செவ்வாய், ஆகஸ்ட் 24, 2021

தாட்சாயணி

 வலம்புரிச்சங்கில்

பிறந்தாளாம்
ஆனாலும்
மெழுகிய முற்றத்தில் பிறந்த
எங்க சின்னாயி போலவே
கட்டினவனுக்கும் பெத்தவனுக்கும் நடுவே
சிக்கிச் சிதறியிருக்கிறாள்
தாட்சாயணிதான் சின்னாயி
சின்னாயிதான் தாட்சாயணி
ஆனால் அவள்களுக்கு
அவள்களைத்தவிர
யாரைப்பற்றியோ கவலைப்படதான்
வாய்த்திருக்கிறது

டிக் டிக் குரலில்..

    வேறு வேறு வீடுகளின்

வேறு வேறு நிறச் சுவர்களை அலங்கரித்த
அந்த நீலக் கடிகாரத்தின்படிதான்
வாழ்க்கை நடந்தது
பெரிய முள்ளும் சின்ன முள்ளுமாக எத்தனையோ முள்ளைப் பார்த்திருக்கிறது
அதிகாலை அலாரத்தையும் மீறி
உண்மையிலேயே
நான்கு மணி ஆகிவிட்டதா என
உறுதிப்படுத்திக் கொள்வதற்காக
எட்டிப் பார்க்கும்போது
விடிவிளக்கின் ஒளியில்
ஆமாமா எழுந்திரு
எனப் பரிவோடு சிரிப்பதாய்
நான் பொய்சொல்லி
இன்னும் கொஞ்சம் புரளத் திட்டமா
சோம்பேறி எனச் செல்லமாய்க் கடிவதாய்
நினைத்துக் கொண்ட மறுகணம்
நாளின் சக்கரம் சுழலத் தொடங்கும்

எப்போதாவது விழித்துக்கொண்டு
பார்த்தால்
நேரத்தில் உறங்குவதில்லையா போ போ
எனக் கண்டிக்கும் டிக் டிக் குரலில்....
எட்டியிருந்ததால்
தலையில் தட்டு வாங்காது தப்பித்து
டைம்பீசிடம்
கேலி பேசும் குறும்பு வேறு
இனி ஒன்றும் செயவதற்கில்லை
என்று அம்மாவைக்
கைவிட்டது போலவே
நீலக் கடிகாரத்தையும் கைவிட்டார் ஒருநாள்
இனி எதையும் மாட்ட வேண்டாம்
அவரவர் மொபைல் இருக்க
அசிங்கமாய்த் தொங்கணுமா
இளசுகளின் குரலில்
எழும்பப்பார்த்த பரிசுப்பெட்டிகள்
மீண்டும் உறைக்குள் சுருண்டுகொண்டன
பொட்டல அரசியல்

 நல்லதே கெட்டதோ

போட்டிருக்கும்

கீற்றுப்பந்தலின் மேலே கட்டிய கூம்புவழி
இயக்கப் பாடல்களை
காற்றில் பரப்பிக்கொண்டிருந்தது ஒரு தலைமுறை
வீட்டுக்கஞ்சியைக் குடித்துவிட்டு
பொடிநடையாகக் கிளம்பி
பக்கத்து நகரத்தின்
பொதுக்கூட்டம் பார்க்கச் செல்வதும்
கூலியை இழந்து
கிடைத்த வாகனத்தில் தொற்றி
அலங்கார வளைவுகளை வேடிக்கை பார்த்து
ஊர்வல நையாண்டிமேளத்துக்கு
நின்ற இடத்திலேயே சொடக்கு போட்டு ஆடி
பந்தல் மணலில்
தூங்கி
என்ன பேச்சு...என்ன பேச்சு என்றபடி திரும்புகிறவன்
மறுநாள் வேலைத்தலத்தில்
பாடிக்காட்ட கற்று வந்திருப்பான்
முழக்கப் பாடல்களை
குட்டியானைகளும்
இருநூறு ரூபாய்
நோட்டுகளும்
பிரியாணிப் பொட்டலங்களும்
சாராய பாக்கெட்டுகளும்
நிரம்பிவிட்ட அரசியல் பாதைகளில்
கொள்கை முறுக்கேறிய
குரல்களும் அற்றுப் போயின
காலம் மாறட்டும்

