வெள்ளி, டிசம்பர் 19, 2014

உமா மோகன் கவிதைகள்-அதீதம்

1 கேளாமனம்

ஆசைதான்
எல்லோருக்காகவும் பிரார்த்திக்க
கைஎன்னவோ
வழிநடையில் சுவர் தாண்டி
நீட்டிக்கொண்டிருக்கும் செம்பருத்தியை
வீட்டு மாடத்தில் பூசிக்கப்
பறிக்கிறது

2 விலங்கு 

ஒரு கேவல்
எழும்பி
வெடித்தால்தான்
என்ன

3 படைப்பாளி

கவிதை எழுதி நீண்ட காலமானது
ஆரஞ்சு நிறத்தில் காரட்
சிறுவேர்சூழ் சிவப்புமுள்ளங்கி
ஓடடைந்த புளி
உருண்டு உதிரும் நெல்லி
மணக்கும் பசிய மல்லி

கழுவி ஆய்ந்து அடுக்கி ..
இதன் ஒரு கீற்றையும்
படைக்க இயலா வெறுமையுடன்
இன்றும் ஏடு மூடவேண்டியதுதான்
***

டிசம்பர் இரண்டாம் இதழ் 2014


புதன், டிசம்பர் 10, 2014

அன்புடை நெஞ்சம்...


எனக்கு கம்பீரம் 
உனக்கு திமிர் 
எனக்கு எரிச்சல் 
உனக்கு ஈர்ப்பு 
எனக்கு அதிசயம் 
உனக்கு அனாவசியம் 
கான்க்ரீட்டில் பொழியும் நீர் போல் 
வழிந்தே போகிறோம் 
கழுவிக் கழுவி ஊற்றும் வாழ்க்கைக்கு 
இது போதும் 
என்ன...
நீர் எப்போதும் நீயல்ல 
நான் எப்போதும் தரையல்ல 

பங்கு
கப்பக்கார வூடு என்ற பெயரை 

நிலை நிறுத்த  அரசுமாமா 
கப்பல் செதுக்கிய  வீடு கட்டினார்
அதற்கு எதிர்வீடாகிய அந்தஸ்தே 
போதுமாக இருந்தது எங்களுக்கு 
குண்டான்களில் சொட்டிய மழைநீரும் 
ஒற்றைத் தாழ்வாரம் முழுக்க 
புழுக்கைபோடும் ஆடுகளும் 
எப்போதும் புகைவிசிறும் அடுப்படியும் 
கொடிகளில் தழைந்து தொங்கும் 
பழந்துணிகளும்வெடித்த தரையும் 
இருந்தபோதும் 
முறைவைத்து அழைக்க முடிந்தது.
அரசுமாமாவை .
க்ளாஸ்கோ ரொட்டியை
எங்களுக்கும் பங்குவைக்க
மறந்ததே இல்லை  மீனா அத்தை 

சகலமும் உள்ளடக்கிய 
புதிய நகரியத்தில் 
அங்கிள் ஆண்டிகளின் கால்புன்னகை 
கண்டே வளரும் பிள்ளைகள்
அதிலும் கால் புன்னகையே வீசுகிறார்கள் 
அரசுமாமா 
க்ளாஸ்கோ ரொட்டி 
கப்பக்கார வீட்டின் எதிர்வீடு 
எதைச் சொன்னாலும் .....

செவ்வாய், டிசம்பர் 09, 2014

முகம் தேடுகிறேன்கதுப்புகளில் சதை பற்றாத காலத்தின்
கறுப்புவெள்ளைப்படம் 
தேர்வின் அச்சம் வழியும் 
ஹால் டிக்கெட் படம் தொடங்கி 
சுற்றுலாக் கணங்கள்  
திருமணக்கோலம் 
நட்பு,உறவு எவ்வளவோ படங்கள் 
வயதுகளின், தருணங்களின் 
சாட்சியாய் ..
யார்யார் வீட்டிலோ ,
விருந்திலும் விழாவிலும் 
சேர்ந்துநில்லு...சேர்ந்துநில்லு...
முன்னே வாங்க இப்பிடி ..
உபசரிப்பும் தர்மசங்கட நெளிவும் 
எப்படிப் பதிவாகின 
 காணக் கூடுவதில்லை  பிறகு 

கண்ணாரக் காண்


உண்மையைச் சொல் 
உண்மையைச் சொல் 
என்கிறாய் 
உண்மையைத்தான் சொல்கிறேன் 
வேலியோரத் தும்பைப்பூவையும் 
அகன்ற திரையில் 
உருப்பெருக்கிப் பார்த்தே 
அறிந்துகொள்ளும் உன்னிடம் 
எப்படி விளக்குவேன் 
உண்மை இதுதான் 
இவ்வளவுதான் என்று......


10 12 14 விகடன் சொல்வனத்தில் வெளியான கவிதை 
படம் -நன்றி ராமலக்ஷ்மி ராஜன் 

திங்கள், டிசம்பர் 01, 2014

தெரியாதிருந்ததுஒரு பார்வை,ஒரு தொடுகை,
ஒரு புன்னகை,
ஒரு தலையசைப்பு ,
ஒரு "ம் 
எதையாவது உதிர்த்து 
ஒரு சுடரை ஏற்றமுடியும் 
என்று தெரியாமலே இருந்தது...
தெரிந்திருந்தால் 
பொருட்படுத்தியதன் அடையாளமாக 
ஒரு வசவையேனும் ..எறிந்திருக்கலாம் 

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...