வெள்ளி, நவம்பர் 20, 2015

முகநூல் துளிகள் -3வனத்துக்குள் துரத்து 
இல்லை சுட்டுவிடு 
சில்லறைக்கு மண்டியிடுமுன்
********************************************
தருவதற்கு ஏதுமிலா வெறும்
அகப்பை 
எரியட்டும்
*********************************
ஒரு நிமிடம்தான் 
நீ நீயாக 
பிறகு 
மற்றும் சிலராகிவிடுகிறாய்
***********************************************
உன் நம்பிக்கையைவிடப் 
பெரிய சிலுவையில் 
யார் அறைந்துவிடப்போகிறார்கள்
*******************************************
ஒரு அழிரப்பர் 
எல்லாவற்றுக்கும் கிடைத்தால்
எவ்வளவோ தெளிவாயிருக்கும்
***********************************************
தெளிவாகவோ உக்கிரமாகவோ 
இருக்கவேண்டியிருக்கிறது...
ஆகப்பெரிய சந்தர்ப்பங்களைப் 
புறந்தள்ள வேண்டியிருக்கிறது..
ஆகமோசமான நிமிடங்களைப் பொறுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது
பார்க்கவும் பாராததுபோல் இருக்கவும்
கேளாததுபோல் இருக்கவும் கேட்கவும்
மறந்து தொலையவும்
சுமந்து திரியவும்
கல்மிஷம்தான்
ஒத்துக்கொள்ளவும் பசப்பவும்கூட
சீ
நடுங்காதிரு

முகநூல் துளிகள் -3
பசி ருசியை
ருசி பசியை
பசி பசியை
ருசி ருசியை
எதையாவது எதுவாவது
வென்றுதான் ஆகவேண்டுமா சனியன்
*******************************************************
வேர் வைத்தியமாகும் 
வேருக்கு ?
*****************************************
எல்லாவற்றையும் எப்போதோ 
சொல்லிவிட 
வாய்க்கிறது உனக்கு 
எப்போதும் இல்லை எனக்கு
*********************************************
கொஞ்சம் உப்பு போடு 
பரிச்சயமான பொய்
எப்போதும் சகிக்காது
******************************************
99.9 சதவீத வாய்ப்புகளில் 
நம் சுத்தம்
நம் வாழ்க்கை 
நம் சிறுமை 
0.1எவ்வவ்வ்வளவு பெரிதாயிருக்கிறது

முகநூல் துளிகள் 2

ஆகப்பெரும் சித்ரவதை
அதை
சொல்லாதிருக்கக் கடவது
அதனினும் பெரிது

*********************************************

பொய்மையின் துளிரும்
அதே
செம்மையோடுதான் அசைகிறது
வேண்டுமென்றால் நினைத்துக்கொள்
நாணம் என
********************************************

நிலாவையும்
இடுங்கிய கண்ணோடுதான் பார்க்கிறாய்
பாவம் வெளிச்சத்துக்கு ஒடுங்கியபிழைப்பு

*************************************************

உரசியபடியே 
வீழ்கிறது சருகு 
தளிர் தடவி ஆடுகிறது காற்று
**********************************************

பேசாதிரு
பாற்பற்களைப்போல்
ஆசையாய்ப் புதைக்கமுடியவில்லை
விழும்சொற்களை

முகநூல் துளிகள்

கலைக்கப்பட்ட சீட்டுக்கட்டுபோல்
கிடக்கிறது வாழ்க்கை
அடுக்கிவிடலாம் எனநம்பித்தான்
உட்கார்ந்திருக்கிறோம்
கள்ளத்தனம் கடவுளும் பண்ணுவானோ

********************************************
தோற்றுத்தான் போகிறேன்
இத்தனைமுயற்சிக்குப்பின்
நான்சிந்தும் புன்னகையை
பிரயத்தனமும் பிரக்ஞையும்இன்றி
அன்றாடம் சிந்தி உதிரும் காட்டுப்பூவிடம்
*******************************