ஆடம்பர நினைவுகள்

      ஊர்ப்பக்க எலுமிச்சையெல்லாம்

உருண்டு உருண்டு விழத்துடிக்க
வாகான குழிக்கரண்டி
வைக்க வகையற்ற
உள்ளூர்ப்பள்ளி
டீச்சர்
ஒவ்வொரு முறையும்
சொல்வார் உங்க வீட்டில இருந்தாச்சும் கொஞ்சம் நல்ல
ஸ்பூன் கொண்டு வாங்கடி என்று
ஊசியில் கோர்க்க
எச்சில் தொட்டுத்தடவி நூல் இழுத்தபடியே
தலையாட்டிக்கொண்டோம்
புதிய டசன் வளையலைக் கும்மிகொட்டி உடைத்துவிட்டு
ஒற்றை சாட்டின் ரோஜாவைப் பரிசென்று கொண்டுவரும் மகள்களை
அள்ளி முத்திடத் தெரியாத அம்மாக்கள்
அடுத்தவீட்டுப் பெண்
உருப்படியா வாங்கிவந்த சோப்புடப்பாவும்
வரவில்லையென்று குட்டினார்கள்
பென்சில்,ரப்பர் ,நோட்டு,
பென்சில்டப்பா,
என செலவைக் குறைக்கும்
பரிசுகளுக்கு வாக்களிக்கவே அப்பாக்கள் விரும்பினர்
நாங்களோ வெறுங்காலோடு
ஓடி
சில்லுபெயர்ந்து எரிந்த தோலுக்குமேல்
குழாயைத் திறந்துவிட்டவாறு
கடித்துக்கொள்ள
ஒரு கமர்கட்டோ
கடலை மிட்டாயோ தரும்
பி டி டீச்சருக்காகக்
காத்திருந்தோம்
தீபாவளிப் பாவாடைக்குமேல்
ரிப்பன்களைக் கட்டிக்கொண்டு
ஆடு பாம்பே
எனச் சுழன்றாடியவளுக்கு
ஜாமெட்ரி பாக்ஸ்
பரிசளித்த ஆசிரியரை
வாய்ப்புக் கிடைத்தால் அந்த காம்பசால்
ஒரு கீறு
கீற சபதம் போட்டான்
அவள் நடனத்தின்
ரசிகனாகிவிட்ட
பக்கத்து வகுப்பு நண்பன்
இப்போதும் சந்தனம் குழைக்க
நான் வைத்திருப்பது
பத்தாம் வகுப்பு
தமிழ்மன்ற விழாவின் பரிசுக் கிண்ணம்தான்
அந்த வருடந்தான்
ஐந்து ரூபாயில்
குட்டி எவர்சில்வர் பாத்திரங்கள் வரத்தொடங்கின.
அப்புறமெல்லாம்
தட்டு தம்ளர் டிபன் பாக்சென
ஆடம்பரப் பரிசுகள்
அடுக்கி வைக்க
இரண்டு பெஞ்சுகள்
இழுத்துவந்து போட்டோம் மேடையில்
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கோணம்

 எப்போதோ

பார்த்துவிட்டதாகவும்
எப்போதோ
பேசிவிட்டதாகவும்
எப்போதோ
வணங்கிவிட்டதாகவும்
தோன்றிக்கொண்டே இருந்தது
எல்லாம் இனிமேல்தான் என்கிறீர்களே
எதிலிருந்து துவங்குவதென்ற
குறிப்பைக் கிழித்தது யார் **************************************
கைப்பற்றிக்கொள்ள
எதுவுமே கிட்டாத
ஒளிவெளியில்
அலைபாயும்
உள்ளங்கைக்குள்
ஒரேயொரு ஆரஞ்சுமிட்டாயைப் போட்டுவிட்டுப் போனான்
ஷப்பா
பாகு எச்சிலுக்குத்தான்
அமிர்தமென்ற பெயரா
தெரியவில்லை பாருங்கள் இத்தனைநாள்
*********************************************
நீள்சதுரமாக
சதுரமாக
உள்முக்கோணம்
வெளிமுக்கோணம்
வைத்து
பிசிறின்றி
தொங்காமல்
தொய்யாமல்
பொட்டலம் கட்டிவிடத் தெரிகிறதே என்று
எல்லாம் தெரியுதென நம்பிவிட வேண்டாம்
ஒவ்வொன்றுக்கும்
ஒவ்வொரு கோணம்

