சனி, பிப்ரவரி 05, 2022

வாழ்ந்தா....

 மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும்

பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும்

ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும்
காக்காய்ப்பொன் சரிகைப் பாவாடைகளையும்
சந்தனக்காப்பையும்
பார்த்துக்கொண்டே இருக்கிறாள்

சாலைக்கு அந்தப்பக்க சிறுமாட அங்காளி

கரிந்து அணையும் தன்
ஒற்றை விளக்கில் எண்ணெய் விட இனி அடுத்த செவ்வாயாக வேண்டும்
என்ற அங்கலாய்ப்பு ஓடுகிறது ஒருபக்கம்

வரப்பிரசாதியாகி விடவும் வரம் வேண்டும்

வழக்கொழிந்த ப்ரியம்

 உனக்கானவர்கள்

உனக்குப் பிடித்தவர்கள்
உன்னைப் பிடித்தவர்கள்
அடையாளம் காண்பதெற்கென்று
நுட்பங்கள் வந்துவிட்டன
முகக்குறிப்பு
சொல்
கைகுலுக்கல் தோளணைப்பு
முதுகோடு இறுக்கிக்கொள்ளல்
குறுஞ்சிரிப்பு
செல்லத்தட்டல்
ஆதுரத்தின் அத்தனை அடையாளங்களும்
வழக்கொழிந்து விட்டனவா
கிளிக்கூண்டின் முன் இறைத்த நெல்மணிகள் போல்
காப்பி பேஸ்ட் காத்திருக்கிறது
பின்வாங்காதே
நிராகரிப்பதன் மூலம் இழந்துவிடுவாய்
பின்வாங்கவே விழைகிறேன்
எனக்கு வேண்டியவர்களை
என்னை வேண்டியவர்களை
கண்டுகொள்ள இந்த சூத்திரம் பிடிக்கவில்லை

இப்படியாகத்தானே


எங்கள் பூசல் நிறைவுற்றது என்று
மயிலிறகு சொற்களால்
வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் இருவர்
கம்பிக்கதவுக்கு வெளியே
உற்றுநோக்கியபடி இருக்கும் காகம்
க்கா என்று குரல் கொடுத்துப் பார்க்கிறது
மயிலிறகுச் சொற்கள்
தலைதிருப்பி ஒரு மந்தகாசப் புன்னகை வீசி அமர
ஆஹா, திரிபுரசுந்தரி
ரௌத்திரத்தை
இப்படி ஒரு உருண்டைச் சோறாக்கிக்
கொடுத்து விடேன் எனக்கும்
அந்தக் காகத்துக்கும்
நாலு பருக்கை போட்டுப் பசியாறிக் கொள்கிறேன்
இரையாத மனசு
இரந்தபடி நாட்கள்

யானை கட்டும் சணல் துண்டு

      அதீதங்களின் மின்னல் வெட்டுக்குள்

முகம் பார்த்துக்கொண்டு

அதீதங்களின் தூறலுக்குள்

நாவை நனைத்துக்கொண்டு

அதீதங்களின் சிறு 'விஷ்க்' வீசலுக்குள்
தலை உதறிக்கொண்டு
சமாளிக்கிறேன்
ஆனால் அதீதங்களை
வாழ்வில் ஒருமுறை மட்டும்தான் காட்டுவாயா
*************************************
ஊருக்குள் நுழையுமுன் அவசர அவசரமாகக் கழுவி விட்டிருக்கிறது மழை
மரங்களும் கூரைகளும்
சொட்டிச்சொட்டி ஜாடையாக சொன்னதை
சிலிர்த்துக்கொண்டு ஒப்புக்கொள்கிறது பசு

பெய்யும்போது நனைந்தால்தானா **************************************
மடித்து மடித்து
அடுக்கி அடுக்கி
அதற்கொன்றும் குறைச்சலில்லை
சரிந்து விழாதபடி
எடுக்கத்தான் தெரியவேயில்லை ************************************
ஆன வயசுக்கு...
நைந்த சணல் துண்டு
இதை வைத்துக்கொண்டு
எத்தனை யானைகளைக் கட்டியாகிறது

