புதன், ஆகஸ்ட் 19, 2020

கொரோனா கவிதைகள்

 முழங்கையால் கதவைத்தள்ளி

முழங்கையால் குழாய்திருகி


தன்கையிலிருந்த 

கிருமிநாசினித் திரவத்தைப்பொழிந்து 

குழாயையும் அலசி
ஒருவழியாகக் கை கழுவிக்கொண்டவள் 

சிரித்தாள்
சாதாரணமா சாப்பிட உக்காருவதே மறந்து போச்சு


அப்பப்போ 

தோள்பட்டையால கூடத் தள்ளலாம் 

கதவுகளை

புதிய நுட்பமொன்றைச் 

சொல்லிக்கொடுத்த திருப்தியில் 

நானும் கிரமத்தை முடித்தேன்


வீட்டுக்குப் போகிறாளாம் இன்று

நாங்கள் சந்தித்துக் கொண்டது 

கொரோனா வார்டில்தான்

கொரோனா கவிதைகள்

 முகக்கவசத்திடம்

தோற்ற உலகத்திலும்
முகக்கவசமே காப்பு

சோப்புக்குமிழ்களைத் தோற்கடித்த உலகிலும்
சோப்புக்குமிழே துணை

கிருமிநாசினிகள்
பொருளற்றுப் போன உலகிலும்
கிருமிநாசினியே
பற்றுதல்


உங்கள் அலைபேசிகளில் 

தொடங்குவதுபோல் இல்லை 

எங்கள் இருமல்
உங்கள் அச்சத்தைப் போலில்லை 

எங்கள் காய்ச்சல்


ஓரத்தில் ஒரு கிழவர் 

குரோதமாகப் பார்த்துக் கொண்டிருக்க 

அவரைக் கேலி செய்தபடி 

குத்துப்பாட்டு பாடுகிறான் ஒரு இளைஞன்


காலையில் சஷ்டி கவசமும்
வடிவேலு காமெடியும் 

சரிக்குசரி மல்லு கட்டுகின்றன


இங்கு வந்தும்
மாமியாரைப் பராமரிக்கும் வேலை

தொடரும் ஆத்திரத்தில்
காறிக்காறித் துப்பிக்கொண்டிருக்கிறாள் ஒருத்தி


படுக்கைகள் நிரம்பும் வேகத்தில் 

வாழ்க்கையும் கலைந்து கிடக்கிறது

கொரோனா கவிதைகள்

 கழிச்சல்ல போவ

எனச் சிரித்துக்கொண்டே பாராட்டுவாள் 

ருக்கு பெரியம்மா
பெரியப்பாவிடம் அந்தரங்கத்திலும் 

அதையே சொல்வாளோ 

எனச்சிரிக்கும் கூட்டு


அதுவே சண்டையென்றால் 

தெரு அதிர
ஒன்ன மாரியாயி கொண்டுபோவ
நீ கொள்ளையில போவ
கூவுவாள்


மாரியாயி கொண்டு போவதெல்லாம் 

நின்று கனகாலமாகியும் 

அவளுக்கு கொஞ்சவும் வையவும் 

பதங்கள் மாறவில்லை


வாதம் பேச்சைப் பறித்துக்கொண்டுவிட
கொரோனா காலத்தைச் 

சேர்த்துக்கொள்ள முடியாது 

கிடக்கிறாளாம் பெரியம்மா

கொரோனா கவிதைகள்

 இங்கெல்லாம் பெய்யக்கூடாது என்று 

இந்த மழைக்குத் தெரியவில்லை

இங்கெல்லாம் மின்னக்கூடாது
இங்கெல்லாம் இடிக்கக்கூடாது
இங்கெல்லாம் வீசக்கூடாது 

எதுவும் தெரியாமல் 

அதது பாட்டுக்கு நடக்கிறது


அட இந்த பூனைக்குட்டி ....