மறுபடியும் முதலில் இருந்து

 இந்த உடைகளை

இந்தப் பொருட்களை
இந்த அலைபேசி எண்ணை
இந்த மூக்குக் கண்ணாடியை
இந்த நறுமணக்குழலை
பாதி கரைந்த சோப்பை
எப்போதும் வைத்திருக்கப் போகிறோம்
என்று நினைப்பதற்கும்
எப்போதுவரை
வைத்திருக்கப் போகிறோம்
என்று நினைப்பதற்கும்
நடுவில்
நாட்கள்
மாதங்களோ
ஆண்டுகள்
நடந்து போயிருக்கலாம்
ஆனால்
பிரிந்த வாழ்வின் நினைவுப் பாதையில் கிடப்பது
கூர்முள்
எதுவும் நடக்கவியலாது
************************************
அனிச்சையாய்க் கிள்ளி எறிவதை உணர்ந்தபோது
சுற்றிலும் இறைந்து கிடந்தன
இலைகள்
பத்திரமாய்ப் படர்ந்து கிடந்தன களைகள்
மறுபடியும் முதலில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்

வலிக்காத பொய்

  

காயமென்று கருதினேன்
கசிவது ரத்தமாக இருக்கும்வரை அஞ்சாதே என்றொரு ஆறுதல்
பிதுங்கும் சீழ் எப்போது கட்டியது எனத் தெரியாமல் காப்பதில்தான்
தன் திறன் இருப்பதாக நிஜம் சொன்னது நிஜம்
வலிக்காத பொய் சொன்னாலென்ன *********************************************


தனக்கு இன்னின்னது பிடிக்கும் என்று
தெளிவாகச் சொல்லிக்கொண்டே இருப்பவர்களால்
குற்றவுணர்ச்சி வந்துவிடுகிறது
இன்னும் கொஞ்சம் கூடுதலாகப் பிடித்த உணவைக் கொடுத்திருக்கலாம்
இன்னும் கொஞ்சம்
அதிகநேரம்
பிடித்த மாதிரி பேசியிருக்கலாம்
இன்னும் ஒருமுறை
பிடித்த இடத்திற்கு
அழைத்துப் போயிருக்கலாம்
இன்னும் இன்னும் என்றுதான்
எவ்வளவு முறைக்குப்பிறகும்
தோன்றும் துயர் பெருக்குகிறது
தனது பிடிமானங்களையோ
பிடித்தங்களையோ
பகிராத ஒருவனைப்பற்றியும்
இப்படித்தான் குறைப்படத் தோன்றுவதாக ஒருத்தி சொன்னாள்
திகைப்பாகிவிட்டது
அதெப்படி
கோடி பிரிவினைகளோடு
இருப்பவர்களும்
சாகும்போது
ஒரேமாதிரி
குற்றவுணர்ச்சியைக்
கைகளில் திணித்துவிட்டுப் போய்விடுகிறார்கள்

அழ வேண்டாம் எசமானே

      சாக்கடை வெட்டமுற்பட்டு

சாலையை வெட்டிவிடும்
அபத்தங்களின் பின்னால்தான் இருக்கிறது
யாரோ எதையோ குலைத்துவிட்டதாகத்
தினமும் புலம்பும் வாழ்வு
மண்வெட்டியால்
நீ ஒரு வெட்டு
நான் ஒரு வெட்டு
கை காலில் போட்டுக்கொள்ளாமல் வெட்டிவிட்டால்
நீயும் வெற்றியாளனே ****************************************************
நிசமாகவே
இன்னும் ஒருவேளைச்சோறே பெரும்பாடானவன்
இருக்கிறான் மைலார்ட்
ஏக்கர்கணக்கில் கட்டப்படும் ஓய்வுக்குடில்களின் சுவர்மறைப்பதால்
நீங்கள் பார்க்க முடியவில்லை போலும்
உங்களோடு கைகுலுக்கும் சர்வ வல்லமை படைத்தவர்கள் வீட்டு கச்சோரியும் ஏற்றுமதி ரகத்தேனீரும் சுவைக்கும் பொழுதில் அந்தப் பலகணியில் நில்லுங்கள்
தெருவுக்கும் உங்களுக்கும் தொலைதூரமென்பதால்
ஒரு உருப்பெருக்கி அவசியம்
அப்போது காணலாம் அந்த கந்தல்பொறுக்கி ஐயனார்களை
எதற்கும் அவசரப்பட்டு
காவற்கம்பை நீட்ட வேண்டாமென்று
மெய்க்காவலர்களிடம் சொல்லி வையுங்கள்
பொட்டென்று போய்விடுவான்
பிறகு
நீங்கள் எதெதற்கோ சேமித்து வைத்துள்ள
கண்ணீர் கொஞ்சத்தைச் சிந்த வேண்டி வரும்

