ஞாயிறு, டிசம்பர் 27, 2020

ஆசுவாசம்

 என்னதான் ஆகிவிடுகிறது இந்த நேரத்திற்கு

ருக்கு பெரியம்மா கால் வெற்றிலையும் காலே அரைக்கால் கொட்டைப் பாக்குமாக அதக்கிக் கொள்வாளே
அந்த காலே அரைக்கால் கொட்டைப்பாக்களவு கிடைத்தால் போதும்
அந்த கவனத்திலேயே ஆசுவாசமாகிவிடும் ************************************************************
சிணுங்கி சிணுங்கி
முக்கால் இட்டிலி சாப்பிட
முப்பது கதை கேட்ட பாப்புக்குட்டி
அத்தனை "தங்கமில்ல'" கொஞ்சலையும் திருப்பிக்கொடுத்துக் கொண்டிருக்கிறாள்
விருந்தாளி குழந்தைக்கு
கொலுவில் நின்ற வாமனர் புருவம் உயர்ந்தது அப்போதுதான்
அடையா நெடுங்கதவம்

 கோடுகளும் கட்டங்களும் மறுதலித்த நாளில் இலைகளும் மலர்களும் பின்னிக்கொள்கின்றன

யாரோ ஒருவன் தறியில் பிசிறு நறுக்கி மடித்த அடுக்கினுள்ளிருந்து
அவன் வீட்டின் ஒட்டடை விழுகிறது
முறத்தால் புடைத்த
களத்திலிருந்து
கருக்கு முதற்கொண்டு கட்டியாயிற்று கெட்டிச்சாக்கில்
உலையரிசியும் திரையிலிருந்துதான்
விளைகிறது
தறி அறுக்கும் கத்தரியோடும்
அரிசி அளக்க ஆழாக்கோடும் உட்கார் உட்கார் ஆன்லைன் திருவிழாவில் ஷட்டர் இறக்குவதில்லை

அளவில் இல்லா உலகம்

 இதோ இதோ ஒவ்வொரு வரியாக நகர்த்தி பட்டென்று கண்விழிக்கிறது அந்த செம்பருத்தி

கூப்பிடு தூரத்தில்
அயர்ந்திருந்த பூனைக்குட்டி
தலை உயர்த்திப் பார்த்து
ஒரு வித்தியாசமுமில்லா
உலகம் என்ற அலட்சியத்துடன்
காலை மாற்றி மடித்து உறக்கம் தொடர்கிறது
***************************************************
உடைந்துவிடும்
கிழிந்துவிடும்
நசுங்கிவிடும்
நொறுங்கிவிடும்
கலைந்துவிடும்
சொல்லியபடியே
ஒவ்வொன்றாய்
பாப்புவுக்கு எட்டா
உயரத்தில் பத்திரப்படுத்தினேன்
வீம்பாய் நின்றவள்
மறுநொடி
பாவாடையை ஒற்றைவிரலில் உயர்த்திக்கொண்டு
ஒரு தாண்டுகுதியோடு ஓடிவிட்டாள்
எப்படித்தொட
இந்த உயரத்தை ***********************************************

எனக்கும் உனக்கும்

 கேட்கும் நிலையில் நீ இல்லையாம்

இப்போது சொல்ல வேண்டாமென
உன் நலம் விரும்பி சொல்கிறார்
அட
சொல்லும் நிலையில் நான் கூடத்தான் இல்லை
அதைப்பற்றி யாராவது வருந்துவதோ அஞ்சுவதோ இல்லையே
நான் கோவமா இருக்கேன் என்பதையும் குழந்தைப்பிள்ளை போல நானே சொல்லிக்கொண்டு
அதற்கு நகைக்கிறாயா என அடிக்கண்ணால் பார்த்துக்கொண்டு...ச்சை
சொல்லமுடியாதொரு உணர்வுப்பெருக்கில் திணறுகையில் என்னை அணுகாது
எச்சரிப்பதற்காகவாவது ஒரு துவாரபாலகர் வேண்டும்...
பார்
எதையெல்லாம் லட்சியமாகக் குறிக்க வேண்டியிருக்கிறது

செவ்வாய், டிசம்பர் 08, 2020

அந்தரத்தில் தொங்கும் கேள்விகள்

 ஸீரோவா

ஜீரோவா என்று
வாதிட்டுக் கொண்டு வீடு வந்த நாளுக்குப்பின்
பள்ளி செல்லவில்லை பாப்புக்குட்டி
நாளைக்கி மிஸ் கிட்ட
கேக்கலாம்னு சொன்னாம்மா மித்து
( அது மித்ராவா,மித்திராவா தெரியவில்லை)
நாளக்கி எப்பம்மா வரும்?
காலடியில் தொங்கும் பாப்புக்குட்டியிடம்
சும்மா தொணப்பாம
போய் விளையாடு என்ற அம்மாவசனம் சொல்லித் தப்புவது எத்தனைநாள் *****************************************************
முன்னங்காலை
வளைத்து சற்றே குனிந்து உற்றுப்பார்த்த நாய்க்குட்டிப் பார்வைக்கு மிரண்டே குழறினேன்
உன்னை அவ்வளவு பிடிக்கிறது அதற்கு
தூக்கு
என்றவள் சிரிப்பில்
பொறாமைதான் பெருகுகிறது
எதைத்தான் சரியாக அடையாளம் தெரிகிறது எனக்கு **********************************************************
திடீரென்று பாதையில் வந்துவிட்டது அந்த குட்டியானை
பக்கவாட்டு சாலையிலிருந்து
பக்குவமின்றி நுழைந்தவனைத் திட்ட முடியாமல்
சற்றே நிதானிக்கிறாள்
பின்னால் வந்து தாண்டும் சக ஈருருளியானுக்கு
ஒரே கேள்விதான்
செருகிவந்த
முந்தானை பறந்தால்
துப்பட்டாவின் முடிச்சு பிரிந்தால்
மணியாயிற்றே என்று சற்று முடுக்கினால்
பெண்ணைப்பார்த்துக்
கேள் என்று
மரபணுவில் புதைத்து அனுப்பிய கேள்வியை மறவாமல் வீசிவிட்டு
திரும்பும் கண்களில் சில
குற்றவுணர்ச்சியில்
தாழ்வதுண்டு
எவ்வளவு தூரம்
தாண்ட

