வலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மார்ச் 09, 2016

மகளிர் தினம்

வலியைப்பற்றி பேசவும்
வாழ்த்தி வாழ்த்தி நகரவுமான
நாள் நிறைவுபெற்றது.
எப்போதுமான 
தன்னிரக்கம் 
எப்போதுமான ஓட்டம்
எழுந்திருக்கையில்
இருக்கும் தலைமாட்டில்

புதன், ஜூன் 11, 2014

வலியின் தோற்றம்-3



பசுமையான காட்சி 
விரியும் மலர்
கனிந்த முகம் 
நெகிழ் குரல் 
கடலும் வானுமான நீலச் சங்கமம் 


வர்ணக் குழம்பை விசிறும் கதிர்
சர்க்கஸ் கோமாளிபோல் வளைந்து தொங்கி
கவனம் கேட்கும் மேகம்
ஜன்னலோரக் காற்று
குறும்புக் குழந்தை ...

கண்ணுக்கும் மனதுக்கும்
குறுக்கே மறிக்கிறது
வலி

வலியின் தோற்றம்-2



நான் சொல்லாததை 
எது சொல்லிவிடும் 
பாவனைகளில் வெளிப்பட்டுவிடாதபடி 
பயின்றிருக்கிறேன் 
வெளிச்சம் அருகிருப்பதாகவும்
நம்பிக்கையிலேயே ஆக்சிஜன்
உற்பத்தியாகும் என்றும்
புன்னகையால் பசியை அடக்கவோ,கடக்கவோ
முடியுமென்றும்
என் சொற்களால் உன்னையும் உணரவைப்பேன்
ஆனால் ...என் வலியை.....

வியாழன், ஆகஸ்ட் 15, 2013

நாம் நான் நீ

 நட்சத்திரங்களைப்  பறிக்கத்
திட்டமிட்டவாறே
சாய்வு நாற்காலியில்
முன்னும் பின்னும் ஆடியவன்
சொல்லிக் கொண்டிருக்கிறான்
இப்போதெல்லாம்
நட்சத்திரங்கள் வெகுதொலைவு
சென்றுவிட்டதாக...


கைப்பிடி செம்மண்ணும்
அகழாமல் விதைத்துவிட்டு 
முளையாப்பயிரின் ரகம்
குறித்த புகாரோடு
அதோ
மோட்டார் சைக்கிளில் விரைபவன்
உங்களோடுதான் தேநீர் பருகினான்...


கனவுகளை விற்பவன்
வாராவாரம் பொதியையோ
அட்டையையோ வடிவையோ
மாற்றுவது வழக்கம்
எனத் துப்பறிந்தவாறே
இவ்வார இலவசம்
என்ன என்றேன் நான்..

புதன், ஆகஸ்ட் 14, 2013

நானும் நானல்ல

 நானொரு விருட்சம், நான் உதிரும் இலை,
மணம் கசியும் சிறுமலர்,
கனிந்து  வீழும்  பழமும் ,
அதனுள் கிடக்கும் வித்தும்
என ஏதோவொன்றாக  சித்தரித்து
வந்தபின்

சுற்றிலும் நெளியும் சர்ப்பங்களைக்
கடக்கவியலா கானுயிர்
ஆனேன் 

நெளிந்து வளைந்த சர்ப்பம் 
பார்த்தபடி கடந்தது வாழ்வு ..

சில நாள் அச்சம்..
சிலநாள் அருவறுப்பு ..
சிலநாள் ஆர்வம்
சிலது வெகு நீளம்
வெகு சிறியது
வெகு அழகு கூட
நிறங்களோ வேறு வேறு
புள்ளிகளும் வரிகளும்
செதில் தீற்றல்களும்
ஒன்றுபோலில்லை மற்றது 


அரவம் பார்ப்பது வழக்கமாகிப்போனபின்
ஒருநாள்
நான்
அமர்ந்திருந்த மேசையில் சிந்தியிருந்த
துளி விஷத்தை
நானே துடைத்தேன் யாருமறியாமல்
அல்லது அவ்வாறு நம்பியபடி...