பெயர் மாறியது

    தேன்கூடு தோடு முத்தண்ணிக்கும்

பாகப்பிரிவினை தோடு

செல்வியக்காவுக்கும்
மாங்காய் தோடு
பாக்கியத்தத்தைக்கும்
ஏழுகல் தோடு
கமலத்தாச்சிக்கும் அடையாளம்.
தொங்கும் காதில் கனத்த சுரையோடு
கெம்புச்சிவப்பில் தன் வெற்றிலைச்சாறு போலவே வருவாள்
தெய்வானை ஆத்தா
ஆராதனா தோடும்
ஆடும் வளையமுமாக வந்த
மருமகள்கள் மாற்றிக்கொள்ளவென்று இன்னொரு செட்டும்
வைத்திருந்தது
நடுத்தெருவுக்கு
புதிய செய்தி
ஆராதனா தோட்டுக்காரி
எண்ணெய் இறங்கிய கல் தோட்டையும்
வாத்து மூக்குத்தியையும்
கழற்றாதே என்று
தாலி கழற்றிய தன் மாமியின் கையைப் பிடித்தது
அதைவிடப் புதிய செய்தி
ஆயுளுக்கும்
ஒற்றைத் தோட்டையே அடைகாத்த காலம் மாறி
பெயர்வைத்த,பெயர்வைக்காத
தோடுகள் சில வாங்கிக்கொள்ளப் பழகிவிட்டார்கள்
நடுத்தெரு நாயகியர்
நடுத்தெருவின் வீடுகள்
ஆட்கள்
மாறினார்கள்
வளர்ந்த ஊரின் ஓரத்தில் கிடக்கும் நடுத்தெருவுக்கு
ஜெயிலும் ஊருமாக வாழ்ந்த
உள்ளூர்த்தலைவர் பெயர்கூட வைத்தாயிற்று
குடும்பத்துக்கு ஆகாது என்ற குரல்களும்
வளை உடைத்துக் காயமாக்காதே
என்ற ஒற்றைக் குரலுமாகக்
கருமாதி வீடு சலம்பும் நடுத்தெரு
இன்னுமிருக்கிறதுதானே
ஏதேதோ பெயர்களில்
எல்லா ஊரிலும்
ஏற்கப்படாத அழைப்பு

     உங்கள் அழைப்பை ஏற்காது கிடக்கும்

எவரொருவரின் அலைபேசியும்

உங்களை வேண்டுமென்றே
நிராகரிப்பதில்லை
கொதிக்கும் வார்த்தையாடல்களுக்குத்தப்பி
அந்த அலைபேசி
வெயில் மொடமொடப்போடு
மடிக்கக் காத்திருக்கும் துணிகளோரம்
ஒடுங்கிக் கிடக்கலாம்
வார்த்தைகளின்மேல் வெறுப்புற்று
கண்மூடி
இசையில் மூழ்கிக் கிடப்பவன் ஏதோ ஒரு படிக்கட்டில் கழற்றிவைத்த காலணி,சட்டை,சராய் வகைகளுக்குள் விச்ராந்தியாகக்
கிடக்கலாம்
எதிராளியை ஏதும்செய்ய இயலா வெடிப்பில்
விசிறியெறிந்து
உயிரிழந்தும் கிடக்கலாம்
ஆனாலும்
மீண்டும் மீண்டும்
அழைப்பவர்கள்
சிலசமயம்
வாழவைத்து விடுகிறார்கள்
அலைபேசியையும்
உடைமையாளரையும்
போனால் போகிறது
வைதாலும் வாங்கிக்கொள்ளுங்கள் சார்
கோழையைத் துப்புதல்