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா

 

எப்போதும் சிரித்த முகம்
தெத்துப் பற்களாலும் உங்களுக்கு அப்படித் தோன்றலாம்
சுப்பு அக்காவுக்குப் பாடலை முணுமுணுக்காமல் 
வேலைசெய்ய வராது

சுசீலாவா ஜானகியா சித்ராவா என்றுமட்டுமல்ல
டியெம்மெஸ்ஸா
யேசுதாஸா பாலுவா வாசுவா என்றுகூட பேதமில்லை அவளுக்கு

அடுப்பு மெழுகும் அதிகாலையில் கூட
 ஒரு சாமி பாட்டு பாடுதா பாரு எரும...
காதில் வாங்காமல் தொடருவாள் சுப்பு
' அடி தேவி உந்தன் தோழி'

நள்ளிரவிலேயே இசைத்தட்டை அடுக்கிவைத்துவிடுவாளோ மனதில்

' என்னடா பொல்லாத வாழ்க்கை....
' காற்றில் எந்தன் கீதம்'
அவளே நாயகி
அவளே தோழி
அவளே தத்துவம்
அவளே கொஞ்சல்

ருருரூ...ரூரூரூ... என்று ஆரம்பித்தபோது
அம்மாவுக்கு அழுகை பொத்துக்கொண்டு வருகிறது
இருந்து வாழ வக்கில்ல இங்க வந்து பாட்டு....
ஆங்காரமாய்
குட்டுவைத்த ஒரு கணம் நிறுத்திவிட்டு
மறுகணம் துணியை உதறியபடி தொடர்கிறாள்
' இந்தக்கடல் பல கங்கைநதி வந்து சொந்தம் கொண்டாடும் இடம்'

பித்தமா
பித்தம் தெளிய மருந்தா
அம்மாவைப்போலவே
அவளுக்கும் தெரியாது


சிற்றோவியம்

 

நீலநிற மெழுகு பென்சிலோடு வருகிறாள் பாப்பு
குட்டிக்கையை அசைத்து அசைத்துத் தீற்ற
அட வானம் இதுதானா
ஒரு மிட்டாயைச் சப்பியதும்
சக்தி பிறந்து விட்டது
இம்முறை குட்டிக்கை கடலைக் கொண்டுவந்து விட்டது.
நட்சத்திரத்துக்கு
மஞ்சள் பென்சிலால்
பொட்டு வைத்தாச்சு
மினுங்குதாம்
கைவலித்த நேரத்தில் பச்சைமெழுகு எடுத்து
கன்னாபின்னாவென்று தீற்றிவிட்டு சொன்னாள்
காற்று வேகமாம்
ஆடும்போது மரம் அப்பிடிதான் இருக்குமாம்
நோட்டுப்புத்தகத்தின் பக்கங்களுக்குள்
பிரபஞ்சம் குடியேறியது
இப்படித்தான்
வீடு வரைவதுதான் கஷ்டமாம்
கோடுகோடாப் போட வேண்டியிருக்கு
அலுத்தபடி
மூக்கை உறிஞ்சிக்கொண்டாள்
பாப்புக்குட்டி
ஆமாமா என்றாள் அம்மா

ஒற்றைப்பொட்டு மினுக்கம் காட்டும் காலத்தின் திரி

 குளம் பருகுகிறது

சூரியனை
கரையோரப் புங்கையை,கிளுவையை
குறுக்கே பறக்கும் காகத்தை
மீண்டுவந்த சந்திரனை....
பாசிப்பச்சைக்குள்ளிருந்து
தலைநீட்டிய அல்லிக்குதான்
ஒருநாளே தாளவில்லை

