புதன், ஜனவரி 30, 2013

ஸ்னேஹலதாவுடன் ...இந்த இக்கணம்
என்னுடையது....
காற்று அறையும் முகத்தில்
வந்து வந்து விழும்
கற்றை முடியொதுக்கி
ஒதுக்கி...
கைநோவதும் பொருட்டில்லை...

வெம்மையின் உப்பு பூசும்
ஒவ்வொரு நொடியும்
கூடிக் கூடி
என்னுடையதாகும்
கணங்களில் இருக்கிறேன்..

ஸ்னேஹலதாவைச்
சந்திக்கச் செல்லும்
இந்தப் பயணம் முக்கியமானது...

ஒவ்வொருமுறையும்
இந்தக் கணங்களைப் பற்றிக்
கதைத்திருப்பது
எங்கள் வழக்கம்...

எதுவும் சொல்லமாட்டாள்
இம்முறை.

புதிதாய் வாங்கிய
கண்ணாடி
முன் நெற்றிக் குழலைக்
கண்ணிலிருந்து தள்ளி வைப்பதால்
அந்தக் கற்றை
காரணமில்லை -
துளிர்த்து இறங்கும் துளிகளுக்கு..

நேற்றைய பயண விபத்தில்
மரித்து
கண்ணாடிப் பேழையில்
உறங்கும் ஸ்னேஹலதா
கேட்டிருந்த
இதன் ஜோடிக் குளிர்க் கண்ணாடி
என் கைப் பையில்...

திங்கள், ஜனவரி 21, 2013

ஜகன்மோகினிநான்...
அனாமிகா...
வினோதினி...
தாட்சாயணி...
என் விரிசடையோ .
மூன்றாம் நேத்ரமோ ,
தோள் தொடும் தூக்கிய திருவடியோ
கை ஏந்திய எரிதழலோ,
காணவியலாக் கண்முன்னே
தலையாட்டி பொம்மைகள்
உருண்டு கொண்டிருக்கின்றன !
உருப் பெறும்
சாபவிமோசனம்
எப்போது -உன் கண்ணுக்கு?

ஞாயிறு, ஜனவரி 13, 2013

ஒளியே வாழி!ஒளியில் தொடங்குகிறது நாள்..
ஒளியில் தொடங்குகிறது உற்சாகம்
ஒளியில் தொடங்குகிறது உழைப்பு !
இருளில் நம்மை
இழந்துவிடாமல்
தினம்
கிழக்கின் வாசலில்
நீள்கிறது கதிர்க்கரம் !
வெளிச்சத்தின்
சக்தியை
கண்டபோது ..தொடங்கியது
மனித சரித்திரம்!
*****************************
வெளிச்சக் கூழைக்
குடித்துக் குடித்து
ஆடி வளர்கின்றன
பச்சைப் பயிர்கள்..
வெளிச்சம் தின்று
வெளிச்சம் தின்று
விரிகின்றன விருட்சங்கள் ...
உண்ட ஒளியை
உருட்டித் திரட்டி
காயாய் பூவாய்
கனியாய்க் கிழங்காய்
மனிதனுக்கு
ஊட்டி வளர்க்கின்றன
தாவரங்கள் ...
********************
நம்பிக்கை பொய்க்கா வண்ணம்
நடத்துவாய்
ஒளியே வாழி!வாழி!

சனி, ஜனவரி 05, 2013

நுழையா விருந்து
தேநீர்ப் பித்து
குளம்பி பக்தி
பால்மாப் பாலகர்
எல்லோருக்குமென
எடுத்தெடுத்து வைத்த
உறைபிரிக்காக் கோப்பைகளுக்குத்
துணை
சேர்த்துக் கொண்டேயிருக்கிறேன்
என்றேனும் பரிமாறும்
நம்பிக்கையில்..,
உன் புன்னகையில் தெரியும்
இகழ்ச்சி
என் கண்ணுக்கு தெரியும் .
என் விதைகள்
முளைவிடும் என்பதையோ
நீயும் உன் புன்னகையும்
அறிவதில்லை...

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...