குவளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குவளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், அக்டோபர் 05, 2020

வாழ்வின் நெஞ்சில் ஒரு மிதி

 

புதிய சுவற்றின் வண்ணத்தில் தார்கொண்டு
ஒரு கட்டம் வரைந்து போகிறவனை

நிறுத்திவைத்த
புதிய வாகனத்தில்
கோடுகிழித்துப் போகிறவனை

சொல்லும் சொல்லைத் திருப்பிப்போட்டு
துப்புகிறவனை

தன்கழுத்துக்கும்
கத்தி என்றாலும்
கைப்பிடி அழகைப்
பாடுகிறவனை

சகித்துக் கொண்டு
நடக்க வைக்கும்
வாழ்வின் நெஞ்சில் ஒரு மிதி
மிதிக்க வேண்டும் 

*********************************************

 என்றாவது ஒருநாள் பூத்துவிடும் என்ற நம்பிக்கையில்
நீர் வார்த்துக்கொண்டே இருக்கிறேன்
தாவரவியலின் எல்லா விதிமுறைகளின்படியும் 
வளரும் செடிக்கு
நான் ஒரு பொருட்டில்லை
உலகம் முழுக்க அதை வளர்க்கிறார்கள்
இங்கு மட்டும்
கூர் முள்ளோடு நின்றுவிட யார்கட்டளையோ

****************************************************************

ஆற்றில் நீர் ஓடுகிறதா

மண்டைக்குள்ளா
மனசுக்குள்ளா
எனப்புரியாத
குடைச்சல்
குவளை நீரில் கரைய வாய்ப்பில்லை
பாய்ந்து நீராடுவதில் பதட்டம் உண்டு
பழக்கமும் போய் விட்டது
படிக்கட்டில் நின்றபடி
பக்கச் சுவரைப் பிடித்தபடி
நெளியும் மீன்கள் கடிக்காதபடி
கணுக்கால் வரை நனைத்துக்கொண்டு
திரும்பிவிடுவேன்

இதற்கு ஆறு எதற்கு
குவளை நீரே போதாதோ
முகம் சுழிக்காதீர்கள்

அவ்வளவுதான்

ஆனாலும் வேண்டும்

ஆற்றில் நீர் ஓடுகிறதா

திங்கள், அக்டோபர் 15, 2018

குவளையால் நிரம்பும் ஆறு

வலிகளையும் நினைவுகளையும் 
இருபுறமும் இட்டு 
முள்ஆடுகிறது
இப்புறமும் அப்புறமும்
************************************************
எல்லாவற்றையும் ஏற்றிஅனுப்பிவிடலாம்
ஒரே தோணியில்
இந்தக்குவளையால் ஆற்றை நிரப்பியபிறகு

*******************************************************
வயலுக்குச்சென்று வருமுன் 
எழும்பிவிட்ட புதிய சுவரின்முன் 
தவிக்கிறது கிணற்றுத்தவளை
உங்களுக்குப் புதிய நடனம் பிடித்திருக்கிறது

*********************************************************
மரத்தை எடுத்துச்செல்ல 
இயலாப்பறவை
பிரதிசெய்கிறது சுள்ளிக்குச்சியால்
**************************************************************
தற்செயலாக உதிரும்பூக்களைப் 
பார்த்து 
திசைமாறுகிறது காற்று
எட்டித்திருப்புகிறது உன்நிழல்
********************************************************

திங்கள், அக்டோபர் 31, 2016

இதுவும் பண்டிகைதான்

யாருடைய கருணைவழி 
பண்டிகை கொண்டாட்டத்தையோ நம்பி 
வேகின்றன பலகாரங்கள்
யாருடைய கனிவையோ நம்பி
காத்திருக்கின்றன 
மலிவுவிலைப் புத்தாடைகள்
சேரந்து கொண்டாட வந்திருக்கும் 
பண்டிகை பற்றி உணர்விலா
உறவுகளின் வீம்பில்
சில கண்ணீரத்துளிகளை
அடுப்பின் தீயில் சொரிந்து
கருணை காக்கும் தெய்வங்களின்
அருளாசியில்
நிரம்புகிறது குவளைகளின் இலக்கு
கோடிகளை விருப்ப நாயகன்
இழக்காதிருக்க ஓடிக்கொண்டிருக்கிறான் 