*************************************
உனக்காகத்தான்
உனக்காகத்தான்
என்கிறாய்
என் மனசோ அனிச்சையாய் நீ கிள்ளும்
குரோட்டன் இலைகளோடு
நுணுங்கி நுணுங்கி விழுகிறது
**************************************
இத்தனை இருளுக்கு
ஒற்றைப்பொட்டு மினுக்கம் போதுமென்றிருந்தது
மினுக்கம் வந்தவுடன்
சற்றே தூண்டிவிட மாட்டோமா என்றிருக்கிறது
காலத்தின் திரியோ அரூபம்


பாப்புவின் வீடு

 ஊஞ்சலில் ஆடுகின்றாள் பாப்புக்குட்டி

அவள் இல்லாதபோது
எங்கே பாப்பு இல்லியா
விசாரிப்பதாக எட்டிப்பார்த்து காற்று அசைத்துப்போகும்
கூடத்தின் நடுவே தொங்கும்
ஊஞ்சல் இருக்கையை
அவள் அமர்ந்திருப்பதான வாஞ்சையோடு
தொட்டுக்கொண்டு நகர்வார் அப்பா
சின்ன இருக்கையைச்
சில ஆண்டுகளில் மாற்ற வேண்டிவரலாம்
கழற்றி பரணில்தான் வைக்க வேண்டி இருக்கும்.
அண்ணாந்து பார்த்தால்
கலைந்த கிராப்புத்தலையுடன்
முழங்காலைக் கட்டிக்கொண்டு
ஒளிந்திருக்கும் பாப்புவைப்போலவே
அது காட்சிதரக்கூடும்
சற்றே பெரிய பிரம்பு ஊஞ்சலை இந்தக் கொக்கி தாங்குமா அண்ணாந்து பார்த்துக்கொள்கிறார் அப்பா
முன்கூட்டியே

பாசாங்குகளின் அகராதி

 அரும்புகளை இரட்டை இரட்டையாக

அடுக்கும் வேகமும் தொடுக்கும் அழகும்

காம்பு உடைந்த செவ்வந்தியையும்

சாமர்த்தியமாக வரிசைக்குள் பொதிந்துவிடும் சாமர்த்தியமும்
கனகாம்பரமும் டிசம்பர் பூவும்
இற்றுவிடாமல் இறுக்கி நெருக்கும் அழகும்
மருவையும் நீலத்தையும் பச்சையையும்
எண்ணாமலே திட்டமான இடைவெளிக்குள்
வைத்துவிடும் நேர்த்தியும்
வாழ்க்கையில் எப்போதாவது
காட்ட முடிந்திருந்தால்
எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்...

முழங்கை வரை இழுக்காமல்
முழத்தைச் சுருக்கி ஒரு சின்ன திருப்தி
*********************************************
வளையல்களைப்போல
பாசாங்குகளையும் கழற்றிவைத்துவிட்டால்
வீட்டுக்குள் வந்துவிட்ட பூரணம்
பிறகு....
பிறகென்ன தளர்வாடை போல பிரத்யேக வீட்டுப் பாசாங்குகள்
இருக்கவே இருக்கிறது




எங்கிருக்கிறாய்

 

சுவடே தெரியவில்லையே
கேட்குமுன்
உன் தேடலுக்கும் மறதிக்கும் நடுவிருக்கும்
சிறுபள்ளம் பார்த்தாயா
நினைத்ததற்கும்
தவிர்த்ததற்கும்
நடுவில் ஒரு
ஒட்டுத்துண்டு இருக்கிறதே
அங்காவது பார்த்திருக்கலாம்
பிரியமாய்
ஒட்டிக்கொண்டதற்கும்
மறந்தாற்போல எடுத்துவிட்டதற்கும் இடையே
ஒரு காலேஅரைக்காற்புள்ளிதான்
அங்கு பார்த்திருக்கலாம்
எல்லாம் விட்டு
எனக்கே தெரியாத கேள்வியை
கத்தரிக்காயின் பாவாடை போல
நறுக்கி விசிறுகிறாய்

