கண்காணாவண்ணம் எரவாணத்தில் செருகிவைத்த அம்மாவின் பழஞ்சீலைத்துண்டு
பல்லிமுட்டைகளோடு விறைத்துக்கிடக்க
ஒளிந்து நின்று உதறிச் செருகுபவளாக
ஒருமுறை பிறக்கக்கடவாய்
பழந்துணி தாங்காது
கறை சுமந்த உடையும் காலில் இறங்கும் உதிரமுமாய்
ஒருமுறை அலையக் கடவாய்
கஞ்சிக்கே வழியிலா வீட்டில்
காசேது வழித்துப்போட
பழம்புடவைப் பயன்களில்
இதுவுமொன்று போ போ என்ற விரட்டலில்
குன்றக்கடவாய்
பழந்துணி படிந்த ரத்தக் கவுச்சியில்
குமட்டலும் மனக்குமைவுமாக
வாடக்கடவாய்
நடை நடுங்க தொடை தேய
அழன்ற தோலோடு
உன்போல் திருமுகங்களின்
தெருமுனைச் சீண்டலைத் தாண்டக் கடவாய்
அக்கா தங்கைக்கு மட்டுமல்ல
அடுத்த வீட்டுப் பெண்ணுக்கும்
நாப்கின் வாங்க
இத்தனையும் நினைவில் கொண்ட
இன்னொரு பிறவியும் எடுக்கக்கடவாய்
அப்போது இருக்கும் உனக்கு வேறு வாய்