 கவிதை 1

என்னை அண்ணாந்து பார்க்காதீர்கள்
உங்கள் பாதையில் அன்றாடம் இரண்டு கண்ணிவெடி
வைக்க வேண்டியிருக்கிறது
உங்கள் ஊரில் அவ்வப்போது
ஒரு வன்புணர்வு நடத்த வேண்டியிருக்கிறது
உங்கள் சோற்றுத்தட்டில்
ஒரு பிடி மண்ணோ
சிறு துளி நரகலோ
இட வேண்டியிருக்கிறது
இல்லாவிடில்
எதையாவது கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள்
எத்தனை அந்தரத்தில் அமர்ந்து கொண்டாலும்
பல் குத்தியபடி
ஒரு விமர்சனம்
என்னை அண்ணாந்து பார்க்காதீர்கள்
உங்களைக் குனிந்து பார்க்க நான் வருவேன்
அதுவரை
கவிதை 2
நல்ல மருந்து தெரிந்தால் சொல்லுங்கள்
வரி வரியாகப் பழுத்திருக்கிறது
உடலெங்கும்
தாங்கியதாலா
தாங்காததாலா எனத் தெளிவில்லை
கண் எரிச்சலிலிருந்து
கசிந்து கொண்டேயிருக்கும்
நிலைக்கு வந்தாயிற்று
சிவப்பைப் பார்த்து அஞ்சி
சீர்கெட்ட மருந்துச் சொட்டுகள்
இறங்கி இறங்கி
தொண்டைவரை கசப்பு
மூன்று நிமிட ரத்தக் கொதிப்புகளை
ஒவ்வொரு நாளும் கடந்து கடந்து
அழுத்தமானியின் பட்டை இறுகுவதேயில்லை
இப்போதெல்லாம்
காறித் துப்பி
வெளியேற்றவேண்டிய கோழை களை
மென்று விழுங்கும் இந்நோயின்
பெயர் நடுநிலை என்கிறார் நண்பர்

மருதநிலத்துக் கொற்றவை

 அப்போதெல்லாம் பார்த்திராத

வெடிப்புரேகைகள் இன்று கண்டேன்.

சேற்றையோ நாற்றையோ சுற்றிக்கிடக்கும் அவள் பாதங்கள்
புடைத்த நரம்புகளோடு
வெளிறிக் கிடக்கின்றன
நகரத்தின் முற்றத்தில்
ஈரமிலா
நரகம் என்று திருத்துகிறாள்
என் பிள்ளைகளின் சேடியான
மருதநிலத்துக் கொற்றவை
வரப்புக்குள் கூட அணியாத செருப்பை
கூடத்துக்குள் அணிந்து சுற்றும்
இந்த ஊரை அப்படித்தான் பார்க்கிறாள்
பேரப்பிள்ளைகளின் கடைவாய் எச்சிலால்
தொண்டை நனைத்துப் பிழைக்கும்
மூதாய்

அவள்களின் உலகம்

 கால்படி புளியோதரை கிண்டி

வழிச்சோறு தயாரானாலும்
ஒரு கிண்ணம் எதிர்வீடு
ஒரு கிண்ணம் அடுத்த வீடெனத் தூக்கிப் போகிறவள்
திணறித்தான் போனாள்
அத்துவானப் புது வீட்டில்
இப்போது பழகிவிட்டது
எதிர்ப்படும் முகத்தை
சலனமின்றிப் பார்க்க
**************************************
பொன்னாங்கண்ணியை ஆய்ந்து ஆய்ந்து
நகக்கண் நோகும் வேளையிலும்
சமரசமின்றி
தாளிக்க சின்ன வெங்காயம் இருக்கும்
அம்மா
எழவெடுத்த சனியனே
ஏன் என் உயிரை வாங்குற
என்றபடியே
பின்னுமிரண்டு வெங்காயம் உரிக்கிறாள்
ரவோண்டு போட்டா
அந்த சனியனுக்குப் பிடிக்காதென ************************************************
என்ன செய்தால் எனக்கு வலிக்கும்
என்ன சொன்னால் எரியும்
எதைக்கண்டால் மிதப்பேன்
எதன் நுகர்வில் பறப்பேன்
எதுவும் தெரியாதுனக்கு

வியர்வைக் கசகசப்புக்காகக்கூட
நெகிழாத கைத்தலந்தான்
பிரமாதம் பிரமாதம்

தூர்ந்த கனவு

 நம்பிக்கொண்டிருந்தோம்

சாய்கிளையிலிருந்து
பன்னீர்ப்பூக்கள்
உதிரும்
எதிர் வீட்டுக் கிணற்றின் உள்ளே தெரிந்த ஓரிரு படிகள் வழிதான்
எங்கள் கதைகளில் உலாவும் தேவதைகள் ஏறி வருவார்கள் என
தெருவுக்கே தேவதையாக உலவிய
அமுதாக்காவை
ஆளும் பேருமாய் கிணற்றில் இறங்கித் தூக்கி வந்தபிறகு
தூர்ந்துபோனது
எங்கள் கனவுகளோடு
கிணறும்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...