வேடிக்கை காலத்தின் வாடிக்கை

 தடம் தெரியாமல் போய்விட்ட ஆங்காரத்தை

எப்படியாவது உயிர்ப்பிக்க வேண்டியிருக்கிறது

தலைமாறு கால்மாறாகக் கிழித்தெறிந்த தருணத்தில்
இப்படி ஒரு நேரம் வருமென நினைக்கவில்லை
ஒட்டி ஒட்டிக் காயவைத்தால்
சாயம்போன நூல்புடவை மாதிரி கிடக்கிறது
அர்ஜெண்டா கொஞ்சம் ஆங்காரம் வேணும்
அமேசானில் கிடைக்கிறதா
************************************************
பக்கத்து மரங்களின் மறைப்புக்கு ஏற்ப
மழைநீர் வழிந்த பாசிக்கோலத்தோடு நிற்கும் மதில்
இந்தப்பக்கம் எட்டிவிடக்கூடாதென
தன்வீட்டு ரோஜாச்செடியின்
தலையைக்கிள்ளிக்கொண்டே இருப்பாள்
பக்கத்துவீட்டு அத்தை
அந்நாளில்
அவளுக்குப் பயப்படாமல்
ஏறிக்குதித்து இங்கும் அங்கும் தாவும் அணிற்பிள்ளை
இன்றும் தாவுகிறது
வாரிசோ தூரத்து உறவோ தெரியவில்லை
எப்போதும்
உரிமையற்று வேடிக்கை மட்டும் நமக்கு

சொல்பேச்சு

  தானே தன்னைப்பற்றி ம்பிக்கை வார்த்தை சொல்ல வேண்டியிருக்கும் தருணம் அவலமடா என்றேன்

முழு சகதி

அந்த அரைச்செங்கல்லில் நிற்கப் பார்க்கிறேன்
உனக்கு அதுவும் பொறுக்கவில்லையா என்கிறான்

******************************************************
கசம் கசம்
கீழே போடு
என்று விரட்டும் அம்மாவைப் பார்த்தபடியே
எக்காளச்சிரிப்போடு தத்தித்தத்தி நடந்து
பிடுங்கி எறிந்த குப்பையை எடுத்து
வாயில் வைத்துக்கொள்ளும்
குழந்தையாகத்தான் செய்கிறது மனது

********************************************************
”சொன்ன பேச்சைக் கேக்குற பழக்கம்
பரம்பரையிலேயே கிடையாது”

அடிக்கடி அம்மா சொல்கையில்
திட்டுகிறாளா
புலம்புகிறாளா
என்று எவரும் திரும்பிப் பார்க்காத வீட்டில்
யாரிடம்தான் சொல்கிறாள்
யோசிக்கிறது விளக்கு மாடம்
தன்னிடம்தான் என்று அதற்கும் தெரியவில்லை





நான் என்ன செய்வேன் என் தேவனே

 என்றைக்காவது

தற்கொலை செய்து கொள்வேன் என்றாள் அவள்

எப்போது என்றோ எப்படி என்றோ
தெரியாத ஒன்றை சர்வநிச்சயமாக நிகழப்போகும் பாவனையில்
சொல்லும் அவளை வெறித்துப் பார்த்தேன்
ஆனால் அதற்கு சற்றுமுன்
ஹரிபிரசாத் சௌராஸியாவைக்
கேட்டபடி
இரண்டு பாஸந்தி சாப்பிடுவேன்
என்கிறாள்
என்றாவது எதுவும் நிகழ்ந்துவிட்டால்
இந்த வரிசையில்
நடந்ததா என்று சரிபார்க்க வேண்டுமா
அல்லது
இதுகூட நிறைவேறாமற் போய்விட்டாயே
என்று அஞ்சலி எழுத வேண்டுமா
இப்படித்தான் யாராவது
புதிய கவலைகளை ஏற்றி வைத்து விடுகிறார்கள்