நீருக்குள்ளிருந்து எட்டிப்பார்த்த மீன்
சிரித்துக்கொண்டது
தூண்டில்காரன்
நிலவைத் தின்றுகொண்டிருந்தான்
**************************************

வயது எண்
வார்த்தை சொல்
பிரியம் பித்து
வாதை
உன்போல் பொருள் கொள்வது
**************************************

புரிந்துகொள்ள வேண்டியவற்றின் பட்டியல்
நீள்கிறது எனக்கு
கிழித்தெறிந்த அவன் புன்னகை
உட்பட


திங்கள், நவம்பர் 16, 2015

பொறுப்புத்துறப்பு


நிற்காதா மழைஎன்ற கேள்விக்குப்பின்
வேறொன்றும் இல்லை
எங்கள் குடியிருப்புகளின் உள்ளேயும்நீர்
என்பதற்குப்பின் ஏரிகளை,குளங்களைத் தூர்த்த
யாரையும் குறிக்கவில்லை
நான்குநாட்களாக உணவுஇல்லை
என்பதற்கு மழையை அனுபவிக்கும்
அடுப்புப் பற்றவைக்காத எங்கள் சோம்பலே காரணம்
சாலைகள் அரிக்கப்பட்டுவிட்டது
என்ற விஷயம் விழுந்து மூழ்கி
உங்கள் வருமானத்துக்காகவே
கண்டுபிடித்தோம்
தண்ணீர்பாம்புகளையும்
நிறைந்த ஆறுகளையும்
எங்கள் பிள்ளைகள் பார்க்க
இதுபோல் வாய்ப்பு அரிது
அதனால்தான் உயிரையும்கொடுத்துவிடுகிறார்கள்
பிழைத்தவர்கள் நீச்சல் கற்றுக்கொண்டுவிடுகிறார்கள்
ஒருவேளைமழைபெய்து
ஒருவேளைவெள்ளம்வந்தால்
வீடுமூழ்குமே எனயோசியாமல்
சாக்கடைகளின் கரைகளில்
கட்டிக்கொண்டது எங்கள் பிழைதான்
கரைதாண்டிக்கட்டிய எஜமானர்களும்
மிதக்கிறார்கள்
நாளை படகுபிடித்து
நாங்கள் அவர்கள் வீடுகளுக்கும்
அவர்கள் தங்கள் வேலைத்தலங்களுக்கும்
செல்ல
மழைத்தண்ணீர் சூழ்ந்த ரோஸ்வுட்
கட்டில்களின்மேல் அமர்ந்து
பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்கள்
குளிர்தாங்காத கிழம்கட்டைகளை
நாங்கள் கணப்புகளின் பக்கம்
அமர்த்தியிருக்கவேண்டும்
ஆனால் அந்தஓரத்துச்சுவரும் கூரையும்
தகர்ந்ததால் அது தடைப்பட்டது
பரவாயில்லை
நனைந்த காணாமற்போன
புத்தகங்களைத் தேடும் சிரமம்தராமல்
எம் பிள்ளைகள்
வெள்ளம்கொண்டுசேர்த்த
குப்பை பொறுக்கிப் பிழைத்துக்கொள்வார்கள்
மதியஉணவுக்கென
நீங்கள் ஒதுக்கும்தொகை குறைத்துவிடலாம்
இலவசமாய்க்கொடுக்க
அடுத்தபட்டியல் தயார்தானே

