தீபாவளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீபாவளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், அக்டோபர் 31, 2016

இதுவும் பண்டிகைதான்

யாருடைய கருணைவழி 
பண்டிகை கொண்டாட்டத்தையோ நம்பி 
வேகின்றன பலகாரங்கள்
யாருடைய கனிவையோ நம்பி
காத்திருக்கின்றன 
மலிவுவிலைப் புத்தாடைகள்
சேரந்து கொண்டாட வந்திருக்கும் 
பண்டிகை பற்றி உணர்விலா
உறவுகளின் வீம்பில்
சில கண்ணீரத்துளிகளை
அடுப்பின் தீயில் சொரிந்து
கருணை காக்கும் தெய்வங்களின்
அருளாசியில்
நிரம்புகிறது குவளைகளின் இலக்கு
கோடிகளை விருப்ப நாயகன்
இழக்காதிருக்க ஓடிக்கொண்டிருக்கிறான் 

வந்த மகன் வெந்த பலகாரச்சுவையறிய
நேரமின்றி
யாருக்காக..இது யாருக்காக
எந்த நாளில் பாடியிருக்கிறாள்
அவள்
ஆயிற்று தீபாவளி



சுற்றிய மத்தாப்பூ

எத்தனை தீபாவளிகளைக் கடந்துவிட்டோம்
தூங்கிவிழுந்தபடி மருதாணி வைத்துக்கொள்வதும்
தைக்க கொடுத்த பாவாடை 
கைக்கு வருமா என்பதுமே 
கவலையாக இருந்த தீபாவளிகள்
வளையலோ,பொட்டோ வாங்கிக்கொள்ள 
நமஸ்காரங்கள் கைகொடுத்த தீபாவளிகள்
மழை கெடுத்த பண்டிகையை
உள்வீட்டு சங்குசக்கரங்களோடும்
பொட்டுவெடிகளோடும் கடந்த
தீபாவளிகள்
கண்ணில் விழுந்த அரப்புத்தூளை
மறந்து அதிரசம் ஏந்திய 

கைகளில் நிரம்பிய தீபாவளிகள்
அவ்வருட உறவின் இழப்பு 

செலவைக்குறைத்த நிம்மதியில்
பெரியோர் இருக்க 

அர்த்தம் ஏற்காது
அழுகையினால் முகம் வீங்கிய
தீபாவளிகள்
பாதி வெந்த நேரம் முதல்
பள்ளியிலிருந்து திரும்பும் நேரம்வரை 

முறுக்கு கிறுக்குகளாய்ச் சுற்றிய தீபாவளிகள்
ஒற்றைப்புத்தாடையை காட்டிமகிழவே 

பள்ளிவேலைநாளுக்கு காத்திருந்த தீபாவளிகள்
கண்டதும் அதிகமில்லை
தின்றதும் அதிகமில்லை
உடுத்தியதும் ,படுத்தியதும்
அதிகமில்லை
மிட்டாய்ப்பெட்டி சுமந்து
அன்றாட உடுப்போடு ஊர்சுற்றவும்
உலகுசுற்றவும் கற்ற மக்களே
நினைவுகளே அதிகம்
எங்களுக்கு


படம்இணையத்திலிருந்து 
எஸ்.இளையராஜாவின் தூரிகை  



திங்கள், நவம்பர் 02, 2015

கமல்ஹாசன் சொல்லாத தீபாவளி




ஈர அரிசி  இடிக்கும் கைப்பாறை,
முறுக்கு உரல் ,பெரிய வாணலி
பூந்திக்கரண்டி ,சல்லடை
இரவல் சுற்றுக்குத் திட்டமிடல்
தூறல் நடுவேயும் ஒண்டி ஒடுங்கி
எங்காவது காயவைத்து
முறுக்குமாவு ,கடலை மாவு
அரைத்துவிட்டால் தீபாவளி ஆரம்பித்துவிடும்
ஆத்தாவுக்கு