இங்கெல்லாம் வரக்கூடாது எனத்தெரியாமல்
இரண்டாம் மாடியின் 

சன்னல் நீட்டங்களில் 

தாவித்தாவி வருகிறது

ஒரு சொட்டுபால் விடமுடியாத 

எங்கள்மேல் எந்த வன்மமும் 

அதற்கில்லை

கொரோனா கவிதைகள்

 குறும்புச்சிரிப்போடு ஓடும் பாப்புவின் 

கன்னம்வழித்து முத்தமிட்டு 

மூன்று மாதங்களாயின


இருட்டிக்கொண்டு வரும் 

சம்பளமற்ற எதிர்காலம் குறித்துக் குமுறிய 

தோழியின் முதுகணைத்துக் 

கண்ணீர் துடைக்கத் தவித்த 

விரல்களை 

வெறுமனே நெட்டிமுறித்தபடி 

வறட்டுச்சொற்களைப் பெய்திருந்தேன்


தொட்டுக்கொண்டதெல்லாம் சோப்பு
சோப்புத்திரவம்
கிருமிநாசினி


காதலின்தொடுகை 

மறந்து போன கைகள்
இருபதுநொடிகளில் 

எதையும் அலசப்பழகிக்கொண்ட கைகள்


காயை,பழத்தை,பால் பாக்கெட்டை,அலச 

எத்தனை வித்தைகள்


நீ தொடமுடியாத தூரத்திலிருப்பதை 

உறுதிசெய்தபடியே ஊர்ந்த நொடிகள்
எல்லாம் தாண்டி 

எப்போது தழுவினாய்....
உனது லட்சம்கோடி நகங்களின் 

நுனிபட்ட நொடி எது...

கொரோனா கவிதைகள்

 துக்கத்துடன் ஒருத்தி

அரற்றிக் கொண்டிருக்கிறாள்
ஆம்புலன்சில் ஏற்றியதை வீடியோ எடுத்து 

பக்கத்து வீட்டுக்காரர் 

சுற்றுக்கு விட்டிருப்பதாக


இன்னொருத்தி சொல்கிறாள்
எங்க வீட்டைத் தாண்டும்போது 

முந்தானையால் முகத்தைப் 

பொத்திக்கிறாங்களாம்


வேறொருத்தி கண்ணீர் உகுத்தாள்
அவசரத்தில் 

பூனைக்குட்டியை உள்ளேயே விட்டு 

வீட்டைப் பூட்டிவிட்டேன்


எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்ட வீட்டுச்சுவர்கள்
ஊரெங்கும் நீள்கின்றன


எண்ணிக்கையில் ஒன்றாக மாறிவிடும்போது
என்னென்னவோ நடக்கிறது

கொரோனா கவிதைகள்

 ஒரு குறுமிளகளவு

சளி வந்து நிற்கும்
ஓரு கனைப்பில் 

அது கரைந்து போகும்


தொண்டைக்குள்ளாகவே நடக்கும் 

இந்த சம்சாரத்தை
சந்தேகக்கண்ணோடு நோக்குகிறாராம்

 எல்லோரும்
அலுத்துக்கொண்டார் சித்தப்பா


இன்னிக்கி நேத்திக்கா இருக்கு என் தும்மல்
நாலு செம்பருத்தி கையில் கிள்ளுமுன் 

துருத்திவரும் அரைத்தும்மல்
முந்தானையில் அமுக்கிவிட்டுக்கொண்டு 

ஆயிரம் வேலை பார்ப்பேன்


எப்பலேருந்து தும்முற
எப்பலேருந்து
பிறந்ததுல இருந்துன்னுதானே 

சொல்ல முடியும் 

சிரிக்கிறாள் அத்தை


இருக்கா இல்லையா
தனியா வைத்தா தாங்கணுமே


இல்லையென்ற முடிவுதான் 

எளிதாக இருக்கிறது எல்லோருக்குமே

கொரோனா கவிதைகள்

 கிழக்கிலிருந்து மேற்காகத் திரும்பும் 

சந்திலிருந்து பணி முடித்து 

ஒரு காவலர் கிளம்புகிறார்

என்ன இங்கே
எதிரில் வரும் சக காவலர்
தெற்கிலிருந்து கிழக்காக 

தட்டி அடைக்கவிருப்பதாகச் 

சொல்லி நகர்கிறார்


வடக்கிலிருந்து தெற்காக 

ஏற்கனவே அடைபட்ட தெருவில் 

வெறித்த பார்வையுடன் 

அமர்ந்திருக்கும் தொப்பிக்காரருக்கு 

ஒரு வெளிறிய புன்னகையை வீசிவிட்டு
தானே நகர்த்திக் கொள்கிறார் 

தடுப்புக் கம்பியை


அடுத்து போடணும்னா
கம்பியெல்லாம் இல்லை
பக்கத்து நாற்காலியில்
அமர்ந்தவாறே
அலுத்துக்கொள்கிறவர்
ஒப்பந்த தாரராயிருக்கலாம்
சுற்றிச்சுற்றி வந்துவிட்டு
வேற வழியில்லியா சார் எனத்தவிக்கிறான்
லாரிக்காரன்