வேம்பின் பூங்கொத்து

 அத்தனை வெறுப்பு பொங்கும் மனசோடு எப்படி ஒரு புன்னகை என்றேன்

வேம்பின் பூங்கொத்து
அத்தனை அழகில்லையா எனப்
பேச்சை மாற்றுகிறாய்

*********************************************************
கைவிடுவதற்கென்று
ஒன்றும் இல்லாத
இடத்திலிருந்து பெயர்ந்தபோதும்
நினைவைச்
சுரண்டும் வெறுமை
மனசாட்சி சனியனிடம்
எதையும் கேட்டு வைக்க வேண்டாம்
உருண்டு புரண்டு சிரித்து வைக்கும்
அப்புறம் அது துப்பிய எச்சிலை
அவசரமாகத் துடைத்துக்கொண்டு
அசட்டுச்சிரிப்பு வேறு சிரிப்பீர்கள்

திறந்திடு சீசேம்

 காக்கா கொத்திவிடாமல் கறுப்புத்துணி விரித்துத் தானியம் துழாவிவிட்டுத்

தனியாக ஓரிடத்தில் குருணை வைக்கத் தெரிகிறது
மிச்சத்தை வழித்துத் தெருநாய்க்குப் போடும்
ஜீவகாருண்யப் பந்தியைச் சரியாக
நாலுவீடு தள்ளி நடத்துகிறாய்
யாரென்று அடையாளம் தெரிந்தபின்னரே
புன்னகை செலவழிக்கிறாய்
இந்தப் பாடங்களெல்லாம்
நடத்தியபோது
நான் விடுப்பா என்ன

********************************************

ஒரு சிட்டிகை நம்பிக்கையை வைத்துக்கொண்டு
தினந்தோறும் தினந்தோறும் ஆக்கி அவித்து முடிக்கிறாய்
புதிதாய் கூடுதலாய்
இன்னுமொரு சிட்டிகையாவது கிடைத்திடாதா
என்ற ஏக்கத்தோடு
நீ திறக்கும் ஜாடிகள்
உனக்கு முன்னால் குரல் கொடுக்கின்றன
திறந்திடு சீசேம்
இங்கு இருப்பு இல்லை என்பதை
இப்படியும் சொல்லலாமோ




ஆடிக்கென்று பிரத்யேக சித்திரம்

 

மழை வரி வரியாக விழுந்து
கலைத்துக் கொண்டிருக்கிறது
**""""""
மழையினூடாக
யாரையோ அடையாளம் கண்டுகொண்ட
யாரோ
உரக்க அழைக்கிறார்கள்
உதிர் இலைகளோடு
அதையும் சேர்த்து அடித்துப்போகிறது காற்று
******"""
என்ன எல்லோரும்
வீட்டுக்குள் அடைந்தாயிற்றா?
சரிபார்த்தபின்
பெய்கிறது அம்மாமழை

அம்மாவின் பேரேடு

 ஏதோ ஒரு மொழியில் பாத்திரம் விற்றுக் கொண்டிருக்கிறாள் தொலைக்காட்சி விளம்பரப்பெண்

மூச்சுவிடாமல்
இது எவ்வளவு லாபமானது
எவ்வளவு பயன்படும்
ஒன்று இரண்டு என வரிசைப்படுத்திய
அவ்வையைவிட
வேகமாக சொல்லிக்கொண்டிருக்கிறாள்
எத்திசைச் செலினும்
அத்திசைச் சோறே

***********************************************
விளக்கு வைக்கிற நேரம்
தாயம் உருட்டாதே என்று ஆத்தா விரட்டியதும்
திண்ணை காலியாகும்
பித்தளைக் கட்டைகள் புள்ளிகளோடு உருண்டு ஒதுங்க
சாக்பீஸ் கட்டங்கள்
இருதாயம்
முத்தாயம்
ஏ பன்னண்டு என்று தானே கூவிக்கொள்கின்றன
விளக்கு வைத்த நேரம்
செய்யக்கூடாத பட்டியலைத்
தன் பேரேட்டிலிருந்து.
ஒவ்வொன்றாக அறிவித்துக் கொண்டிருக்கிறாள்
அம்மா