சைக்கிளில் சேலை மூட்டை கட்டி
கூவிக் கூவிப் பார்க்கும்
தவணைக்காரர் அப்போவெல்லாம்
கூவவே வேண்டாம்
வரும் நேரம் விசாரித்துக் காத்திருக்கும்
திண்ணைகள்
அவர் கட்பீஸ் கடை போட்டபோது
வாழ்த்திவிட்டு தவணை தொடர்ந்தது

நாலு மணிப் படையலுக்கு
மூன்று மணிக்குத்
தையல்காரரிடம் மல்லுக்கு நின்று
குட்டிப்படைகள்
தூக்கக் கலக்கத்தோடு வாங்கிவருவது
பெரும்பாலும் சீருடையாகவே இருக்கும்

வெடிக்கடை விளம்பரத்தில்
கடை மேல் பெருக்கல் குறி போட்டு
கடல் என்று அச்சிடும் புதுமையை
வியந்தாலும்
மீதவெடிக்கு ஏலம் கேட்கவும்
அதே பின்னிரவுதான் ஏற்றது
அதுவே சொற்ப காசுக்கு ஏற்றது
குப்பை அதிகம் வரும் வெடிபற்றி
அதிகம் எரியும் பூத்திரி பற்றி
கற்ற விவரமெல்லாம்
கவனம்  இருக்கும்

செய்வதில் நாலு முறுக்கு ரெண்டு அதிரசம்
மூணு உருண்டை பகிர்வதே
சவ்வுத்தாள் உறையில்லா ஏனங்களின் காலம்
அட்டைப்பெட்டி இனிப்புகளும்
சாக்லேட் பெட்டிகளும் கனவில் கூடப்
பார்த்ததில்லை

உள்ளூர் லாலா கடைகள் ,வறுகடலை வியாபாரம்
எல்லாம் வீடுகளின் தீனி முடியும்வரை
காற்றுதான் வாங்க முடியும்
திரையரங்குகளின்
கடலைமிட்டாய் ,பொரியுருண்டைக்கும்
விடுப்புதான்

இந்த சீசனில்
சொந்தம் பார்க்கப்போவதும்
சுலபம்
தீபாவளிக்குத் தப்பித்தவறி துணிவாங்கிய
மஞ்சப்பையில்  பொட்டலம் கட்டிப் புறப்படலாம்

பருத்தி சேலைகள் எங்களுக்காகவும்,
நைலக்ஸ் சேலைகள் வசதியானவர்களுக்காகவும்
விற்கப்பட்டன.
வேட்டிகளைப் பற்றி பேச்சே இல்லை
கதரோ ,கரையோ,நாலோ,எட்டோ
போகிறபோக்கில் ...

கமல்ஹாசனும் ,கார்த்தியும்,
காஜலும்,த்ரிஷாவும்
சொல்லாதபோதும்
தீபாவளி கொண்டாடிக் கொண்டே இருந்தோம்



இப்பொழுது
சொந்த ஊரிலேயே
பட்டணக் கடையின் கிளைகள் உண்டு
நாலாயிரத்தில் தொடங்கும்
பருத்திப் புடவையை விரித்து
கிரேட் லுக் மேடம் ஹைபை யா இருக்கும்
என்றெல்லாம் கவர்வது
கட்பீஸ் கடைக்காரர் மகன்தான்
சமீபத்தில் பழகிய கழுத்துப்பட்டியை
தளர்த்த முடியாமல் சிரிக்கிறார்
முடிந்தால் வீட்டுக்கு அழைக்க வேண்டும்
நண்பர்கள் அனுப்புவதில்
சுமாரான கடையின் இனிப்புப் பெட்டியில்
ஒன்றைக் கொடுத்து அனுப்பலாம்.

பூனம் பக்கம் பார்க்கவேண்டும்
வேலைக்காரிக்கு புடவை என்றேன்
வழியில் கல்யாண மண்டபத்தில்
எதைஎடுத்தாலும் இருநூறு
பேனரின் நைலான் பாலியெஸ்டர்
விளம்பரம் நினைவூட்டினாள் அக்கா



ஏனம்-பாத்திரம்







வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...