வெள்ளி, ஜூலை 25, 2014

ஒன்றாக என்றால் ஒன்றாக இல்லை

டயர் உருட்டியபடியே 
வாய்ப்பாட்டைத் தப்பாய்ச்சொல்லி 
என்னிடமே குட்டு வாங்கிய 
மண்ணெண்ணெய் வண்டிக்காரர் மகன் ரவி 
ஒன்பதோடு ஒதுங்கி 
மார்க்கெட் தாதா ஆகிவிட்டான்...

இறங்கும் காற்சட்டையை
இழுத்துவிட்டவாறே 
நோட்டு சுமக்கும் துரை 
லாரிஷெட்டில் அண்ணனோடு ..

பின்னலைத் திருகாமல் 
பேசத்தெரியாத வசந்தியிடம் 
சீனிசாரின் பிரம்பு விளையாடியபின் 
அவள் கல்யாணத்தில்தான் 
பார்த்தோம் 
பத்தாம்வகுப்பு பி பிரிவு சார்பில் 
குங்குமச்சிமிழ் பரிசோடு ...

சீதர் என்றே அறியப்பட்ட ஸ்ரீதர்
தப்புக்கணக்கிற்காக  
 மைதானத்தில் முட்டிகசிய 
சுற்றிய நாளிரவு 
பதினைந்து ரூபாயோடு ஓடிப்போனான்...

முன்னாள் மாணவர் சந்திப்புக்கு 
மெல்லவும் ,துப்பவும் தெரிந்து 
மிட்டாயோடு வெளியேறிய 
இருபத்து ஏழுபேர் கூடினால் 
போதுமென்கிறார் 
இப்போதைய தலைமை ஆசிரியரும்......

படம் -இணையம் 

ஞாயிறு, ஜூலை 20, 2014

பிட்சாந்தேஹி


கவனம்பதியாப் 
பாடலின் நடுவிலும் 
ஒற்றை வயலின் இழுப்பில் 
உயிர் துளிர்க்க வைப்பவன் 

பெயரறியாத் தெய்வத்திற்காக
சம்பங்கிப் பூக்களை 
நெருக்கித் தொடுத்துக் காத்திருப்பவன் 

மலிவுவிலைத் துப்பட்டாவிலும் 
கவின் சித்திரம் பதித்தவன் 

நாற்பது ரூபாய்த் துண்டுப் பாவாடை 
நாலுமுழம் அரளியிலும் 
உங்கள் வேண்டுதல்களுக்காகக் 
தேவியை 
ஆவாஹனம் செய்துவைப்பவன் 

நிமிடங்களில் கடக்க இயலாமல் 
நாசிமூடி நகரும் 
தெருமுனையில் 
நாள்முழுதும் நின்றபடி 
திடமானதொரு தேநீர் கலப்பவன்  

யாரோ வாங்கவோ,
புறக்கணிக்கவோ போகும்,
பழச்சுளைகளின் மேல் கவனமாக 
பாலிதீன் போர்த்துபவன் .....

நம்பிக்கையுடன் வாழ 
இன்னும் இருக்கிறது உலகம் 

23 7 14 ஆனந்தவிகடனில் வெளியான கவிதை 

திங்கள், ஜூலை 14, 2014

அபி உலகம்-நீண்ட இடைவெளிக்குப் பின்

வாசல் முருங்கையின்
வலுவில்லாத கிளைகளில்
கூடு கட்டியது  பறவை
வழக்கம்போல் பூ உதிர்க்கப் போன
அபியிடம்
அம்மா உச்சு கொட்டினாள்..
ஏம்மா ..
பாவம் அபி ..அந்தக் கூடு
கலைஞ்சுரும்
கலைஞ்சா என்ன
நம்ப வீடு மாதிரிதானே
அம்மா ..அது கூடு கட்டும்போது
நீ பார்த்தியா
ம்ம்...கொஞ்ச கொஞ்சமா குச்சி வெச்சு
ரெண்டு நாளாக் கட்டுச்சு அபி....
நீ மோசம்மா....
ஏண்டா....
பாத்துகிட்டே சும்மாதானே இருந்தே ...
சொல்லியிருக்கலாம்ல...
என்ன அபி  பூ உலுக்குவான்னா....
இல்லம்மா...நம்ப வீடு கட்டும்போது
அப்பாகிட்டே
சிமென்ட் பாத்து வாங்கச் சொன்னீல்ல

ஞாயிறு, ஜூலை 13, 2014

என் தோழி

ஜூலை 7 அதீதம் இணைய இதழில் 

manjal
பட்டாம்பூச்சிகள் இங்கேதான்
சுற்றுகின்றன.
மஞ்சள் கறுப்பி ,ஆயிரம் குட்டி
போட்டிருப்பாள் போல…
அவளைக் கொண்டாடி
ஒரு நூறு கவிதை எழுதியிருப்பேன்…
அவளோடு நடப்பெல்லாம்
ஒரு தோழி போல் பகிர்ந்திருப்பேன் ..
நகைச்சுவைத் துணுக்குகளை
வாசித்துக்காட்டி சிரித்ததும் உண்டு …
எனக்குப் பிடித்த பாடலை
கள்ளக் குரலில்
பாடிக்காட்டி அபிப்பிராயமும்
கேட்டிருக்கிறேன்…
அவள் வலப்பக்க பூ தாவினால்
பிடிச்சிருக்கு…
இடப்பக்கமென்றால் சரியில்லை…
எல்லாமே கழிந்த நாட்களில் நிகழ்ந்தவை….
இப்போதுகூட
மகளின் மழலையர் வகுப்பு
வண்ணப்படமே நினைவுகளைக் கிளர்த்தியது..
ஒரு வண்ணத்துப்பூச்சியின்
ஆயுள் குறித்த அறிவியல் உண்மை
சொல்லாமல்
என் மஞ்சள் கறுப்பியைத் தேடித் தருவாயா
அவளை மறந்து
அனாதையாய் விட்டதற்காக மன்னிப்புக் கேட்கவேனும்…
**

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...