நான் இங்க உக்காந்திருக்கணும் 

அவ்வளவுதான் தெரியும்பா

உட்கார்ந்திருக்கவும் ஆளில்லாத 

தகரத்தடுப்பின் முன் 

முட்டி நிற்கிறது ஒரு குட்டியானை

கொரோனா கவிதைகள்

 எதுவும் தெரியவில்லை எங்களுக்கு

யார் யாரைக் கொல்கிறார்கள்
யாருக்கு மன அழுத்தமாகவுள்ளது
யார் துன்புறுத்துகிறார்கள்
யார்நிவாரணம் சொல்கிறார்கள்
யாருக்குகோபம் வருகிறது
யார் பசியில் சாகிறார்கள்
எதுவுமில்லை இந்த உலகில்


தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களைக்கொண்டு 

கட்டமைக்கப்பட்ட உலகம் இது

காய்ச்சல்
தலைவலி
இருமல்
சளி
பாரசிடமால்
இவற்றைத்தான் சொல்கிறோம்
முனகுகிறோம்
முறையிடுகிறோம்


ஆறுதல் தருகிறார்கள்
நிறைய தண்ணீர்குடி 

எல்லாவற்றையும் விழுங்கு


இரவு பகல் காலை மாலை 

எதுவுமில்லா இவ்வுலகின் 

இரண்டே பொழுது
மருத்துவர் வரும்பொழுது
செவிலியர் வரும்பொழுது
அவ்வளவுதான்

கொரோனா கவிதைகள்

 முகக்கவசம்

நூறு ரூபாய்க்கு அஞ்ச வைக்கிறது

பதினைந்து தையல் போட்டு 

பத்து ரூபாய்த் தோரணங்களாக
சாலையெங்கும் தொங்குகிறது

விலையேற விலையேற
காப்பதில் அந்தஸ்து பேதத்தை 

அழகாய்ப்பேணி 

தனியுடைமைக் கோட்டை மேல் பறக்கிறது
கொடியசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததால் கொடியசைந்ததா

காதற்ற ஊசியும் வாராக் 

கடைவழிப்பயணம் 

தள்ளிப்போடுவதற்கான முயற்சியில்

 நாடாக்கள் காதுகளை 

அறுத்துக் கொண்டிருக்கின்றன.

கழுதை காதுகள் 

ராஜாக்களைக் காட்டிக்கொடுக்க
அவிழ்த்தெறிந்த கவசங்கள் 

கட்டமைக்கின்றன கவிழ்ந்த வானத்தை

துடைப்பங்களில் 

முடிக்கொத்தாக சிக்கி ஆடும் 

முகக்கவச நாடாக்களை
மகள் கூந்தலின் சிடுக்காக எடுத்து சுருட்டி எறிகிறாள்
கைக்காப்பற்ற ஒப்பந்த சேவையாளி

திரையா கவசமா 

எது சரியெனத்

 திணறிக் கொண்டிருக்கிறேன் நான்

கொரோனா கவிதைகள்

 அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ

ஒலித்துக்கொண்டே இருக்கிறது
காய்ச்சலில் கண்திறக்காது கிடப்பவனின் அலைபேசி

காய்ச்சல் விட்ட களைப்பில் துயில முற்படும் 

பக்கத்துப் படுக்கைக்காரனின்
திடுக்கிடலுக்கு ஒவ்வொரு முறையும் காரணமாகிறது
அண்ணாத்த ஆடுறார்

எங்கு வைத்திருக்கிறானெனத் தெரியாது
தொட்டுத் துழாவவும் முடியாது 

எல்லாக்கண்களும் விழித்திருக்கின்றன
அவன் விழிக்க
ஐந்து நிமிடங்களுக்கொருமுறை
அண்ணாத்த ஆடுறார்.

