கண்ணீர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்ணீர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், அக்டோபர் 15, 2018

துயரத்தின் படம்

ஒரு அழுகை எப்படியிருக்க வேண்டுமென 
உங்கள் மனதில் ஒரு சித்திரம் இருக்கிறது
கற்பனையாகவோ
கற்பிதமாகவோ
ஒரு துளி கண்ணீர் 
அக்கோட்டிற்கு 
சாய்கோணத்தில் இறங்குவதை 
உங்களால் சகிக்க இயலாது
என்றாலும்
துயரத்தின் படம் வரைந்து பாகம் குறித்த
 உங்கள் தாளை
எப்படித்தான் ஒவ்வொருவரிடமும் நீட்டுவது


திங்கள், நவம்பர் 07, 2016

இதுவும் அதே ஏன்தானா

ஏன் இழந்தவற்றுக்காக
வருந்தவேண்டும்
ஏன் தவறியவற்றை நினைத்து
 தலையிலடித்துக்கொள்ள வேண்டும்
ஏன் கடந்தவர்களை நினைத்துக்
கண்ணீர் விடவேண்டும்
ஏன் உளறல்களை நினைத்து
கொதிக்க வேண்டும்
ஏன் பித்துகளை தக்கவைக்க 

இப்படித் தவிக்க வேண்டும்
ஏனென்று தெரியாதவற்றையெல்லாம்
ஏனிப்படி ....


கடந்த எழுத்து

சென்ற காலங்களில் சிந்திய புன்னகை
காற்றிலேயே 
கரைந்து போயிருக்குமென்று நம்பியிருந்தேன்
அதே பருவத்தின் திரும்பலில் 
ஒரு முல்லைப்பூ இப்படி 
அகழ்ந்தெடுத்துக் கடைபரப்பி
அழவைக்குமென அறியவில்லை
பழைய காகிதங்களைக் கழிக்கும்போது 
திடுமென ஒரு கையெழுத்து பாதி அழிந்து
மீதி அழிக்க கண்ணீர் 

பொங்குமெனத் தோன்றவில்லை
கடந்தவையெல்லாம்
கடந்து விடுவதில்லை




சனி, அக்டோபர் 24, 2015

வருத்த வருத்தம்

இறந்தவர்
கடைசியாக என்னமனநிலையில்
எந்தவிளிம்பில்நின்றார்
என்பதை அறியாமல்
துக்கம் கேட்கப்போவது
பெருந்துயரம்
அன்றையநாளின் குலைந்த கிரமமோ
உச்சந்தலைக்கருகே உரசும் வாள்
நிர்ப்பந்தங்கள் கொண்டுநிறுத்தியிருக்கும்
இக்கையறுநிலையில் துளிர்க்கும்
உங்கள்கண்ணீரை
அவருக்கான துயரமாக மாற்றிப்
புரிந்துகொண்ட
எவரேனும் உங்களை
ஆற்றுப்படுத்தக்கூடும்
வருத்தத்தைவிட சௌகர்யமாகக்கூட
நீங்கள் உணரலாம்
பந்தலிலே பாவக்கா பாடல்
நினைவுக்குவருமுன்
எழுந்துவிடுங்கள்
சாவுவீட்டில் சொல்லிக்கொள்ளாமல்
போகலாம்
இல்லாவிடில் புன்னகைத்துத்
தொலைக்கப்போகிறீர்கள்


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...