எனக்குப் பிடித்த பாடல்

 வானத்தின் விரிபரப்பைவிட

நீலத்திற்குள் அமிழ உனக்குப்பிடிக்கும்
பிரம்மாண்ட தாரைகளை அண்ணாந்து பார்ப்பதைவிட்டு
உள்ளங்கை குவித்து
ஒழுகும் மழை ரசிப்பாய்
அலையாடு கடல்வெளியின் ஓரம்நின்று
சிப்பி பொறுக்கிச் சிரிப்பாய்
காத்திருக்கிறேன்
என்னை எப்படிப் பார்க்கிறாய் என்றறிய ****************************************************
ஆறுதலான சொற்களைத் தேடிக்கொண்டே
நடந்தாய்
கல்
கல்
கல்
கல்
சரியாய்ப் பிடிக்கும் லாவகம்
கை கூடிவிட்டது *******************************************
ஒரு பழைய ஓவியம்
வரைந்த பொழுதில் கற்பனை செய்திருந்த வண்ணக்கலவைகளை நினைவில் கொண்டு வருகிறது
ஒரு பழைய கவிதை
அதன் கட்டுமானத்துக்குள்
சறுக்குமரம் விளையாடி மகிழ்ந்த வாசகனை
நினைவில் கொண்டு வருகிறது
பழமையினால் மட்டும்
செல்லம் கொஞ்சவில்லை
என்ற ஆறுதலை
ஒரு கரண்டி கலந்து பருகிக்கொள்

நேற்றைய சம்பங்கி

 படரட்டுமெனத்தானே கயிறெல்லாம் கட்டி விட்டீர்கள் அது கைப்பிடிச்சுவர் பிடித்து ஏறுவது அவ்வளவு உறுத்துகிறதா கொழுந்து இலை நாலு கீழே கிடப்பதற்கு அணிலைச் சந்தேகப்படுவதா உங்களையா பிடிபடவில்லை

**************************************

படிக்கட்டில் சுருண்டிருக்கும் நாய்க்குட்டியாக
அவள் பாத வீக்கம்
தற்செயல் பார்வைக்குப்பின்
இழுத்துவிட்டுக் கொண்டாள் கொசுவத்தை
தெரியவேயில்லை
வீசி நடக்கும் நாழி
*****************************************
ஆளரவமற்ற மண்டபத்தில்
ஒரு வௌவால் படபடப்பாவது கேட்கிறதா
இருவாசியைத் தொட்டுவிட நீள்கிறது
அவன் கைத் தழல்
செஞ்சடைப்பிரியிலிருந்து
உதிர்கிறது
நேற்றைய சம்பங்கி ********************************************
சொல்லிக்கொண்டே
இருப்பது மட்டுமல்ல
சொல்லாமலிருப்பதும்
பதில்தான்

**********************************************

அதனதன் கிளை

 சிரித்துக்கொண்டேதான் சொன்னாய் அதுதான் புரியவில்லை

அவமானத்தின் நரம்பை இழுத்து விடும்போது கொஞ்சம் கை நடுக்கி விடுமல்லவா ***************************************************
சோடியாகத்தான் அடுத்தடுத்து
வேர் விட்டிருக்கிறது
ஆயினும்
எப்போதாவது பூக்கும் மனோரஞ்சிதத்திடம்
அனுமதி கோராமலே
பூத்து உதிர்கிறது
நித்திய கல்யாணி
அதனதன் கிளை
அதனதன் வாழ்வு
****************************************************
ஒரு முறை பார்த்துத் திருத்திக் கொண்டிருக்கலாம்
சற்றே வழிந்திறங்கும் கண் மையை
சொல்லத் தோன்றியதைச் சொல்லாமல் விட்டேன்
அவள் நாளைத்
திருத்துவதென்று தொடங்கினால் தீரவே தீராத வரிசையில் இதையும் வைத்தாயிற்று ********************************************

திரிகை மாவு

 எதையெல்லாம் என்னுடையதென்று சொல்வது சுற்றிலும் சுற்றிலும் ஊக்கு சரம் முதல் மணச்சீராய் வந்த பித்தளை அண்டா வரை

என் முகம் பாராது
அதனதன் இருப்பில்
அந்த அண்டா கூடுதலாய்
ஒரு நொடிப்பு நொடித்து
நின்று கொண்டது

என் கேள்வி உணர்ந்து விட்டதோ
*********************************************
எல்லாம் வேறென்ன
இந்த இருளுக்குள்ளேயும்
நான் இருக்கிறேன்
இந்த ஒளிக்குள்ளேயும்
நான் மறைகிறேன்
எப்படியாவது கண்டுபிடி
அல்லது கண்டுகொள்
****************************************
கைப்பிடி கைப்பிடியாகப் பெய்ய
திரிகைக்குள்ளிருந்து
மௌனமாக வீழ்ந்து கொண்டிருக்கிறது
உளுந்து
உடைபட்ட துக்கம் சொல்லாது
என்ன
கொஞ்சம் மாவு பறக்கும்
***********************************************

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...