இந்தப்பக்கம் ஒருத்தி 

கொஞ்சிப்பேசிட வேண்டாம் வைத்திருக்கிறாள்

சரியாக ஒவ்வொரு பத்தாவது நிமிடமும் ஒலிக்கிறது 

கொஞ்சிப்பேசிட வேண்டாம்
முகக்கவசத்துக்கும் மேலாகக்கை வைத்து மறைத்து 

சுவர்ப்பக்கம் திரும்பி பேசிவிட்டு
சுருண்டு கொள்கிறாள்

நள்ளிரவு வரை பொறுத்து
அதைக்கொஞ்சம் மாற்றேம்மா என்று 

மற்ற படுக்கையெல்லாம் மண்டியிட்டன
எனக்குத்தெரியாது
அவரைத்தான் கேக்கணும்


சுருண்டுகொண்டாள்

கொரோனா கவிதைகள்

வலியைப்

பரிகாசம் பண்ண இரண்டு வழிகள்

பொட்டு கண்ணீர் உதிரும் வரை சிரிப்பது


மிரள மிரள விழித்துக் கொண்டிருக்கும்போது
பூனைக்குட்டிபோல் சாக்கில் கட்டி
தூர
விட்டுவருவது

அதற்கு வழி தெரிந்து வரும்வரை
எண் ஒன்றைச் செய்யலாம்


கொரோனா கவிதைகள்

 ஒரு சிக்கலுக்கு

ஓராயிரம் தீர்ப்புகள்

காய்ச்சலா
உடனே ஓடு சோதனைக்கு

இரு இரு முன்பின் காய்ச்சல் வந்ததில்லையா
நாலுநாள் பாரசிடமால் போடு

க்கும் எல்லாம் மாத்திரையா
இஞ்சி,மஞ்சள்,மிளகு,பூண்டு,சீரகம்,துளசி எடு எடு

என்ன அலட்சியம்
எத்தனை நாளாய்ப் பரப்புகிறாய்
ஓடு சோதனைக்கு

சோதனை கொடுத்துவிட்டாயா ஒழுங்காய் வீடுசேர்

சோதனைதந்துவிட்டு வெளியிலா
மூச்
இங்கேயே கிட
திறந்துவிட்டால் போகலாம்

வாவாவா...
தாசில்தார், போலீஸ் கார் எல்லாம் வாங்க 

கூண்டைப்போட்டு அமுக்குங்க

தெருவை மூடுனியா
சுத்திமுத்தி வளைச்சு தட்டி கட்டு
கொரோனா அந்த வீட்டை விட்டு
எகிறி குதிச்சு ஓடிராம 

இருபத்துநாலு மணிநேரத்துக்கும் ஆள் போடு

என்னசார் பதினாலுநாளா
அது அப்போ
அப்ப இப்ப
பத்துநாள் போதும்

அவனுக்கு ஒண்ணுமில்ல வீட்டுக்குத்துரத்து
ஏழுநாள்தானே ஆகுது
அதான் ஒண்ணுமில்லன்னு சொல்றேன்ல
சார் பதினாலுன்னீங்க
பத்துன்னீங்க
இப்ப..
யோவ் வர்ரவனுக்கு இடம் வேணும்யா
எனக்கு சோறு வேணும் சார்

கொரோனா கவிதைகள்

 அப்படியாம் இப்படியாம் என்றபோது 

வரக்கூடாது என்று வேண்டினேன்

தொண்டை கமறியபோது 

இருக்கக் கூடாது என்று வேண்டினேன்

சோதனைக்குக் கொடுத்துவிட்டு 

எண்ணிக்கையில் 

சேர்ந்துவிடக்கூடாது என வேண்டினேன்


மருத்துவமனையில் காத்திருக்கும்போது
நல்ல கழிப்பறை இருக்கவேண்டுமே 

என வேண்டினேன்


வேண்டாமலே கிடைத்திருக்கிறது 

சன்னலோரப் படுக்கையும்
ஒரு துண்டு வானமும்
பிழைத்துவிடுவேன்

கொரோனா கவிதைகள்

 PPE தேவதைகள்

தேவதைகளுக்கு எப்போதும் சிறகுகள் இருப்பதில்லை

இதோ ஒரு தேவதை
பாதுகாப்பு கவச உடைக்குள் பொதிந்துகொண்டு
ஆக்சிஜன் கொடுத்துக்கொண்டிருக்கிறது

இன்னொன்று பிளாஸ்டிக் உறை நெடுக உள்ளே
ஒழுகும் வியர்வையைத் துடைக்கவும் வழியின்றி சர்க்கரை அளவு பார்த்துக்கொண்டிருக்கிறது

பூக்களைப் பெற்று
என்ன செய்வது எனத் தெரியாத தேவதைகள்
புன்னகைக்கிறதா என்றும் தெரியவில்லை

மறக்காமல் இந்த தேவதைக் கதைகளையும் குழந்தைகளுக்குச்
சொல்லுங்கள்.

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...