வியாழன், ஆகஸ்ட் 31, 2017

சாலையோர அங்காளம்மை

பூச்சொரிதல் ஏற்பாடுகளின் 
தடபுடலைப் பார்த்தபடி சிரித்திருக்கிறாள் 
ஆற்றோர வெள்ளந்தாங்கி அம்மை
மணல் லாரிகளைக் காத்திருக்கும் இப்போதும்
அதே பெயர்
அசௌகரியமா இல்லையா 
எனத்தெரியவில்லை

*******************************************
வீசிப்போகும் காணிக்கைகளின் டங்டிங் ஒலியோடு
தனித்திருக்கும்
சாலையோரக்
கொட்டகையின் அங்காளம்மைக்கு
இளநீர்க்குலைகளோடு வாசலில் கடைவிரிக்க 
செல்லம்மை வந்தால்தான்
மனுஷவாசம்
செல்லம்மை 

அரிவாள் வீசும் அழகைப் பார்த்து
ரசிக்கும்போது சிந்திய புன்னகைதான் 

உறைந்து கிடக்கிறது அங்காளி சூலி முகத்தில்


********************************************************************

பெயர்ப்பலகையின் பூச்சரம்

உப்புக்கடலை ருசிக்காமல் 
சிப்பி தேடிக் கொண்டே 
அலைகிறாய் 
மீனென்றும் சொல்கிறாய் 
ஏதாவது ஒன்றைத்தான் புரிந்து கொள்ள 
முடியும்


**************************************************
நீலமாய் இல்லாத அவுரி
நீலம் தருகிறது
வானென்று
சொல்வதையும்
கடலென்று சொல்வதையும்
நிறுத்தி
அவுரி என அழைக்கிறேன்.
இருப்பதல்ல பெறுவது நீலம்
என உணர்ந்தபிறகு


*******************************************
எப்படிச் சொல்வீர்கள்
தினந்தோறும் கடக்கும் பாதையின்
பெயர்ப்பலகையும்
அதில் தொங்கும் வாடிய சரமும்
யாரை நினைவூட்டுமென்று 
அவரவர்க்கு அவரவர் கிளை


****************************************************
இதழ் இதழாய்ப் பிய்த்து மெல்லுகிறவரிடம்
என்ன சொல்ல
என் மனதுக்கு சொல்லிக் கொள்கிறேன்
சாந்தி ...சாந்தி...சாந்தி


******************************************************

காலமே நீ வாழி

இங்கேதான் இருக்கிறோம் 
இல்லாமலும் இருக்கிறோம் 
இருக்கும்போதும் 
இல்லாதபோதும்

*****************************************
வருத்தங்களைப் பிட்டுத்தின்றபடியே
ஒரு ஸ்மைலி 
போட வாய்ப்பளிக்கும்காலமே நீ வாழி

**********************************************

உப்பு உறைப்பைச்
சரிபார்த்தபடி முடிகின்றன நாட்கள்
அவர்கள் செய்யும் துரோகங்களைப் பற்றி
நினைக்கும் போது புரையேறுகிறதுதான்
தண்ணீர்க்குவளை அருகில்தானே
போதும்


*****************************************************

கதவு திறக்கப் 
பார்த்திருந்தோம்
வெளியேற
காற்றுகூட இல்லையென உணராது


***********************************************************
கனவின் சீதனம்

இந்த முகத்தை மறந்திருக்கவே கூடாது
ஆயினும்
எங்கேயோ பார்த்த சாடையிலும் 
ஒருநாள்
தோன்றுகிறது
*****************************************************

கனவுகளுக்கு அர்த்தம் உண்டா என்ன
நினைவுக்கே இன்னும்
தெரியாதபோது

*************************************************

கூரையில் வழிவதற்கும்
சன்னலில் இறங்குவதற்கும்
வேறுபாடு தெரிகிறது
மழைக்கு
சப்தத்தாலும் ருசி

************************************************
அத்துணை நஞ்சையும்
அள்ளிப்பருகச் சொல்லும் வாழ்வை வாழ
ஒரு கோப்பை சீதனம்
தந்தது நீயா
*******************************************

