புதன், ஏப்ரல் 08, 2020

நடுவில் ஒரு வரி

அப்படியொன்றும் 
காணாமல் போய்விடமுடியாது
ஒரு பச்சைஒளிவட்டம் 
உனது இருப்பைக் காட்டிவிடும்
அப்படித்தான் தொலைய வேண்டுமானால் 
முதலில் நீ எவரோவாக 
கூடுபாய வேண்டும் என்றேன்
தொலையவேண்டும்
என முடிவு செய்தபின்
இன்னொருவராக 

இருக்க வேண்டியதென்ன என்றான்
********************************************************
ஒரேமாதிரி ஓடுவது
பாப்புவுக்குப் பிடிப்பதில்லை
தள்ளாடுபவன்போல்
காலை இழுத்து இழுத்து ஓடுவது
நொண்டி விளையாட்டுபோல 

ஒற்றைக்காலோடு 
தத்தித்தத்தி ஓடுவது
இரட்டைவரிநோட்டுபோலச்

 சாலையைப் பாவித்து 
நடுவரியை விட்டுவிட்டு 
தாவிக் குதித்தபோது வேண்டிக் கொண்டேன்
நடுவில் ஒருவரியை விட்டுவிட்டுக் 

குதிக்கக் கற்பிக்குமாறு
சரியெனப்
ப்ராமிஸ்' செய்திருக்கிறாள்



தோ தோ

எல்லோருக்குமான
துன்பங்களையும்
தவிப்புகளையும்
சிரிப்புகளையும் நிற்கவைத்திருக்கும்
கௌண்டரில்
அவர்கள்
தோள்மீது ஏறித்தாண்டி
டிக்கெட் எடுத்து விடுகிறவர்கள் 

இப்போதும் இருக்கிறார்கள்.
நெரிசலைப்பற்றி
நீங்கள் புலம்புகையில் 

அவர்கள்தான் 
அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்
**************************************************************

புளித்துவிட்ட பண்டத்தை 
நாய்க்குப் போடுவதுபோல
வாழ்க்கை எதையாவது போடும்
தோ தோ கூப்பிடவே அவசியமில்லை
இந்த நாக்குதான் 

தொங்கிக்கிடக்குதே

**************************************************************



பாப்பு கால் வலிக்கிறதென்று
 சிணுங்கியபடியே உறங்கிப்போனாள்
குழந்தைகள் தினத்துக்காக 

ஊர்வலம்
*********************************************************


அதிசயங்கள்
அதிகம் பேசும்
கொஞ்சும் குழந்தைகள்
மிரட்டும் அறிவியல்
சாதி மதம் வளர்ப்பு ஒழிக்க
சிரிக்க வாசிக்க வம்பு பேச
தனி ஆள் குழுவென 

ஒவ்வொன்றையும் 
இருபத்தேழுமுறை அழிக்கிறேன்
ஆக
ஒருநாள் இந்த அழித்தொழிப்பே மிஞ்சும் போல








































காந்திமதியின் சொத்து

அடகுக்கடை
ரசீதுகளை மடித்து ஒடுக்கிய
உள்ளூர் நகைக்கடை பெயரழிந்த நைந்த
மணிபர்ஸ்
காந்திமதியின் மாபெரும் சொத்து
அரிசிபருப்பு 
அஞ்சரைப் பெட்டியெல்லாம் 
அலசி எடுத்துவிட
டாஸ்மாக் தந்திரங்களைப் 
பயின்ற கணவனால்
எப்போதும் வியர்வையில் ஊறிய 
ரவிக்கைக்குள் அடைகாப்பாள் 
இல்லப் பொருளாதாரம்
சாகாவரம் பெற்ற
வறுமைக்குப் புட்டிப்பால் 
அவள் சுண்டியெறிந்த கண்ணீர்
சிரித்தபடியே 
இறுக்கிக்கட்டும் துடைப்பத்துக்கு 
அவள் வாழ்வின் குப்பைகளைக் 
கூட்டியெறியத் தெரியவில்லை
காந்திமதி கேட்கிறாள்
கட்டி கட்டியா நவ( நகை) போட்டுக்கிட்டு வாராவளே 
அவங்க ஊட்டுல தங்கம் காய்க்குமா