துயரங்களின் பின்வாசல்


மையோ மரகதமோ அய்யோவும்
அதோ அவள்
வயிறெரிந்து கூவுகிறாளே
அந்த அய்யோவும் ஒன்றாகுமா
வீட்டைப்பற்றி நினைவே இல்லாமல்
அப்பன் விழுந்து கிடந்த
சாராயக்கடையிலேயே
தட்டு ஏந்திவருகிறான் ஒருவன்
தம்ளர் பிடிக்கிறான் பிறிதொருவன்
சங்கிலித் தொடர் விளைவு
பற்றிய உங்கள் கோட்பாடுகள்
அங்கே வழிந்து கிடக்கிறது
எவனோ எடுத்த வாந்தியாக
முன்பெல்லாம்
விரைவில் அல்லது எப்போதாவது
எல்லாம் மாறிவிடும்
என்று தோன்றிக் கொண்டிருந்தது
சமீபமாக
எதுவும் தோன்றுமளவு
பொழுது புலர்வதேயில்லை
பாதையோரம் போகும் சிறுமியின்
கைப்பண்டத்துக்கு விளையாட்டாய்
கையேந்துபவனைப் பார்த்து
விரட்டுகிறாள்
அறிவில்ல..பச்சப்புள்ள பண்டத்தப்
பங்கு கேக்குறியே ....
பக்கத்துப் பெட்டிக்கடையில்
நாளிதழின் போஸ்டர்
ஆடுகிறது
டாஸ்மாக் இலக்கு செய்தியோடு

உங்கள் உலகம்

நாட்டு நடப்பு பேசுவீர்களா
வீட்டு நடப்பு வெளிநடப்பா
என்னதான் இருக்கும்
மாலை மங்குமுன் தொடங்கி
இருளை அலட்சியம் செய்து
இடையில் தேநீர்க்கடைவரை சென்றுமீண்டு
மதகடிச் சுவர் அதிரஅதிரச்சிரித்து
மனமின்றி
ஒருக்களித்து நிற்கும் சைக்கிள்களை
உருட்டியபடியும் பேசிப்பேசித்
தீராக்கதைகளோடு
கூடிப்பிரியும்
ஆண்களின் உலகம்
ஆச்சர்யம்,எரிச்சல்,ஏக்கம்
ஏன் பொறாமைகூடத்தான்
எங்கள்காலம் அது
இப்போதெல்லாம் முகநூலில் கூடி
முன்பின்னாய்ப் பேசி
எல்லோரும் சமமென்றே உறுதியாச்சு
ஆனாலும்
ஒற்றைக்கொரு நிமிடம்
எவராவது சொல்லிவிடுகிறீர்கள்
ஏதோவொரு
சாராயப்புட்டியின் பெயரை
விருப்பக்குறியிடும் விரலைஇழுத்துக்கொண்டு
பார்க்காததுபோல்
கடக்கிறோம்
உங்கள் உற்சாக எதிரொலிகளை
உங்கள் உலகம்
இன்றும் தனிதான்
என்ன
எட்டி நின்று பார்த்துச்செல்லலாம்
உரையாடலின் இடம் உங்களுக்கானது
வெளி உங்களுக்கானது

ஞாயிறு, நவம்பர் 08, 2015

குடை என்ற குறியீடு

மழை என்னை விரி என்றது
இருள் என்னை விளி என்றது
நான் முந்தி
நீ முந்தி
ஒரு துயரப்பாடலை
இடை நிறுத்திவிட்டு திடீரென
பெருங்குரலெடுக்கிறது காற்று
முகம் தெரியாதிருப்பதை எண்ணி
சிலிர்த்துக் கொள்கிறது
வேலியோரச் சிறுகொடி
பற்றிக்கொள்ளாமல் விட்டுவிட்ட
குடை
ஆனந்தமாகத் தாவிவட்டமிட்டு
தலைகீழாக மிதக்கிறது
அந்தக்குடைக்குவண்ணமில்லை
மின்னல் அது குடைஎனச் சொல்லியது
அவ்வளவே
உரிமைகோராசுதந்திரத்தின் கீற்று
அத்துணைஅழகாய்இருந்தது
யாரும்எனதென்று
சொல்லிவிடும்முன் நகர்ந்துவிடல்நலம்
நானோ
குடையோ

நினைவ(வி)லை

அந்த நொடியில்
உன்கண் எப்படிஒளிர்ந்திருந்தது
ஒருவிரல் உயர்த்தி
நீ சுட்டிநின்ற காட்சி
அதன் ஒயில்
கடல்பச்சையும் நீலமுமான உன்ஆடை
காற்றில் உயர்ந்துஅலைந்தஅதன்பிரி
சரிகையோ எனத் தோன்றவைத்த
ஒளியின் இழை