வியாழன், ஜூலை 18, 2013

பொய்யா மொழி

பசுந்தளிர் துளிர்த்தபடி
தலையசைத்துக் காத்திருக்கட்டும்

இதயம்
குயில் வந்து அமரலாம்
குழலோசை வருடலாம்


மகரப்பொடி சிதறத்
தேனருந்தி வண்டு இளைப்பாறலாம்
கதிரின் இளஞ் சூடும்
சாரலின் தீண்டலும் பழகலாம்
இன்னும் என்னென்னவோ
சொன்னதை மறவாது
நம்பிக்கையோடு
துடித்திருக்கிறது இதயம்
சீனத்தின் முதுசொல்
இவ்வூர்க் கதிருக்கோ
குயிலுக்கோ
யார் விரித்துரைப்பார் .....


வெள்ளி, ஜூலை 12, 2013

அவற்றைப்பேச விடாதீர்கள்

வண்ணத்துப் பூச்சி என்னென்ன
நிறங்களில் பறக்கிறது
ஆய்ந்து கொண்டிருந்தேன் ..
வண்ணத்துப் பூச்சி எங்கெல்லாம்
அமர்கிறது
என்ன வேகம் ..எத்தனை தூரம்...
கவனிப்பதே வேலையாய் இருந்தேன்
வண்ணத்துப்பூச்சியை
பிடித்துக் கொடுப்பவனை
நடுக்கத்துடன் பார்த்தவாறே
அட்டைப்பெட்டிக்குள்
இட்டு மூடியிருக்கிறேன்


பார்க்காத கலவைகளிலும்
அறியாத தீற்றல்களிலும் கூட
வண்ணத்துப் பூச்சியை
வரைய முடியும் என்னால்....
ஒருபோதும் சிறகு முளைக்காத
கூட்டுப் புழுவல்லவா  நீ
என நேற்றுப்  பார்த்த
வண்ணத்துப் பூச்சி ஏன்
கேட்டுத் தொலைத்தது ....

செவ்வாய், ஜூன் 11, 2013

ஆறுதல் நன்றன்று

ஒரு பேரன்பை ,
ஒரு புன்னகையை,
ஒரு முத்தத்தை,
ஒரு பரவசத்தை,
ஒரு பூக்கணத்தை ,
ஒரு  மகிழ்பொழுதை ,
ஒரு பாடலை,
ஒரு கவிதையைக்
கொண்டாடும் -அதே கனத்தோடு ,
ஒரு புறக்கணிப்பை,
ஒரு துரோகத்தை,
ஒரு சீற்றத்தை,
ஒரு சீண்டலை,
ஒரு துன்பத்தை,
ஒரு விம்மலையும்
தாங்க முடிந்தால்
என்ன சொல்வீர்,.....

***************************


பச்சைத் தேநீர்
இன்னும் ஒரு மிடறு பாக்கியிருப்பதால்
நீ எதி
ர்பார்க்கும்
விடை சொல்வது கடினம்
....

புதன், மே 08, 2013

மலர்வது.... முள்ளா ?




ஆன்மாவின் சிறகுகளுக்கு
வண்ணம் பூசுவது
வழக்கம் இல்லைஎன்கிறாய் 


அம்புகளின் நுனியிலும்
மலரிணைத்தே விடுப்பவள் நான்..


துப்பும் நிறத்தையே
அடையாளமாக அணிந்திடும்
மொட்டுகளுக்கு
குழப்பம் தருவதே
உன் வழக்கமாகிவிட்டது...


உன்,என்,
வழக்கங்களை மீறியும்
சிரிக்கிறது பூ...
கூடவே அதன் முள்ளும்...

சனி, ஏப்ரல் 27, 2013

அவளுக்கு என்னவென்று பெயர்

அவள்....
தூரிகை பழகலாம்...
நல்ல மாவறிந்து
பூரிக்கும் ரொட்டி சுடலாம்....
இயந்திரம் பொருத்தலாம்
திருத்தலாம்...

தங்கம் விலை பார்த்துப்
பொருமிப் புலம்பலாம் .....
அலங்கார பூஷிதையாய்
அபிநயம் பிடிக்கலாம் ..
தெருக்குழாயருகே
சண்டையில் கூந்தல் பறக்கலாம் ..
காதணி இழைந்தாட
கானம் படிக்கலாம்...
வரிசைகளில் மேலும் ஒருத்தியாய்
கால்கடுக்கலாம்...
நிலவிலும் நடக்கலாம்..

கழிப்பறை சென்று
பத்திரமாய்த் திரும்பி விட்டாளா ..?
பார்த்துவா..

