abhi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
abhi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஏப்ரல் 01, 2012

அபி உலகம் -9


நீண்ட கால் முயல்,

சிலிர்க்கும்

பிடறியோடு மான்,
யானை இளைத்து
முழு மஞ்சளில்...
"இப்படியா வரைவாங்க.."
அம்மாவுக்கு அபியின்
பதில் ,
"வரைவாங்ங்களே".....!
கடவுள் ஆதியில்
வரைந்தபோது
யார் சரிபார்த்தது...?
*****************************
தேவதை வேடமாம்
அபிக்கு நாடகத்தில் !
அட்டை சிறகுகளை
அகற்றிவிட்டாலே
போதுமே...

சனி, மார்ச் 24, 2012

அபி உலகம் -8

துரத்தும் தெருநாய்                                            
அபியிடம்
தனியாய்க் குழைய
அம்மா நினைக்கிறாள்
குழந்தைக்கான பரிவு என்று.
அவளுக்குத் தெரியாது
வீட்டின் செல்ல நாய்த்தீனியில் 
பாதி
ஜன்னல்வழி வெளியேறுவது.......
**************************
களிம்பும் கையுமாய்
அபி வாசலில்......
வெளுத்த புள்ளிப்புண்ணோடு
கடைத்தெருவில்
காசுவாங்கிய யானையை
அப்பா
எங்குபோய்த் தேடுவாரோ    

திங்கள், மார்ச் 12, 2012

அபி உலகம் -7

அபிக்கு மிகப் பிடிக்கும்
திராட்சையோ
கல்கண்டோ
காலை மறந்தாலும்
மாலை வரை
தின்னாமல்,திட்டாமல்
ஈ ,எறும்பு,
அண்டாமல்
காத்திருக்கும்
அலமாரிப் பிள்ளையாரை!
***************************
மழைக்கால மரவட்டையின்
குறுக்கே
குச்சி நீட்டினான் ஜீவா...
சுருண்டு சுருண்டு
திரும்பிக் கொண்டது !
"நேத்து,ரயில் ஏன்
சித்தப்பா
இப்பிடித் திரும்பல...."
அபியின் கேள்வியில்
தண்டவாளத்தில்
குண்டு வைத்துத்
தகர்ந்த ரயில்
நகர்ந்து கொண்டேயிருந்தது.....

வியாழன், மார்ச் 08, 2012

அபி உலகம் -6



தாத்தாவும் அபியும் பூங்காவில்...


"சறுக்குமரம் போறியாம்மா?"
"நம்ம தெருவிலே இருக்கே

  

அது என்ன?"
"அது வேப்பமரம்.. "
"தோ...அது... "
"அரசமரம்டா..
அந்தப்பையன் இறங்கிட்டான்...
வாம்மா..."
"இந்த மரத்துல
ஏன் எல(இலை) இல்ல..?"
அன்றுதான் தாத்தா
சறுக்குப்பலகை
சொல்லப்பழகினார்...
***************************
தன் ரயில்
கவர்ச்சி வண்ணங்களில்
இல்லாத ரயிலை
அபி ரயிலென்று ஏற்கவில்லை!
ரயில் மந்திரி முகவரியோ,
ரயில் பொம்மை செய்பவர் முகவரியோ
தேடுகிறார்
அபி அப்பா -முறையிட ...
***************************

செவ்வாய், மார்ச் 06, 2012

வெயில்நதி சிற்றிதழுக்குப் படைப்புகள் அனுப்ப veyilnathi@gmail.com அபி உலகம்-5


  

சரியாகப் படிக்காத
டூடூவின்
காது திருகிவிட்டு
உடனே
தடவிக்கொடுத்தாள் அபி
அம்மாவுக்குப் பாடம்.
*****************************
வண்ணக் குழம்பான
கைகளை ஆட்டி ஆட்டி
அபி பேசிக்கொண்டிருந்தாள்...
வரைந்த சித்திரங்களுக்குப்
பேச்சுப் பயிற்சியாம்...
**************************
பூத்தது ஒற்றைத்தொட்டி
மகிழ்ந்த அபி
நிறைய தொட்டி
வாங்கலாம் என்றாள்.
பரப்பு கருதி
எரிச்சலான அம்மா
நாம எங்க போறது?
என்றாள்..
அதுல ஒரு தொட்டிக்கு ....
அபியின் தலை சாய்ந்த விடையில்
அம்மாவுக்கு
 தானும் அவளும்
இருமலரான உருவம்...தோன்றியது!.

