் சாவிலும் மாரடிக்கவும் 
முன்னே முன்னே போகும் 
அலமேலு ஆத்தா
வாய் கோணிச் செத்தாள்... 
சாராயக் காசு வாங்க 
ஆளில்லாக் கவலையில் 
மகனும்,
சிறுவாட்டு இருப்பு சொல்லாது 
பொசுக்கென்று போன கவலையில் 
மருமகளும்...
வாசல் பெருமாளைப் பட்டினி 
போட வேண்டாமென 
அழுகையை ஒத்தி வைத்தது 
தெரு சனம்..


சனி, ஆகஸ்ட் 18, 2012

எழுதப்படாத நாட்குறிப்பேட்டின் பக்கங்கள்



 வெற்றுவரிகளுக்குள் 
வலி, துரோகம், காமம், 
காதல்,இழப்பு,
சுவாரஸ்யம்,பிரார்த்தனை 
சகலத்துக்குமான 
எழுத்துக்கள் -மனமொழியில்...
நீ கோடுகளாகப் பார்க்கும் 
பக்கங்களுக்கிடையேதான் 
ஆண்டின் மகாநதி 
சலசலத்தபடி ஓடுகிறது 
இதோ பார்...
என் கையின் ஈரம்... -- 

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...