வியாழன், ஏப்ரல் 25, 2013

மண்ணரசி

நம்பிக்கையின் இதழ்கள்
சேர்ந்த கணம்
நானறியேன்...
கரையிலிருந்து "மொட்டு.."
எனப் பெயர் சூட்டினான்...
நகரவா,எழும்பவா,
மிதக்கவா,விரியவா,
சேரவா,தனிக்கவா...
இதழ்களைவிட
மேலதிக வினாக்களோடு
இலையுரசிப் பிரிந்து
அலைமோதிக் கிடக்க...
நீ
ஆகாயத் தாமரை
எனக் கூவி விடாதே....
நீராகாரம் பருகி வாழும்
பழமைவாதி நான்...
காற்றருந்தி வாழ இயலாது

சனி, டிசம்பர் 29, 2012

நடத்தை பழகிடு மகனே





எனக்குப் பிறவாத
என் இனிய பொன்மகளே..!
எனக்குத்தெரியும்
நீ இதையும் தாண்டி
வருவாய்....வருவாய்..!
புதைகுழியில் உன்னை
மூடியிருந்த
மண்ணைக் குழைத்துத்தான்
மேடு சமைத்தாய்...
"அங்கேயே கிடக்காதே "
என உன்னை உலுக்கியதும்
உடன் மண் குழைத்ததும்
ஆணின் கரங்களும் தானே ..
நம்பிக்கையிருக்கிறது..
நீ
நடைபழகி முடிக்கும்போது
மன அழுக்கிலா மகன்கள்
உன்னுடன்
நடை பயில்வார்கள்!



செவ்வாய், அக்டோபர் 30, 2012

"பஞ்சம் பிழைக்க..."

21 10 12கல்கி இதழில் வெளியானது 



முதுகிலேறி,
எல்லைக்காவல் செய்த 
மண்குதிரைகள் ரெண்டும் 

 
தண்டவாளம் தாண்டி                                  
வண்ணமிழந்து சாய்ந்து கிடக்க ,
அவ்வழி வந்த 
விரைவுரெயிலில் தொற்றி,
கட்டிட மேஸ்திரியாகப்
போயிருக்கலாம் 
நொண்டிக்கருப்பு.. ...
வண்ணக்கொடிகளுடன் 
எல்லைக்கல் கட்டி நிற்கும் 
புதிய நகரில் 
கருவைக்காடும்,கருப்பு கோயிலும் 
தேடிக்கொண்டிருக்கிறான் 
அப்பனின் வேண்டுதலுக்காய்  
புதிய குதிரை 
நேர்ந்துவிட வந்தவன்.

செவ்வாய், அக்டோபர் 09, 2012

ரெட்டை வரி நோட்டு




இருளின் முற்றுப்புள்ளி 
வெளிச்சத்தின் 
தொடக்கப் புள்ளியாய் 
இருந்திருக்கலாம் .
ஆனால்..
இருளின் நீள அகலத்துக்குள் 
இடுங்கிப்போன 
வெளிச்சத்தின் முற்றுப்புள்ளியும் 
அதுவானதால் ,
காற் புள்ளிகளோடு  கதைத்தபடி 
இருளின் வரி நீண்டு கொண்டே .....
 உங்களால் 
அதனிடம் ,முற்றுப்புள்ளியை 
நினைவூட்டமுடியுமா ?

செவ்வாய், அக்டோபர் 02, 2012

ஒரு குடம் தண்ணி ஊத்தி....

கீற்று இணையத்தில் இன்று 

                                                                  

கவிழ்ந்த தென்னங்கீற்றாய் 
விரிந்த பஞ்சுத்தலை கோதி
கால் நீட்டிக் கிடக்கும் 
கிழவியைப் 
போகவரப் பார்த்திருக்கிறேன்...
ஒருவேளை 
இவள் அறியக் கூடுமென ,
ஒருநாள் கேட்டேன் 
புதிய வீட்டின் 
வாசலோரப் பூஞ்செடிகள் 
எத்தனைகுடம் 
நீரூற்றியும் 
ஒரு பூ கூட பூக்காததன் 
மர்மத்தை..!
தளும்பத் தளும்ப 
நீர் நிறைந்திருந்த 
குளத்துக்கு
குடங்கள் போதாதென 
வன்மமாய்ச் சிரித்தாள்...
மனநிலை பிறழ்ந்தவளோ
என நழுவியபோது 
பின்னால் சொல்லிக்கொண்டிருந்தாள்
வீடுகளாகிவிட்ட 
குளக்கரையில்,வெகுகாலமாய் 
கூட்டிய செங்கல்லினுள் சிற்றகலாகக் 
காவலிருந்த 
பேச்சி 
தான்தானென்று...!