செவ்வாய், பிப்ரவரி 07, 2012

அபி உலகம்-4

அபி குளிக்கவில்லை
இன்னும்...
அப்பா சொன்ன ஆறு 
...
வேண்டுமாம் !
அடுக்ககத்தின் 
ஆறாம் தளத்தில் 
நாலுக்கு ஆறு
குளியலறை வாசலில் 
நடக்கிறது போராட்டம்!
**************************************
மின்விசிறிக்கு 
 
நேராய்ப் படுத்ததால் 
சளி பிடிக்குமென்றாள்
அம்மா...
கரடிக்கும் ஒரு குல்லா 
வேண்டுமென 
கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டாள்
அபி ......
தனக்குக் குளிரவில்லை என 
பொம்மைகள் மேல் போர்த்தியபடி !
**************************************
எட்டுமணி ரயிலுக்கு 
சீட்டு வாங்கிய 
அப்பாவைக் கடிகிறாள் அபி 
"ஒம்பது மணிக்குதானே 
ஜோஜோ வரும் 
சொல்லிக்கொள்ளாமல் 
எப்படிக் கிளம்புவது?.....  ,
ஜோஜோ தினம் வரும் 
பூனை.
 

புதன், ஜனவரி 11, 2012

அபி உலகம் 3

விடுமுறை நாளின்
சித்திரங்கள்
திறந்தன...
இன்றைய வானவில்லில்
நீல நிறத்தையே காணோம்!
வானம் வரைந்தே
தீர்ந்து விட்டதென்றாள் அபி!
**************************
அபிக்கு
யானை,சிங்கம்,
புலி, காண்டாமிருகம் ,
உயரம் குறைவான
ஒட்டைச்சிவிங்கி
எல்லாம் வேண்டுமாம்
கரடியைப்போலவே
உட்கார்ந்து விளையாட....
********************************
நெய்ச்சோறு ,
நூடுல்ஸ் ,பழத்துண்டுகள்,
ஐஸ்க்ரீம் ....
கொஞ்சிக்கொஞ்சி
அபியால் ஊட்டப்படும்
பொம்மைப்  பரிவாரங்களைப்
பார்த்தால்
அம்மாவுக்குப் பயம்தான்
அவை
கேட்டுவிடுமோ என்று...  

செவ்வாய், டிசம்பர் 13, 2011




அபி உலகம்-2
அபி இருப்பதில்லை  
அபி நாயே
அபி சனியனே
அபி எருமை
என்றெல்லாம்
விளிக்கும் வீடுகளில்
அபி இருப்பதில்லை....!
**************************
அவள்
எப்போதும் யாவர்க்கும்
அபிக்குட்டி
அபிச்செல்லம்
அபி பாப்பா 
அபிம்மா....
*****************************
அபியை ஆசீர்வதியுங்கள் 
சுடும் தொடுகையோ 
கொடும்பார்வையோ 
அவள் உடல் மேவாமல் 
குழந்தைமை திருடும் 
அவலம் படராமல் 
பத்திரமாய் 
பருவம் கடக்க....

திங்கள், டிசம்பர் 12, 2011

அபி உலகம்.......

அபிக்குப் புரியவேயில்லை
அக்கம்பக்கம் ,நட்புவட்டம்
ஊரிலிருந்து வரும்
உறவுகளைக்கூட
அவள்
ஆன்ட்டி என்றே
விளிக்கிறாள்.......
அம்மா அழைக்கும்
அத்தை ,சித்தி ,மாமி
பெரியம்மாக்களை
தான்
எப்போது சந்திக்கப் போகிறோம் என...
*******************************

அபிக்கு குழப்பம்
அம்மா போல
சூசன் ஆண்ட்டியும்
சூசன் ஆண்ட்டி போல
அம்மாவும்
புடவை வாங்கினார்கள்
தோடு,தொலைக்காடசி,
நாற்காலி,செருப்பு .....
எல்லாம் வாங்கினார்கள்......
ஆனால்...
தீபாவளி இனிப்பும் ....
கிறிஸ்துமஸ் மரமும்.....?
********************************
அபிக்குப் பிடிப்பதில்லை...
உடைந்துவிடும்
என்று பயமுறுத்தி
அம்மா பத்திரப்படுத்தும்
பொம்மையும் சாமானும்
பரிசளிக்கும்
எவரையும்....
********************************

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...