தண்டவாளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தண்டவாளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, அக்டோபர் 02, 2020

பாதை மாறிய பயணங்கள்

 


 

எதைக் கொண்டு வந்தோமென்றும்
தெரியாமல்
எதைக் கொண்டு போகிறோமென்றும் 
தெரியாமல்
போக வேண்டும் என்றுமட்டும் 
தோன்ற வைத்து விடுகிறீர்கள்.
அவர்களும் கிளம்பி விடுகிறார்கள்
நீங்கள் குப்பையில்
வீசியவற்றை மாட்டிக் கொண்டாவது

நம்பிக்கைதான்
நெடுஞ்சாலைகளின் மீது

அவர்களில் எவரோ வார்த்த
தார்தானே 

**************************************************************

மாறிச்செல்லாத பாதை என்று அறியப்பட்ட
தண்டவாளங்களும்
நூற்றுக்கணக்கான கருவிகளும் தாண்டி
எங்கள் பயணங்கள்
எங்கெங்கோ செல்கின்றன

இரக்கமுள்ள மனிதர்கள்
பொட்டலங்களோடு வரும்வரை
திசையறியாது நடந்துகொண்டே இருக்கின்றன
கால்கள்

கால்களுக்குப் பசிப்பதில்லை

ஆனால் அம்மா
இங்கிருந்து எங்கு செல்ல வேண்டுமெனச்
சொல்லாமல்
ஏன் உறங்குகிறாய்....




புதன், அக்டோபர் 19, 2016

எங்களிடம் நீர் இருந்தது

எங்கள் கிணறுகளில் நீர் இருந்தது
பத்து வீட்டுக்காரர்கள் வந்து இறைத்தபோதும்
பகிர்வதில் கவலையின்றி இருந்தோம்
எங்கள் குளங்களில் நீர் தளும்பியது
உயர்த்திக்கட்டிய உள்பாவாடையுடன் 
கதையளந்தபடி துணி சவக்காரத்தையே 
இரண்டு இழுப்பு தேய்த்து 
உடைந்த கரையின் சில்லில் 
மஞ்சள் உரசிக்குளியல் முடிப்பதில் 
கூச்சமின்றி நடந்தோம்
பிழிந்த துணி தோளிலும் 
தெருமுனைக்குழாயின் குடம் இடுப்பிலுமாக
நடந்தபோதும்
நனைந்த உடலின் வளைவுகள் 
விரசமாகத் தெரியாத சகமாந்தர்
உடன் நடமாடினோம்
எங்கள் ஆறுகளில் நீரோடியது
கரையோர மரங்களின் பூக்களும்
வறண்டகாலத்தில் விழுந்திருந்த இலைதழையுமாக
புனல் வந்தபோது ஒரு துறையில்
பெருக்கு கொண்டாடினோம்
பிள்ளைகள் மதகிலிருந்து சொருகு நீச்சல்பழக
அப்பன்கள் ஆடுமாடுகளை
வைக்கோல் பிரியோடு தேய்த்துக்கொண்டிருந்தார்கள்
கிணறுகளில் நீரிறைக்க வலுவில்லாது 
பொருத்திய
மோட்டார்கள் பரிதாபமாக முனகும்போது 
விழுந்த நீரிலும் வண்டல்
பிடித்த மனதிலும் அதுவே
மீன்வளர்க்க ஏற்றதாக
குளமும் குட்டையும் மாறியபோது
வீடெங்கும் குளியலறை கட்டுமளவு
முன்னேறிவிட்டோம்
யார் வீட்டு குளியலறையை யாரோ 
எட்டிப்பார்க்கும் நாகரிகத்திலும்
எங்கள் 
ஆறுகளா....
மணல் கிடங்குகளாகி வெகு காலம்
தண்ணீரை அனுப்புவாயா இல்லையா எனத்
தண்டவாளங்களில் விழுந்து கிடக்கிறோம்
விழுந்துதான் கிடக்கிறோம்

படம் .நன்றி sunderarajan 

வெள்ளி, அக்டோபர் 09, 2015

ஆயாசமாக இருக்கிறது



எத்தனை பேரிடம் மல்லுக்கு நிற்பது
எத்தனை பேருக்கு சொல்லிக் கொடுப்பது

உடலைத் திறப்பதால்
ஒருவரை அவமானப்படுத்திவிட
இன்னும்எத்தனை
நூற்றாண்டுகள்வரை
இம்மூடர் கூடம் துடித்துக்கொண்டிருக்கும்

தின்றால் பாவம் கொன்றால்போச்சு
எனத் தலைகீழாக்குகிறீர்கள்

யார்வீட்டுத் துக்கமும் ஒப்பாரியும்
உங்கள்தூக்கம் கலைப்பதேஇல்லை

வயிறுஎரிவதே இல்லை
ரயில் தண்டவாளத்திலோ
தூக்குக்கயிற்றிலோ
எவர்வீட்டுச் சுடரோ
இழுத்து அணைத்துப் போடப்படுவதைக்
கண்ணுற்றபோதும்

அகன்றதிரைத்தொலைக்காட்சியின்
துல்லியம் காரணமாகக்
காண்பதெல்லாம்
சேனல்காரன் போட்டியில்
வாங்கிய திரைப்படம் என்றா
நினைக்கிறீர்கள்

ஆயாசமாக என்றாசொன்னேன்
இல்லை
ஆபாசமாக எனத் திருத்திக் கொள்ளுங்கள்

சே...வாயாரத்
திட்டத் தோதாக
ஒருபோலிக் கணக்கையாவது
ஆரம்பித்துவிட வேண்டும்
முகநூலில்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...