MY SONG.... MY STORY..-1


மீள்பகிர்வு 
                                                     

தேநீர்க்கடையின் 
பண்பலைப்பாடலையோ,
தேநீரையோ-சிலாகித்தபடி 
நீங்கள் கூடியிருக்கையில் 
மௌனமாகச் சில்லறை தந்து 
விலகிப்போகும் 
அவனும் ஒரு பாடலாசிரியன் என 
உங்களுக்குத் தெரியாது ..
அவன் தெரிவிப்பதுமில்லை...
மிகுந்த பிரயாசையோடு 
அவன் எழுதிய வரிகளை 
கருவிகள் விழுங்கியதை -
அவன் பொறுத்துக் கொண்டான் 
வெற்றிக்குப்பின்னான 
ஒரு நேர்முகத்தில் 
தான் தாண்டியதான சவால்களில் 
சொல்லிக்கொள்ளலாம் என்று...!
எவர் பெயரும் போடாது
 ஏதோ ஒரு படத்தின் பின்னொட்டாய் 
வந்த பாடலை 
நூறாய் அழுத்தும் கள்ளத்தகடுகளும் 
ஏந்தவில்லை...
அவன் எழுதிய அந்த ஒற்றைப்பாடலை 
பெயர் சொல்லாமல் யாரேனும் 
முணுமுணுத்தால் கூடப் போதும்.
யாரோ போல் இவனே கேட்டும் 
இருப்பில் இல்லாததாய் 
வானொலிகளும் மறுத்துவிட்ட 
அவன் பாடலை நீங்கள் 
அறிவீர்களா?

ஞாயிறு, செப்டம்பர் 30, 2012

காலமாகிய சாட்சி



அது அன்று பூத்திருந்தது ...                                 
சம்பவம் நிகழ்ந்தபோது,
அதிர்ச்சியில் குலுங்கிப் 
பனித்துளி உதிர்ந்தது,
அழுததுபோல் கூட 
இருந்திருக்கலாம்...!
ஆனாலும்...
வாகனம் சறுக்கித் தடுப்போரம் 
விழுந்த 
சரவணக்குமாரின்
உயிர் பிரிந்த நொடியில் 
என்ன கூவினான் 
என்பதை-அந்த 
நெடுஞ்சாலையோர அரளியால் 
சொல்ல முடியவில்லை...
ஒருவேளை 
அந்தச் செவ்வரளி நிறம் 
அவனுக்குப் பிடிக்குமானால் 
அல்லிவட்டத்தில் 
அவன் ஆவி தஞ்சமடைந்திருக்கலாம் !
ஆனாலும்...
அது நேற்றாகிவிட்டதால் 
எதையும் சொல்லாமல் 
அந்த அரளி சாம்பிக்கிடக்கிறது.

சனி, செப்டம்பர் 29, 2012

விலங்கியலார் கவனத்திற்கு

மீள் பகிர்வு 

சிறகிருப்பதாக                                               
சொல்லியிருந்தார்கள்
அதனால்
தான் பறவையாய்இருக்கலாம்
என நினைத்தது .
ஒருநாள்
இறகுகளால் கோர்த்த
சிறகைக்காணோம்
கல்லாய் இறுகிய
பாறை இருந்தது ....
சமயத்தில்
பறக்க முடிகிறதே என
பரிசோதித்தபோது
சக்கைகள் சேர்ந்த
தக்கை தெரிந்தது ....
வளர்ச்சியா?
மாற்றமா?
வளர்சிதைமாற்றமா?

வெள்ளி, செப்டம்பர் 28, 2012

இடிந்த வாசல்


புதன், டிசம்பர் 14, 2011

மீள் பகிர்வு 


காலம்கடந்து நிற்கும்                                         
ஆசையில்
1972
என கட்டிய ஆண்டு
பொறித்துக்கட்டிய
முன்வீடு உடைத்து
காரை பெயரும் நடுவீட்டுக்குள்
கிடப்பவளின்
உறக்கம் ,கனவு,இளமை,குடும்பம்
யாவற்றின் மேலும்
ஓடிக்கொண்டிருந்தன
விரிவான சாலையின் வாகனங்கள்...
புல்டோசர் புதைத்த
அவள் வாழ்க்கையில்
புல் முளைக்காததை
உறுதிப்படுத்திப் போகிறது
தாழப் பறக்கும் விமானம்..

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...