ஞாயிறு, செப்டம்பர் 20, 2020

ஓட்டைப்பல் வெள்ளம்

 அத்தனை வெளிச்சமும் சிரிப்புமான

பொழுதுக்குப்பின்

நாம் எடுத்துக்கொண்ட படம்
வெளிச்சத்துக்குள் வராது
நழுவியது
தற்செயல்தானே

*******************************
பார்க்கலாம்...பை
வரேன்
சீயூ
விதவிதமான விடைபெறல்களை
வெள்ளமாய் மூழ்கடித்தது
ஓட்டைப்பல் வழி கசிந்த
பாப்புக்குட்டியின் சிரிப்பு

தேநீர் நேரம்

 கொதித்துக் கொண்டிருக்கும்

தேநீரிலிருந்து

தப்ப விரும்பிய தூளை

நாளைய தேநீருக்காக

இறுக்கி மூடிவைத்தேன்

**********************************************************

காய்ந்த இலைகளின் மொடமொடப்பு
கறுப்பாக ஊறி ஊறிக்
கொதித்துக் கொண்டிருக்கிறது
உன் தேநீர்தயாராகும்
வரை
காத்திரு

**************************************************
சிறு நூல்வழி
ஆட்டிப்படைக்க முடிகிறது
மலைவிளைந்த தேயிலையின்
கடைசித் தருணத்தை
இறுமாப்புதான்

*******************************************
கோப்பைகளின் அளவைத்
தீர்மானித்தவனுக்கு
ஒரு கரண்டியா
இரண்டு கரண்டியா
எனக் கேட்பது பதில்முறை
**********************************************

இல்லாமற் போகவில்லை

 


வலிந்து சிரித்தல்
ஒற்றை அறைக்குள் நரகமான நாளில்
நீ முனைந்த முத்தம் 
அத்தனை கசப்பு
போதும் என 
மணிக்கட்டைத் தளர்த்திக்கொண்டபோது
புறங்கழுத்துக்குள்ளும்
தென்றல் புகுந்து எழுந்தது
தூரச்சிரிப்பு
தூரமுறைப்பு
நீதிமன்றங்கள் 
கூண்டுக்குள் வைக்கமுடியாத  
உறவு
கண்ணாடித்துகளை 
முறத்தில் அள்ளியபின்னும்
எங்கோ ஒன்று மினுக்குவதாகவே 
உற்று உற்று குனிந்து பார்க்கிறது
கதர்ப்பட்டு சேலையை 
ஞாபகமாக தூக்கிப்போட்டு விடவேண்டும்
அதன் புட்டாக்களுக்கு 
அவன் கண்ணாடியின் ஃபிரேம் ஜாடை

செம்பருத்தி கனம்

திரும்பிவந்து பார்க்கும்போது 
நிச்சயமாக இவ்விடம்தானா 
எனச்சொல்ல முடியாதபடி 
எல்லாம் மாறிப்போய்விடுகின்றன 
தூரங்களைத் தாண்டுவது 
பாதுகாப்பு என்றிருந்த நாளில் 
பாழ்பட்ட மனைக்கு என்று 
எவ்விதப் பொருண்மையும் இல்லை 
கனவுகளிலும் சிரித்துக்கொண்டிருந்த 
 ஒற்றைச் செம்பருத்திச்செடிதான் 
 கற்றுத் தந்திருந்து கனத்தை 
புத்துருக் கொண்ட இடங்களில் 
 செம்பருத்திக்கு மண்ணில்லை

அம்மாவின் அரிச்சுவடி

 அம்மாவாக இருப்பதற்கே 

அம்மா பிறக்கிறாள்

எல்லோர் குறிப்புமறிய கற்பதுதான்
அம்மாவின் அரிச்சுவடி
குறிப்பாகக் கூட
அவள் குறிப்பு 

அந்த பாடத்திட்டத்தில் கிடையாது

தன் அம்மாவின் முகத்தையே 

பொருத்திக் கொள்ளும் அம்மாவுக்கு 

குறைந்தது 

இருபதாண்டை விழுங்கிய 

ஜீரணக்கோளாறு இருக்கலாம்

மாதவிடாய்க்கறையை உறிஞ்சிவிடும்

 நாப்கின்களில் இருந்து 

அம்மாக்களுக்கு சக்தி உள்ளிறங்க வழியுண்டா
தேவைப்படுகிறது
அம்மாவாய் இருக்க
  

குப்பை பயணம்

எதைக் கொண்டு வந்தோமென்றும் 

தெரியாமல்
எதைக் கொண்டு போகிறோமென்றும் 

தெரியாமல்
போக வேண்டும் என்றுமட்டும் 

தோன்ற வைத்து விடுகிறீர்கள்.
அவர்களும் கிளம்பி விடுகிறார்கள்
நீங்கள் குப்பையில்
வீசியவற்றை மாட்டிக் கொண்டாவது

நம்பிக்கைதான் 

நெடுஞ்சாலைகளின் மீது
அவர்களில் எவரோ வார்த்த தார்தானே

********************************************************************


 

சிராத்துண்டு வரலாறு

 யாரோ நாற்காலி பற்றி

எழுதியிருக்கிறார்கள்

நாற்காலி படங்களாகக் காட்டி
என் விருப்பம் கேட்கிறது
இணையம்
இரண்டுபேர் உட்காரத்தக்க
அகலத்தின்
பழகிப்பழகிக் கருத்த
எங்கள் மரநாற்காலி
யார் யாரையோ உட்கார்த்தி
இறுதிப்பயணம் போன வரலாறு
ஒருநாள்
அடுப்பெரிக்கும் சிராத்துண்டாகி
முடிந்தபோது
அவ்வளவு மழமழப்பும்
உடையுமா எரியுமா
என வியந்த எங்கள் விழிகளுக்குள்
இவ்வளவு ஆண்டும்
உறுத்திக் கொண்டிருப்பது
இன்றுதான் தெரிகிறது

ஓட்டைப்பல் வெள்ளம்

  அத்தனை வெளிச்சமும் சிரிப்புமான பொழுதுக்குப்பின் நாம் எடுத்துக்கொண்ட படம் வெளிச்சத்துக்குள் வராது நழுவியது தற்செயல்தானே *******************...