கட்டிடங்களிலிருந்து வெளியேறிவிடலாம்
கட்டுகளை என்ன செய்ய
முளைக்குச்சி அத்தனை ஆழம்
கட்டுக்கயிறு அத்தனை இறுக்கம்

******************************************************
ஜனநாயகம் வாழ்க

இந்த மௌனம் அச்சுறுத்துகிறது
இந்த பாராமுகம்
கோழைத்தனமானது
இந்த பாசாங்கு
பழிக்கத்தக்கது
இந்த பொறுப்புத்துறப்பு
வெறுப்புக்குரியது
ஓங்கிய அரிவாளின் கீழ் 

தன் தலை வரும்வரை
இப்படியேதான் 

இருக்கப்போகிறதா இக்கூட்டம்

வாழ்வு

என்ன பிடித்திருக்கிறதென்று 
கேட்பதில்லை
ஏன் என்பதை அவசரமாகக் கேட்டுவிட்டு
பார்வையைத் திருப்பிக் கொள்கிறீர்கள்
அந்தக் கழுத்து 
குளிர் கண்ணாடி அணிவதில்லையே தவிர 
அதே கண்கள்


*************************************************

எங்கே அதைப் பார்க்கப்போகிறீர்கள்
இப்படியாவது பார்க்கட்டுமே என்று
அடுப்பின் முகப்பில் Butterfly
அரைபடும் வாழ்வில் 

ஆசையை நினைவூட்ட ஒரு preethi
அவியவும் வேகவுமே வைக்கும்
புழுங்கல் வாழ்வின் மக்கர் பயணத்தில் 

குக்கர் பெயரில்
Prestige


*****************************************************
குளியலறை துவாரத்தில கட்டெறும்பு வரிசை
கண்டதும் மருந்தடித்தாயிற்று
மற்றபடி ஜீவகாருண்யத்திற்கொன்றும்
குறைவில்லை
வாசலில் இப்போதும்
அரிசி மாக்கோலம்தான்


***************************************************
ஏதாவது செய்துவிடமுடியும் 
என்று தோன்றுகிறது இப்போதும்
இது அவநம்பிக்கையா
எனக் கேட்டுக்கொள்கிறேன்
மூடநம்பிக்கை என்று மட்டும்
சொல்லிவிடாதீர்கள்

******************************************


பகீரதப் பிரயத்தனம்

நீங்கள் இருப்பதை நீங்கள் உணர
யாரையாவது அச்சுறுத்த வேண்டியிருக்கிறது
கண்ணுக்கருகே ஆடும்
கடப்பாறையைப் பாராதது
போல 
பயத்தை விழுங்க வேண்டியிருக்கிறது
எவர் சிரித்தாலும் திடுக்கிட
வேண்டியிருக்கிறது
எவர் கதறுகையிலும்
பஞ்சுமிட்டாய் சாப்பிட வேண்டியிருக்கிறது
பூமியே நழுவினாலும் ஆடாதமாதிரி 

நிற்க வேண்டியிருக்கிறது
எப்போதும் எவருடைய உணவையோ 


உணர்வையோ
களவாட வேண்டியிருக்கிறது
பாவமாகத்தான் இருக்கிறது
எவருக்கோ நடக்கும்வரை....
மழை பெய்து கொண்டிருக்கிறது

மழை வந்துவிடும் போலத்தான்
இருந்தது
இடி இடிக்கத்துவங்கியது
'ரொம்ப பயமாருந்தா அர்ச்சுனா சொல்லு"
மின்னலின் கீற்று சன்னல்வழி நுழைந்து
அலமாரித்தூசியைச்
சரித்து விட்டது
கிளிப்புகள் தாங்காவிட்டால்
என்ற கேள்வியைத் தட்டிவிட்டுப்போனது காற்று
மொட்டை மாடித்துணிகளோடு
திரும்பி வந்த கணம்
மழை இவ்வளவு லௌகீகமாகிய
சோகம் இறங்கியது
வியர்வை பெருக கால்நீட்டி அமர்ந்தபோது
எல்லாம் முடிந்து போயிருந்ததுஅலையடிக்கும் குளம்