படுக்காதே
தலைசீவாதே
குப்பை கொட்டாதே
ஒருதாயம்
இருதாயம்
ஆறு பன்னண்டு

***************************************************

பிச்சி காலம்

    காப்படி முல்லை வாங்கிக் கையொடியக்கட்டி

நல்ல விளக்குக்கு ஒரு கிள்ளு
எப்பவோ செத்துப்போன நாத்தனார் படத்துக்கு ஒரு கிள்ளு
மத்ததெல்லாம் மகளுக்கு
வளைச்சு வளைச்சு வெச்சிவிடும் பெரியம்மாவின்
சீவாத தலையில
மூணுபல்லு உடைஞ்ச சீப்புதான் இருக்கும்
இரட்டைப்பின்னலுக்கும் இணைப்புப்பாலமாய்
இழுத்துவைத்த மல்லி
நேரம்போக தளர்ந்து தொங்கும் கழுத்தோரம்
கூடவே செருகிய ஒற்றை ரோஜா
எண்ணிவாங்கித்தொடுத்த
கனகாம்பரமோ
டிசம்பர் பூவோ
எதற்கும் சிணுங்காத கோமதி
தஞ்சாவூர்க் கதம்பம்டி என்று கெஞ்சினாலும் மறுப்பாள்
கனக்கும் செவ்வந்திகள் கூடத் தேவலாம் சிடுக்கெடுக்க நாளை
அசங்காதே
அசங்காதே எனக் குட்டு வாங்குவது யாராம்
கறுப்புக் குஞ்சங்களின் பொன்மஞ்சள் அலங்காரம்
ஒவ்வொரு தேர்க்கடை தெப்பக்கடை வைபோகம்
வாழை மட்டையும் பூ ஊசியும் சாட்டின் நூல்கண்டுமாக
சின்னு அக்காவின்
பரபரப்பில்
பூதைத்த சடைகளைத்
தலையணைக்குமேல் நீட்டி வைத்துக் காப்பாற்றிக்
கூட ஒருநாள் நட்சத்திர அந்தஸ்துக்கு
ஆசை கொள்வர் அம்மாக்கள்
தாழம்பூச்சடை என்றால் தைரியமாக இரண்டுநாள்தான்
சந்திர சூரிய பிறைகளும் சடைவில்லையும்
எண்ணெய் இறங்கிய கற்களைப்
பொருட்படுத்தாமல் இரவல் போய்வரும்
அரும்பே' கூவியபடி சைக்கிள் வராத நாட்களிலும்
அலங்கார ஆசைக்காக
உருவாகி வந்தன உறை மணிக்குஞ்சலங்கள்
ராக்கொடியும் பூச்சடையுமாக
ஒவ்வொரு பெண்ணையும்
அழகுபார்த்தன
புகைப்பட நிலையங்களின் கண்ணாடிகள்
மதுரைமல்லிக்கு புவிசார் குறியீடாமே
அம்மாவின் நினைவில் மணக்குமே
என்றெண்ணிக் கேட்கும் மகள்
கிரீமை மீறித் தொந்தரவு செய்யும்
எதையும் தொடுவதில்லை
அவள் மட்டுமென்ன
ஒருவரிசை மல்லி ஒரு வரிசை கனகாம்பரம்
எனச்சூடிய நாள் போய்
ரெண்டுமல்லி ரெண்டு பட்டன்ரோஸ் வைத்த
விரற்கடைப் பூவும் தாளாத அளகபாரம்
நிறைய படங்கள் இருக்கின்றன
வாங்கும் சரங்களைப் பங்கிட
முத்துமணிக் குஞ்சங்களும்
கண்ணில் படுகின்றன
எங்காவது திருவிழாக்கடைகளில்




வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...