வெயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஏப்ரல் 08, 2020

வெய்யிலும் நிழலும்

தவறு குற்றம் என்பதெல்லாம் 
எளிய மனிதர்களின்
கைநீர்
பெரியவர்களின் அகராதியில் 
இடமும் பொருளுமற்றதால்
அந்நீரை உங்கள் மேல் தெளித்து 
புனிதமாக்க புறப்பட்டார்கள்
அதென்னவோ கண்ணீராக வழிந்தது
*****************************************************
இருக்கும் இடத்தில்
தள்ளிப்பிடித்துக்கொண்டு நிற்க முயலும்
பள்ளிச்சிறுவர்களாக
என்வாசலில்
வெய்யிலும் நிழலும்
*******************************************************
மௌனத்தை மொழிபெயர்க்கப்போனால்
அங்கும் மௌனமே
வேறு உடை பூண்டு நிற்கிறது
******************************************************


செவ்வாய், ஜூன் 11, 2019

எறும்பின் தடம்

ஒரு பூவைக்கூடக் காணோம் 
இந்தக்கிளையில்
வெயில்படா உள்ளிருப்பில்
 கசப்பின் ருசியறியாதோ

*****************************************************
புள்ளிபுள்ளியாய்ப் பூத்துக்கிடக்குது
 பருக்கைசுமந்த
எறும்பின் தடம் 
தரையெங்கும் 
தனக்கு வைத்ததில் 
காக்கை விட்டு வைத்தது சுமந்து
புண்ணிய கணக்கு அதற்குமுண்டோ

*****************************************************
எவ்வளவு முறை அழுதாலும் 
கண்ணீர் அதேகறையாகத்தான் படிகிறது
ஆனாலும் சொல்லத்தான் வேண்டும்
 இப்போதெல்லாம் அப்படியில்லை என்று
அழுந்தத் துடைத்துவிட்டு

*********************************************************
விசுக்கெனக் கடப்பவர்களைப் 
பார்க்கவே கூடாது
அவர்கள் பாட்டுக்கு
இனி பார்க்கவே முடியாதவர்களின் 
ஜாடையை 
பாவத்தை
நினைவூட்டிக் கடந்து விடுகிறார்கள்
*******************************************************************

புதன், மார்ச் 30, 2016

மார்ச் பூக்கள்

ஒளிச்சுடர் என்னைக்கடந்து செல்கிறது ஆரஞ்சு தளும்ப
மஞ்சள் மின்னலை 
எதிர்நோக்கிய கண்களோ
பாதையில் அலைபாய்கின்றன
******************************************
குவிந்த கரங்களுக்குள்
பொன்வண்டு 
சிறகடிப்பதை நிறுத்தாது
தீப்பெட்டி சதமில்லை 
சிறகுக்கு
சொல்லிக் கொண்டுதான்
இருக்கிறேன்
உயர்ரக தினை மற்றும்
கத்தரி என்வசமுண்டு என

**************************************
வெயில் இறங்கி இறங்கி 
முற்றத்தையும்
வாசலையும் விட்டு 
வெளியேறி 
தெருவின் அடியில்
படுத்துக்கொள்ளத்தானே
போகிறது.
அதை நினைத்து
துடைத்திடு
வியர்வை அல்லது கண்ணீர்



வெள்ளி, நவம்பர் 29, 2013

பூனை மீசையும் காட்சிப்பிழையும்


-- அந்த சுவர் சொல்கிறது 
நான் அதுவாய் ஒருபோதும் 
இருந்ததில்லை என்று....
ஆம்...நீயாய் இருந்திருக்கலாம் 
என்றுதான் இருந்தேன்...என்றேன்!

அந்த வெயில் சொல்கிறது 
நான் அதுபோல் தகிப்புடன் 
ஒருபோதும் 
ஒளிர்ந்தது இல்லையென்று...
ஆம்..வெளிச்சமோ,கணப்போ
எப்போதும் பற்றாக்குறையில்தான் 
எனக்கே என்றேன்...!

அந்தப் பூ சொன்னது 
என் இதழ் அடுக்கை நீ
ஒருநாளும் சரியாய்க் கணக்கிடவேயில்லை என்று..
மகரந்தம் வாசனை நிறம் என்று 
எதையுமே யூகிப்பதுதான் 
என் ரசனையென ஒப்புக்கொண்டேன் ...

என் காலடிப் பூனை 
சிரிப்பது போல் தோன்றியது...
பூனைகளின் மீசை அவ்வாறு 
போலிக் காட்சி காட்டுவதைத் தான் 
காட்சிப் பிழை என்றாயோ.....
-

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...