உன்இதழில் இருந்த புன்னகை
அன்பின்மிச்சமா
என்பதைத்தவிர
மற்றஎல்லாம் நன்றாகவேநினைவிருக்கிறது

அந்தப்புன்னகை நினைவில்லை
என்றாசொன்னேன்
இல்லையில்லை
புரியவில்லை

திங்கள், நவம்பர் 02, 2015

எரிகிறது எம் வயிறு

கர்ப்பப் புளிப்பெனக் கேட்கையில்
கசியக் கற்றுக்கொள்ளா
கல்லானவன்
கருவின் சுமையழுத்த
இரங்கா நீரால்
சுரக்கும் பாதகனம் பார்க்காதவன்
முதல் வீறலின் தேவகானம்
கேட்காதவன்
குப்புற விழுந்து தலைதூக்கிப்
பார்க்கும் பார்வையில் சொக்காதவன்
ஆயுளில்
ஒரு மழலைத் தீண்டல் பெறாதவன்

இவனெல்லாம் கூட
ஒரு தீச்சுடர்
தொடமாட்டான்
குழந்தையிருக்கும் கூடு கொளுத்த

எங்கிருந்து வந்தீர்கள்
ஒரு தாயின்
கர்ப்பத்திலிருந்து என்று மட்டும்
சொல்லாதீர்கள்
அழுக்குத் திரள்களே

பரிதாபாத் பாதகத்தின் பின்  எழுதப்பட்டது

வளைவு அழகல்ல

தன்மேல் ஏறியிறங்கி விளையாடி
பக்கத்து வாய்க்காலில் நழுவி விழுவது
சாரையா கட்டுவிரியனா

அரைஅடி தள்ளி நிற்கும்
எருக்கு ஏன்கிளையை
இடிப்பதுபோல் நீட்டிக் கொண்டு
பூக்கிறது

கண்ணுக்கெட்டிய தூரம்
படர்ந்து  கிடக்கும் அருகு
இந்த வேர் ஓரத்தை
விட்டு வைத்தால்தான் என்ன

எப்படியும் வெட்டத்தான் போகிறார்கள்
இந்தப்பக்கத்து வாரிசு
இடிக்காமல் மட்டையைப்
பதவிசாக விரித்தால் நல்லதாச்சே

ஒரு புகாரும் கேள்வியும்
இல்லாமல்
வளைவும் சொகுசாக நிற்கும்
பனை ஏதாவது சொல்ல வருகிறதா

மன்னிக்கவும்
அதை நீங்களே கேளுங்கள்


கடந்தகாலக் கதாநாயகி


வந்தாரை வாழவைப்போம்
என
புன்னகையாக ,ஈர்க்கும் பார்வையாக
காந்தக்குரலாக,கொடி இடையினளாக
நாட்டிய நடையாக,
நளின சுந்தரியாக
தெறிக்கும் செந்நிறத்தவளாக
கூர்மூக்கினளாக
அங்கச் செழிப்பினளாக
அடையாளங்களைக் கொண்டு
ஆதரித்த உலகில்
வயதின் அடையாளங்கள்
வாழ்வை மாற்றிவிட
எவரையும் எவரும் அழைக்கக் கூடும்
நகைச்சுவை என்ற பெயரில்
நாறும் சொற்களால்

கலை என்றும் நிலை என்றும்
குழம்பாது
மொழியறியாப் பெண்ணே
அப்படியே கடந்து போ

கமல்ஹாசன் சொல்லாத தீபாவளி
ஈர அரிசி  இடிக்கும் கைப்பாறை,
முறுக்கு உரல் ,பெரிய வாணலி
பூந்திக்கரண்டி ,சல்லடை
இரவல் சுற்றுக்குத் திட்டமிடல்
தூறல் நடுவேயும் ஒண்டி ஒடுங்கி
எங்காவது காயவைத்து
முறுக்குமாவு ,கடலை மாவு
அரைத்துவிட்டால் தீபாவளி ஆரம்பித்துவிடும்
ஆத்தாவுக்கு