துருப்பிடித்த நினைவுகளையெல்லாம்
உதறி உதறி
உதிரி உதிரியாக 
நீங்கள் 
எறிந்து கொண்டிருக்கும் கற்களால்
வற்றிப்போன குளம்
சலனிப்பதில்லை
அதன் நினைவுகளில்
அலையடிப்பதை உணராத 

உங்களைப் பரிதாபமாகப் பார்ப்பது
அதற்கும் வருத்தம் தான்

நட்சத்திரப் பிடாரி

பாற்சோறு உண்ட இரவின்
நினைவில் 
பருப்பு சோறுக்கும் நிலவைத் 
தேடியவள்தான் 

எண்ணிக்கொள்ள ஆள்வைத்து 
குழல்விளக்கைத் தின்றவனை
அச்சத்துடன் பார்த்தவள்தான் 
இப்போதெல்லாம் 
நட்சத்திரங்களைத் தின்கிறாள் 

சட்டினியில் தட்டுப்படும் தேங்காய் 
நாருக்கோ
குழம்பில் நீளும் ஒற்றை முடிக்கோ 
தட்டெறியப் பழகாதக் கட்டுப்பாட்டோடு 
சொரசொரவேன்றிருக்கும் 
நட்சத்திரங்களைக் கடித்து 
விழுங்குகிறாள்

எத்தனை பேர் தின்றாலும் 
தீராது உடுக்கூட்டம் 
உங்கள் இதழ்க் கடைப் புன்னகையை 
அவள் நட்சத்திரமாக்கினாள்
சற்றே சாறு வழிந்தபோது 
பக்கவாட்டுப் பற்களை 
நீட்டி வரைந்தாயிற்று 

ஆனந்தவிகடன் சொல்வனம்-மே 2017


அடையாளங்களின் சுமை


புராணநாடக பாத்திரங்களின் 
பித்தளை கவச கிரீடங்களைவிடவும்
கசகசப்பாகவும் கனமாகவும்
துன்புறுத்துகின்றன 
இந்த அடையாளங்கள்
அம்மா ,மகள், மனைவி,
அக்கா தங்கை,அதிகாரி,அடிமை,
அவள்,இவள் ...
போதும் போதாதற்கு 
படிப்பு,பண்பு,பட்டறிவு வகையறாக்கள்
என்ன எரிச்சல்
என்ன கோபம்
என்ன ஆத்திரம்
ஆலகால விஷமெல்லாம் விழுங்கும் 
வேலையே பிழைப்பான சக்தி
கழுத்தை இறுக்கினாலும் திருநீலகண்டமாவதில்லை
அது நித்திய கண்டமல்லவா.
பொங்கும் உணர்வுக்கெல்லாம்
மண்ணை வாரிவிட்டு
வாசாப்புகளையும்
சேர்த்திறைத்த ருக்கு பெரியம்மாவை
ஊர் பிடாரி என்றது.
பரவாயில்லையென நினைத்தாலும்
இந்தப் பெயருக்கெல்லாம் பிடாரி பட்டம் தர்ரதில்ல 
எனத்
தள்ளி விடுகிறீர்களே

கடமை சார் கடமை

வாங்கித்தின்ற
பனிக்கூழ் வகை
அதில் தூவியிருந்த பருப்புத்துருவல் 
நினைத்தபடி அமைந்துவிட்ட வாடகை வீடு
சற்றே சகாயமாக வாங்க முடிந்த காய்கறி,கீரை
ஏங்கிய நிறத்தில் கிடைத்த சேலை
விஷமம் குறைவான குழந்தை
பசியிலும் சண்டையிடாத இணை
அவரவர் பெருமை அவரவர்க்கு
பெருமையில்லாததெல்லாம்
சிறுமையா என்ன
கடமை சார் கடமை

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...