வெய்யிலும் நிழலும்

தவறு குற்றம் என்பதெல்லாம் 
எளிய மனிதர்களின்
கைநீர்
பெரியவர்களின் அகராதியில் 
இடமும் பொருளுமற்றதால்
அந்நீரை உங்கள் மேல் தெளித்து 
புனிதமாக்க புறப்பட்டார்கள்
அதென்னவோ கண்ணீராக வழிந்தது
*****************************************************
இருக்கும் இடத்தில்
தள்ளிப்பிடித்துக்கொண்டு நிற்க முயலும்
பள்ளிச்சிறுவர்களாக
என்வாசலில்
வெய்யிலும் நிழலும்
*******************************************************
மௌனத்தை மொழிபெயர்க்கப்போனால்
அங்கும் மௌனமே
வேறு உடை பூண்டு நிற்கிறது
******************************************************


பக்கவாட்டுப்பாசி என்ற குரு

கொஞ்சம் கொஞ்சமாகப் 
பிய்த்துத்தின்றுகொள் பசியை
துளித்துளியாகப்
பருகிக்கொள் தாகத்தை
ஆங்
அப்படித்தான்
குறைந்தது
பத்துப்பற்களாவது தெரியும்படி சிரி
யாரும் வந்து உதடுகளை 

அகல விரித்துவிடும்படி வைத்துக்கொள்ளாதே
பூரணம்

*******************************************************
தனிச் சொற்களின்
சுவையை உணரச்
சொல்லிக் கொடுக்கிறது
சுவர்ப்பல்லி

**********************************************
எதிர்பாரா இளஞ்சூட்டில் 
நீரைப்பொழிந்து
விரல்களின் நடுக்கத்தைச் 

சமன்படுத்திய குழாய்க்குத் தெரியாது
எவ்வளவு பெரிய அழுகையின் 

மென்னியை முறித்தோமென்று
******************************************************
நீயே எழுப்பிய
சுவர்தான்
ஆள்வதற்கு அவசியம் என நினைத்தபோது.
பக்கவாட்டுப்பாசியும்
பூஞ்சைக்காளானும்
குருவாகும் நாளிது


என்னைப்பாரடி

அக்கம்பக்கம்
இடித்துக்கொள்ளாமல்
பார்த்துத்திரும்ப
வழிகாட்டி முடித்ததும்
ஐந்தோ பத்தோ நீட்டி
ஒரு
அவலச்சிரிப்பைப் பெற்றுக்கொள்
அவன்கும்பிடு இங்கு
உன் கும்பிடு எங்கோ
வாங்கிக்கொடு
கொடுத்து வாங்கு
எல்லோருக்கும்
இருக்கிறது
ஒரு வாசல்


*************************************************************
மாற்றிமாற்றிக் கட்டிப்பார்க்கிறேன்
சார்த்திய காஞ்சிப்பட்டுக்கும்
காக்காபொன்னுக்கும்
மலர்க்கண்
எப்போதும் அப்படியே
அம்மை
கிளியை விட்டு என்னைப்பாரடி
ஒருமுறையேனும்

**********************************************
எங்கும் பார்த்திராதவள் என்று தெரிந்தாலும்
எங்கோ பார்த்ததுபோல்தான்
இருக்கிறது
நினைவைத்தொட்டு
இட்டுக்கொள்
ஒரு பொட்டு

************************************

நாளத்துக்குள் ஓடும் சிற்றெறும்பு

இந்த கடிகாரத்தில்
நான்கு முனைகள்
இப்படித்தான்
இப்படித்தான்
என்று அளந்த
பாதை
அலுக்காத முள்
கிழித்துப் பதம் பார்த்துவிடாதபடி
பக்குவமாய்
முள்ளை நகர்த்திவிட்ட பெருமூச்சு
டிக் டிக்

****************************************************
எப்படித்தான்
ஈடுகொடுக்க
தீனியென்றாலும்
தானியென்றாலும்
கிடுகிடுவென
நாளத்துக்குள் ஓடும்
சிற்றெறும்பே

**************************************************
சுமைகளுக்கு என்ன குறை
மழைக்கென்று
வெயிலுக்கென்று
பசிக்கென்று
தூக்கத்துக்கென்று
மானத்துக்கென்று
விசுவாசத்துக்கென்று
அவர்
இவர்
உவர் நிறைவுக்கென்று

**************************************************














வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...