சைக்கிளில் சேலை மூட்டை கட்டி
கூவிக் கூவிப் பார்க்கும்
தவணைக்காரர் அப்போவெல்லாம்
கூவவே வேண்டாம்
வரும் நேரம் விசாரித்துக் காத்திருக்கும்
திண்ணைகள்
அவர் கட்பீஸ் கடை போட்டபோது
வாழ்த்திவிட்டு தவணை தொடர்ந்தது

நாலு மணிப் படையலுக்கு
மூன்று மணிக்குத்
தையல்காரரிடம் மல்லுக்கு நின்று
குட்டிப்படைகள்
தூக்கக் கலக்கத்தோடு வாங்கிவருவது
பெரும்பாலும் சீருடையாகவே இருக்கும்

வெடிக்கடை விளம்பரத்தில்
கடை மேல் பெருக்கல் குறி போட்டு
கடல் என்று அச்சிடும் புதுமையை
வியந்தாலும்
மீதவெடிக்கு ஏலம் கேட்கவும்
அதே பின்னிரவுதான் ஏற்றது
அதுவே சொற்ப காசுக்கு ஏற்றது
குப்பை அதிகம் வரும் வெடிபற்றி
அதிகம் எரியும் பூத்திரி பற்றி
கற்ற விவரமெல்லாம்
கவனம்  இருக்கும்

செய்வதில் நாலு முறுக்கு ரெண்டு அதிரசம்
மூணு உருண்டை பகிர்வதே
சவ்வுத்தாள் உறையில்லா ஏனங்களின் காலம்
அட்டைப்பெட்டி இனிப்புகளும்
சாக்லேட் பெட்டிகளும் கனவில் கூடப்
பார்த்ததில்லை

உள்ளூர் லாலா கடைகள் ,வறுகடலை வியாபாரம்
எல்லாம் வீடுகளின் தீனி முடியும்வரை
காற்றுதான் வாங்க முடியும்
திரையரங்குகளின்
கடலைமிட்டாய் ,பொரியுருண்டைக்கும்
விடுப்புதான்

இந்த சீசனில்
சொந்தம் பார்க்கப்போவதும்
சுலபம்
தீபாவளிக்குத் தப்பித்தவறி துணிவாங்கிய
மஞ்சப்பையில்  பொட்டலம் கட்டிப் புறப்படலாம்

பருத்தி சேலைகள் எங்களுக்காகவும்,
நைலக்ஸ் சேலைகள் வசதியானவர்களுக்காகவும்
விற்கப்பட்டன.
வேட்டிகளைப் பற்றி பேச்சே இல்லை
கதரோ ,கரையோ,நாலோ,எட்டோ
போகிறபோக்கில் ...

கமல்ஹாசனும் ,கார்த்தியும்,
காஜலும்,த்ரிஷாவும்
சொல்லாதபோதும்
தீபாவளி கொண்டாடிக் கொண்டே இருந்தோம்இப்பொழுது
சொந்த ஊரிலேயே
பட்டணக் கடையின் கிளைகள் உண்டு
நாலாயிரத்தில் தொடங்கும்
பருத்திப் புடவையை விரித்து
கிரேட் லுக் மேடம் ஹைபை யா இருக்கும்
என்றெல்லாம் கவர்வது
கட்பீஸ் கடைக்காரர் மகன்தான்
சமீபத்தில் பழகிய கழுத்துப்பட்டியை
தளர்த்த முடியாமல் சிரிக்கிறார்
முடிந்தால் வீட்டுக்கு அழைக்க வேண்டும்
நண்பர்கள் அனுப்புவதில்
சுமாரான கடையின் இனிப்புப் பெட்டியில்
ஒன்றைக் கொடுத்து அனுப்பலாம்.

பூனம் பக்கம் பார்க்கவேண்டும்
வேலைக்காரிக்கு புடவை என்றேன்
வழியில் கல்யாண மண்டபத்தில்
எதைஎடுத்தாலும் இருநூறு
பேனரின் நைலான் பாலியெஸ்டர்
விளம்பரம் நினைவூட்டினாள் அக்காஏனம்-பாத்திரம்வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...