வந்த மகன் வெந்த பலகாரச்சுவையறிய
நேரமின்றி
யாருக்காக..இது யாருக்காக
எந்த நாளில் பாடியிருக்கிறாள்
அவள்
ஆயிற்று தீபாவளி



செவ்வாய், அக்டோபர் 04, 2016

குவளை நிரம்பும் காலம்

மெள்ள மெள்ள
சொட்டுச்சொட்டாக
நிரம்பிக்கொண்டிருக்கிறது குவளை
அதன் நிறம் சிவப்பாக இருக்குமோ என்று 
ஆவலா நடுக்கமா
என்பதில் இருக்கிறது
நீங்கள் ஆனந்த் ஆ என்பது
மற்றபடி நீங்கள் 600 சதுர அடி
2bhk என்றாலும் லதா அதிர்ச்சியடைய மாட்டாள்
ஏனென்றால்
அவள் லத்தா,"

வியாழன், ஜனவரி 07, 2016

துரத்தும் திரவம்


தொட்டி நிரம்பி நீர்வழியத்
தொடங்கியிருந்தது
நீர்த்தாரை எத்தனை அழகு
எத்தனை உயிர்ப்பு
என்னவோ எங்குவிழும்சொட்டும்
கையிலேந்த அழைக்கும்
குவளையால் செடிகளுக்கு
வார்த்தபோதும்
வாய்க்கால்வழி வரப்புவழி
பயிர்நனைத்தபோதும்
ஒவ்வொரு துளியின்சலனமும்
என்வழி உயிர்வளர்ப்பதான பெருமை
தும்பைமேல் வீற்றிருந்த துளியை
மெல்லஇடறிவிட்டுப்போகையில்
யாதொரு குற்றமும் இருந்ததில்லை
வழியும்நீர்
அழிவின்நிழல் போல்
ஆயிரம்ஆயிரம் கிளைகொண்டு
பெருகிப்படர்ந்து
அச்சத்தின் சிறையில் தள்ளுகிறது
இனிஒருநாளும்
செடிகளுக்கு நீர்வார்த்தல்
இனிய
மாலையின் நிகழ்வாயிருக்கப்
போவதில்லைஎனக்கு
விக்கித்து நிற்கும் கையிலிருந்து
நீர்க்குவளை வாங்கி
வார்க்கிறாள் கண்ணம்மா
நீர்கொண்டோடிய உறவின் முகங்கள்
நீரில் தெரியாதபடி
கண்ணை இறுக்கிக்கட்டிக்கொள்
என்னைப்போல் என்றபடி

சனி, டிசம்பர் 07, 2013

நனவிலி

உன் சொல்லுக்காகக் காத்திருக்கிறேன் 
புதிய மொழி கற்றவன் 
எழுத்தெழுத்தாக இணைத்துப் பார்த்து 
மனசுக்குள் உச்சரித்து ஒத்திகை பார்த்து 
வெட்கமோ ஆர்வமோ தெறிக்கப் பேசுவது 
போல் 
நீ அன்பின் மொழிக்குள் 
அமிழ மாட்டாய் ...
தெரியும்...
வறுமை உணவே ஆடம்பரமாக்கியபோதும்
ஆவல் தின்பண்டக் கனவு தராதா என்ன....
நான் கனவிலிருக்கிறேன் ...


வெற்றுக் கோப்பைகளுடன் 
நீ வாசல் திறக்கிறாய் 

செவ்வாய், ஏப்ரல் 09, 2013

வண்ணம் வளர்ப்பேன்




ஒரு சோப்புக்குமிழுக்குள்ள 

உரிமையாவது வேண்டாமா....?



உன் கற்பித  நிறங்களைக்
கவிழ்த்துக் குழப்பித்
தீற்றி
த்தடவி
என் வானவில்லை
வரையாதே ..


ஏழு நிறங்களுக்கும்
இடம் வேண்டுமே
என்பது  உன் பொய்க்கவலை.


இரண்டே நிறக் கீறலையும்
வானவில்லாக
வளர்த்துக் கொள்வேன்..
விலகிப்போ...உன் குழம்புக் குவளைகளோடு..!

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...