புதன், ஆகஸ்ட் 28, 2013

பிணையாளியாக


நிலவுப் பொழுதொன்றில்
கதவுகள் விரிந்தன...
பிரார்த்தனைகளிலிருந்து கசிந்த
தூபப்புகை
முதலில் வெளியேறியது ,,
தொடுத்தும் தூவியும்
சாற்றியிருந்த மலர்கள்
கிடைத்த தென்றலின்
கால்களை இறுகப்பற்றியபடி
மிதந்து கடந்தன ..
அவற்றின் பெருமூச்சை
நான் கேட்டபடி இருந்தேன்
இந்த வழியும் இந்தக் காற்றும்
போதுமானதில்லை
என்ற என் வார்த்தைகளைக்
கேளாதது போல்
விரைந்து கடந்தன
நான் இசைத்த தோத்திரங்கள் ......

வியாழன், ஆகஸ்ட் 15, 2013

நாம் நான் நீ

 நட்சத்திரங்களைப்  பறிக்கத்
திட்டமிட்டவாறே
சாய்வு நாற்காலியில்
முன்னும் பின்னும் ஆடியவன்
சொல்லிக் கொண்டிருக்கிறான்
இப்போதெல்லாம்
நட்சத்திரங்கள் வெகுதொலைவு
சென்றுவிட்டதாக...


கைப்பிடி செம்மண்ணும்
அகழாமல் விதைத்துவிட்டு 
முளையாப்பயிரின் ரகம்
குறித்த புகாரோடு
அதோ
மோட்டார் சைக்கிளில் விரைபவன்
உங்களோடுதான் தேநீர் பருகினான்...


கனவுகளை விற்பவன்
வாராவாரம் பொதியையோ
அட்டையையோ வடிவையோ
மாற்றுவது வழக்கம்
எனத் துப்பறிந்தவாறே
இவ்வார இலவசம்
என்ன என்றேன் நான்..

புதன், ஆகஸ்ட் 14, 2013

நானும் நானல்ல

 நானொரு விருட்சம், நான் உதிரும் இலை,
மணம் கசியும் சிறுமலர்,
கனிந்து  வீழும்  பழமும் ,
அதனுள் கிடக்கும் வித்தும்
என ஏதோவொன்றாக  சித்தரித்து
வந்தபின்

சுற்றிலும் நெளியும் சர்ப்பங்களைக்
கடக்கவியலா கானுயிர்
ஆனேன் 

நெளிந்து வளைந்த சர்ப்பம் 
பார்த்தபடி கடந்தது வாழ்வு ..

சில நாள் அச்சம்..
சிலநாள் அருவறுப்பு ..
சிலநாள் ஆர்வம்
சிலது வெகு நீளம்
வெகு சிறியது
வெகு அழகு கூட
நிறங்களோ வேறு வேறு
புள்ளிகளும் வரிகளும்
செதில் தீற்றல்களும்
ஒன்றுபோலில்லை மற்றது 


அரவம் பார்ப்பது வழக்கமாகிப்போனபின்
ஒருநாள்
நான்
அமர்ந்திருந்த மேசையில் சிந்தியிருந்த
துளி விஷத்தை
நானே துடைத்தேன் யாருமறியாமல்
அல்லது அவ்வாறு நம்பியபடி...

திங்கள், ஆகஸ்ட் 12, 2013

சிறகின்துயர்..

சிறகு வேண்டுமேயென
வினா எழுப்புவார்கள்


ஒருபோதும் மிதக்கவியலா
கல்மனசுக்காரர்கள் ...

மரகதம்..கோமேதகம்
உயர்நீலம் என்றெல்லாம்
விலைப்பட்டியல் விம்மினாலும்
கற்கள் மிதப்பதும் பறப்பதும்
சாத்யமில்லை  என
சிலிர்த்தபடி
சிறகுகள் பறந்து செல்கின்றன.
ஆன்மாவின் கோபுரத்தில்
அவை இளைப்பாறிச்
செல்வதை  வெறித்தபடி
தேங்காய்ப் பத்தை கடித்துப்
போகிறான் பிச்சாண்டி 


மிதந்தலையும் சிறகுக்கு
மனசென்ற மறுபெயர்
அவன் சூட்டுவதில்லை
பிரபஞ்ச இருளுக்கு
வெளிச்சக் கண்கள் பொருத்திச்
சிறகுகள்
திசையறிந்து அலைகின்றன...
உயரே உயரே...


உயரங்களெலாம் அன்பு சிந்திப்
பொலிவதைப்
பிச்சாண்டியைப் போல
நீங்களும் உணராது விலகுவதுதான் 


சிறகின் நாளைய துயர்....

திங்கள், ஆகஸ்ட் 05, 2013

சில சமயங்களும் சில கடமைகளும்

தாளின்
நிறமும் வனப்பும் நீ தேர்ந்தாயோ


ஒற்றைமலரின்மேலிருக்கும்
பட்டாம்பூச்சி முடிச்சு
யார் கற்பனை...
கத்தரித்துக் குப்பைக்கூடையில்
போடுவதான அல்ப ஆயுளை
சற்றே நீட்டித்தாலென்ன...
பொதியோடு அலமாரியில் வைத்த
பரிசைப் பிரிக்காமலேயே
கொடுத்தவனின் இறுதி அஞ்சலிக்குப்
போன கொடுமை வேறு அச்சுறுத்துகிறது...
நாட்காட்டி,நேரங்காட்டி,
கண்ணாடிக்குள்
அழகெழுத்துக்களில் பூத்தூவி
தத்துவங்காட்டி.....
சச்சதுரத்துக்குள் வேறென்ன ...

பிரிக்காது கைமாற்றவோ
எடுத்தெறியவோ கத்தரிக்கவோ
யோசிக்கின்ற
என்போலன்றி
பரிசை
விலைமதிப்பு சொல்லிக்
கட்ட உத்தரவிட்டபடி
பணப்பையோ கடன் அட்டையோ
துழாவியிருக்கலாம் நீ...

துளி அன்பு அக்கறைக் கீறல்
பரிவின்சுவடு ஏதுமின்றி
நீ வாங்கிய கணத்தின் வெறுமை
காணமுடிந்தால்

நிம்மதியாக யாருக்கும் கொடுத்து
விடுதலை பெறலாம்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...