யானை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யானை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், அக்டோபர் 16, 2018

கனவு செருகிய எறவாணம்

எதை நோக்கிதான் இத்தனை நடப்பது
சிறு அரளிக்கிளையை ஊன்றிக்கொண்டு
நடைக்கு கூட கசப்பேறிய பின்னும்

**********************************************************
கனவுகளைச்செருகிவைத்த எறவாணம் 
யானைவிரட்டலில் பிய்ந்துபோனது
குப்பை வாருவதில் நிற்கிறது கைவண்ணம்

**************************************************************

திரளும் கண்ணீரைத்
தொட்டு தொட்டு ஒற்றிப்பிழிந்து
நீர்வார்த்த முல்லையின் நிறம் 

அப்படித்தான் இருக்கும்

***************************************************************
பழமுதிரிலோ,உழவர் சந்தையிலோ 
பேரம் பேசியோ பேசாமலோ 
நீங்கள் வாங்கும் சுரை எல்லாம் 
முற்றித்தான் இருக்கிறது
இற்றுப்போன பால்யத்தின் 
கூரையில் எக்கி எக்கி
இழுத்துப்பிய்த்த சுரைப்பிஞ்சின் 
மென்மையை நினைவில் கிடத்தியிருக்கும்வரை

அந்தப்புறங்கையில் பாருங்கள்
அதே பனித்துளி

****************************************************************************

திங்கள், டிசம்பர் 04, 2017

கட்டைவிரல் கீழ் யானை

கண்முன்னால் நின்று கொண்டிருக்கும் யானை 
துதிக்கை தூக்கி பிளிறுமுன்
இதோ 
இந்தக்கட்டைவிரல் நுனியால் 
அழுத்திவிடலாம் போலத்தான் இருந்தது

*************************************************************
சுரைக்கொடி யோசிக்கவில்லை 
கூரை கிடைக்காது குப்பைகளோடு பிணைந்து படர
யாரோ ஒதுங்கிய இடமென்ற
கவலை 
அந்தப்பிஞ்சுக்குமில்லை

*************************************************************
ஏதாவது சொல்லியிருப்பாய் 
என்ற சமாதானத்தோடு புலன் தீட்டுகையில் 
மௌனத்தின் கல்லை அழுத்தி 
அடைத்துவிட்டுப் போனாய்
குகை இருளுக்கு வெளியே அதிரும் முழக்கங்கள் 
யார் கேட்க
இங்கோ ரும் ரும்மெனச் சுற்றுகிறது
மிச்சம் வைத்த மூச்சு

****************************************************************





முளைக்குச்சி உடைவதையும் 
கயிறு நைந்து அறுவதையும் 
யாரும் உவப்பதில்லை
சுற்றுக 
அனுமதிக்கப்பட்ட தூரம் மட்டும்
உன் கயிற்றின் விட்டம் உன் உலகு
எனதும் 
நாம் அடித்த முளைகளின் மேலிருக்கட்டும் 

எப்போதும்
ஒரு கண்

****************************************************************

எதைக்குறி பார்ப்பதென்றே
முடிவுசெய்ய விடாமல்
கரகரவென்று சுற்றும் சக்கரத்தின் முன் 

அம்புடன்
நிற்கிறது வாழ்க்கை


*****************************************
குமுறிக்குமுறி புரளும் நினைவுகளைப் 
புதைத்துவிட்டு 
மேலே இரண்டு நித்யகல்யாணிச்செடி வளர்த்து
வசவுகளை வார்த்தே வந்தாலும்
அதுவும் சிரிக்கிறதே
பூ மனசுதான்


***********************************************************************************



திங்கள், ஏப்ரல் 04, 2016

ஏப்ரல் பூ-2

முகங்களைப் பாராதபோது 
ஓடிக்கொண்டிருக்கிறது
ஒரு நதி
காகிதங்களைக்கிழித்து
படகு செய்து விளையாடிக் 
கொண்டிருப்பவன்
ஒருமுறை கூடவா பார்க்கவில்லை
அதில் இருந்த ஓவியங்களை

**************************************************
ஒரு காட்டின் படம்
யானை போலவும்
ஒரு யானையின் படம்
காடு போலவும் புலப்படுகிறது

படம் காட்டும் வாழ்வுதானே
********************************************
ரயிலின் சன்னல்களை
இறுக்கி மூடுபவர்களை
ஏறி அமர்ந்த உடன்
உணவுப்பொட்டலம் பிரித்து
வாழ்வின் கடைசி உணவுபோல திணிப்பவர்களை
அலைபேசி வழி பிரதாபங்களே துணையானவர்களை
இறக்கி விட்டுவிடுங்கள்
அந்தப்பெட்டிகளெங்கும்
குழந்தைகள் ஏறட்டும்
அசையும் கைகளால்
பாதைகளெங்கும் புன்னகை கீற
************************************************

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...