செவ்வாய், மார்ச் 31, 2015

அங்கே ஒரு கண்

திரையிடுக்கில் நின்றபடி 
ஆடிக்காட்டும் மிஸ்சும்
அங்கே ஒரு கண் 
அவையில் ஒரு கண்ணாய் 
ஆடும் குழந்தையும் 
ஆண்டுதோறும் கிடைத்துவிடுகிறார்கள் 
சம்பளம் எப்படியிருப்பினும் 

25 3 15விகடன் சொல்வனத்தில் 

கவிழ்ந்திருக்கும்…


பார்த்த கணத்திலிருந்து 
என் அடிவயிற்றைப் பிசைகிறது
அந்தப்படம்
அழுது வடியும்
விளக்குக் கம்பம் ஒன்றின்கீழ்
தலைகவிழ்ந்து
அமர்ந்திருக்கிறாள் அச்சிறுமி
பசியில் குறுகியோ
சீண்டலில் சாம்பியோ
தனிமையில் வெம்பியோ
அங்கே அமர்ந்திருப்பதாக
விளக்கம் தராதீர்கள்
தயவு செய்து
உங்கள் படத்தை
சற்றே திருத்துங்கள்
அந்த விளக்குக் கம்பத்திற்கு
சற்றுத் தள்ளி
அரையிருளில்
பாத்திரம் தேய்க்கும் ஒரு அம்மா
இல்லை
நீர் சுமக்கும் அக்கா
வெறுமையாய்ப் பார்க்கும் அப்பா
பண்டம் கவர்ந்த தம்பி
அட
எதுவும் வேண்டாம்
ஒரு சோகைப் பூனையோ,நாயோ
கூடப்போதும்
கோபத்திலோ பிடிவாதத்திலோ
கவிழ்ந்த அவள் தலை
எல்லாம் மறந்து
புன்னகையுடன் நிமிரும் காட்சியை
நானே கற்பனை செய்து உறங்கிவிடுவேன்    -மார்ச் 27 20015 வல்லமை 

திங்கள், மார்ச் 16, 2015

தெப்பக்கட்டை

தெப்பம் சுற்றிவந்து கொண்டிருந்தது 
ஒரு பஞ்சுமிட்டாயோடு 
திருப்தி அடையாச் சிறுவர்களின் .,
பார்த்தே நிறைந்த கடைகளைப் 
பிரியப்போகும் சிறுமியரின்., 
வழமையான குழப்பங்களைத் துறந்த
நாட்கள் முடிகிறதே என
தீபாவளிச் சேலையால்
முகம் துடைத்தபடி நகரும் பெண்டுகளின்
மனமே
தன் தெப்பக்கட்டை
என பூச்சரம் ஆட ஆட
...............................................
தெப்பத்தில் அம்பிகையும்
சற்றே கண் கலங்கினாற்போலத்தான் .....

ஞாயிறு, மார்ச் 01, 2015

நகரு அல்லது நகரவிடுநிழல் எனக்குப் பிடிக்கவில்லை
தேவையாகவும் இல்லை
நிழலில் நின்றால்
எனக்குப் பாதுகாப்பு
என நீ நினைக்கலாம்
நிழல்
என்னைப் பத்திரமாக
உன்னிடம் தரும் எனக்கூட நினைக்கலாம்.
போதும்
நிழலில் இருந்தது.
நகரு அல்லது நகரவிடு
வெயிலின் ருசி அறிய வேண்டும்
வெயிலில் இலைகள் மினுங்குவதை,
 காய்கள் கனியத் தொடங்குவதை
சற்றே சுடுவதை,
கதிர் முற்றுவதை
வெயிலில் இருந்து பார்க்கிறேன்
வெயிலைப்பற்றி
நீ அச்சுறுத்தியதெல்லாம் நிஜமாகவே இருக்கட்டும் 

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...