பூங்கொத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பூங்கொத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், அக்டோபர் 25, 2021

வளையத்திலிருந்து வெளியேறியவள்

     வட்டவடிவ மரவளையத்துக்குள்

பழக்கூடை, கிளி,பூங்கொத்து என்று

எதையாவது பின்னிக்கொண்டே இருப்பாள்
விஜிஅக்கா
பழம் எந்த ஓரம் சிவந்திருக்கும்
கிளியின் மூக்கு எப்படி வளைந்திருக்கும்
இலை ஓரங்களின் வளைவும் நுனியும்
எப்படி வேறுபட்டிருக்கும்
எல்லாம் அத்துபடி
திரைச்சீலைகளாக மேசை விரிப்புகளாக அவள் வளர்த்துவிட்டுப்போன கிளிக்கூட்டத்தை
அடுக்கிவிட்டுப்போன கனிவர்க்கத்தை
ஆசையாய்க் குசலம் விசாரிக்கிறாள் அம்மாவிடம்
இதே படங்கள்தானா
எனச்சலிப்பு காட்டிய தங்கையிடம்
முன்னொருநாள்
சொல்லியிருந்தாள்
புதிய இடம் புதிய ஊர்
தன் கற்பனையை வளர்த்தெடுக்கும் என்று
தங்கைக்கு செய்தி உண்டா
அன்னை கேட்கிறாள்

இங்கு அந்த மரவளையங்களே கிடைப்பதில்லை அம்மா...
திரைச்சீலை,விரிப்பு இடும் வழக்கமும் இல்லை
என்பதைச்சொல் அவளிடம்




புதன், அக்டோபர் 09, 2019

நினைக்கத் தெரிந்த மனமே

இன்னும் இதெல்லாம் தெரியாதா
என்ற கேள்வியைப் 
பூங்கொத்துபோலத் தலையசைத்துப் 
பெற்றுக்கொள்ளுங்கள்
நன்றி சொல்லுங்கள்
அதுதான் எதிர்மரியாதை
*******************************************
நீதானே சொன்னாய்
கேட்குமுன் ஒருதயக்கம்
வந்துவிட்டதா
வரட்டும்
நான் என்பது நீயாகவே இருந்த நாளில் 
சொன்னதை
எப்படி அப்படிக் கேட்பது

***************************************************
உணர்ச்சிபூர்வமாகப் பேசுவது 
இப்போது நாகரிக நடைமுறையில்லையாம்
குறிப்பாக
வலிகளை
வருத்தத்தை
நன்றியை
மறதியை...

ஆங்
நினைக்கத்தெரிந்த மனமே
பாட்டு ரொம்ப பழசாகிவிட்டது

***********************************************************
உன்னோடான பிணக்கு
எப்போது தீரும்
எப்படி எங்கே...
அதற்குள் என்னோடான
என் பிணக்காவது தீர்ந்தால் நல்லது



புதன், செப்டம்பர் 25, 2019

வேலையாம் வெட்டியாம்

எதிர்மனையில் ஒரு வேப்பங்கன்று
நான்பார்க்க எழுந்ததுதான்
ஒரு மாடிஉயரம் தாண்டும்போதும் 
எனக்கு கன்றுதான்
உளைச்சல்களின்போது உரையாடத்
தோதான துணை
போதுமான தூரம்
மின்வடத்தில் இடித்தகிளையை
யாரோ கழித்து விட்டார்கள்
அன்றாடத்தழையை 
யாரோ கூட்டித்தள்ளுகிறார்கள்
என்னோடுதான் உரையாடுகிறது
கண்டுபிடிக்க இயலாதபடி 
உட்கிளைக்குள் குயிலை அமர்த்திக்கொண்டு 
என்னை எழுப்புகிறது
எட்டு பத்து குருவிகளின் 
கோலாகலக்கூச்சல் 
இளங்காலையை இணக்கமாக்கும்
பாதணிகளைப் பொருத்திக்கொண்டு 
இறங்குமுன் பார்த்தேன் 
மிச்சமிருக்கும் ஒற்றைப்பூங்கொத்தை 
எனக்காகவே ஆட்டிக்கொண்டிருக்கிறது
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வோ
வேலையாம் வெட்டியாம்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...