கரண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கரண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், டிசம்பர் 08, 2020

எனக்குப் பிடித்த பாடல்

 வானத்தின் விரிபரப்பைவிட

நீலத்திற்குள் அமிழ உனக்குப்பிடிக்கும்
பிரம்மாண்ட தாரைகளை அண்ணாந்து பார்ப்பதைவிட்டு
உள்ளங்கை குவித்து
ஒழுகும் மழை ரசிப்பாய்
அலையாடு கடல்வெளியின் ஓரம்நின்று
சிப்பி பொறுக்கிச் சிரிப்பாய்
காத்திருக்கிறேன்
என்னை எப்படிப் பார்க்கிறாய் என்றறிய ****************************************************
ஆறுதலான சொற்களைத் தேடிக்கொண்டே
நடந்தாய்
கல்
கல்
கல்
கல்
சரியாய்ப் பிடிக்கும் லாவகம்
கை கூடிவிட்டது *******************************************
ஒரு பழைய ஓவியம்
வரைந்த பொழுதில் கற்பனை செய்திருந்த வண்ணக்கலவைகளை நினைவில் கொண்டு வருகிறது
ஒரு பழைய கவிதை
அதன் கட்டுமானத்துக்குள்
சறுக்குமரம் விளையாடி மகிழ்ந்த வாசகனை
நினைவில் கொண்டு வருகிறது
பழமையினால் மட்டும்
செல்லம் கொஞ்சவில்லை
என்ற ஆறுதலை
ஒரு கரண்டி கலந்து பருகிக்கொள்

புதன், செப்டம்பர் 30, 2020

புன்னகையின் வால்

 உண்மைதான் மருந்து என்றார்கள்

ஒரு வில்லை போதுமா என்றேன்
குழைத்து விழுங்கு என்றாய்
உண்மைதான் மருந்து என்றார்கள்
ஒரு கரண்டி போதுமா என்றேன்
உள்ளுக்கு எடுப்பதல்ல என்றாய்
உண்மைதான் மருந்து என்றார்கள்
குழிக்கரண்டியிலிட்டுக் காய்ச்சியபடி
தேடுகிறேன்
எங்கே ஓடிவிட்டாய்


*********************************************
நினைவாக இருக்கட்டும் என்றொரு படமெடுத்தோம்
நீ அளந்து பொருத்த முயற்சித்த புன்னகையின் வால்
பார்க்கும்போதெல்லாம் கண்ணில் உறுத்துகிறது
ஒருவேளை பார்த்தால்
விளக்கம் ஒன்றும் தந்துவிடாதே

வியாழன், செப்டம்பர் 24, 2020

கரிப்புமணி

 

உப்பாக இருப்பதென்று ஆனபிறகு

கைப்பிடியென்ன

மேசைக் கரண்டியென்ன

 

*******************************************

 

கடல் எத்தனை நீளம்

எத்தனை ஆழம்

எத்தனை வேகம்

இருக்கட்டும்

இன்று அளத்தில் உறைந்தாலும்

இருந்திருக்கிறேனே

அந்த நீளத்தில்

ஆழத்தில்

வேகத்தில்

அப்படித்தான் கரிப்பேன்

 

ஞாயிறு, செப்டம்பர் 20, 2020

தேநீர் நேரம்

 கொதித்துக் கொண்டிருக்கும்

தேநீரிலிருந்து

தப்ப விரும்பிய தூளை

நாளைய தேநீருக்காக

இறுக்கி மூடிவைத்தேன்

**********************************************************

காய்ந்த இலைகளின் மொடமொடப்பு
கறுப்பாக ஊறி ஊறிக்
கொதித்துக் கொண்டிருக்கிறது
உன் தேநீர்தயாராகும்
வரை
காத்திரு

**************************************************
சிறு நூல்வழி
ஆட்டிப்படைக்க முடிகிறது
மலைவிளைந்த தேயிலையின்
கடைசித் தருணத்தை
இறுமாப்புதான்

*******************************************
கோப்பைகளின் அளவைத்
தீர்மானித்தவனுக்கு
ஒரு கரண்டியா
இரண்டு கரண்டியா
எனக் கேட்பது பதில்முறை
**********************************************

திங்கள், மே 13, 2019

பார்க்காத பூ

ஒருபோதும் பார்த்திராத பூவுக்கென்று 
ஒரு பெயர் வைத்திருக்கிறேன்
ஒருபோதும் தொட்டிராத
மேகத்துக்கென்று 
ஒரு முத்தம் வைத்திருக்கிறேன்
என்ன வாசனை...
என்ன மிருது.....
ஒருபோதும் இறங்கியிராத
நதியின் அலையோடு
மிதந்து மிதந்து மிதந்து....

**********************************************
திரைச்சீலை கடந்து
வழியும் வெளிச்சம்
எதையோ தேடித்தேடி
உள்ளோடுகிறது
அப்பாலுக்கப்பாலாய்க் கேட்கிறது 

ஒரு ஜீவகானம்
கரண்டியைச் சரியாய்ப்பிடி
மாற்றெழுத்தைத் தட்டாதே

****************************************************
பசுமை துளிர்த்த மனதை நீவிவிடு
அந்தக்குழலுக்கு செய்யும் மரியாதையாக
ஒரு புன்னகை மிளிரட்டும்
இந்த இசைக் கலைஞனின் 

பிராணன் அல்லவா உறிஞ்சியிருக்கிறோம்
கழற்றிவைத்த மூளை 
சற்று தணப்பருகிலேயே உட்கார்ந்திருக்கட்டும்
நாம் குளிரில் சற்றே உலவி வருவோம்
அட.....இது மூங்கில் குளிர்
வா வா....




வெள்ளி, நவம்பர் 04, 2016

படைப்பு

கத்தியில் ஏழுவகை
கரண்டியில் நூறுவகை
தட்டு,தாலம்,ஒட்டிசமைக்க,
ஒட்டாமல் எடுக்க ,
ஊர்சமையல்,உலகசமையல்
முறைக்கேற்ற முன்னூறு எடுப்பு
எல்லாம் வாங்கி எல்லாம் கற்று
எடுத்து வை இரண்டடிசந்தில்
ஓடுங்கால் ஓடி ஒடுங்குங்கால் ஒடுங்கி 

நாடுங்கால்
நல்லவண்ணம் படைத்து
சாடுங்கால் சத்தமின்றி துடைத்து
வாடுங்கால்
வருமானம் தேடி ஓடு ஓடு
அவரவர் வயிறு அவரவர் பாடு
அனைவர் வயிறும் உந்தன் பாடு


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...