தூரிகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தூரிகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூன் 12, 2019

கெட்டித்துப் போன தூரிகை

ஒழுங்குபட்ட வண்ணத்தீற்றல்கள் இல்லை
திடீரென எகிறும் ஆரஞ்சுக்கு அருகே 
கடல்நீலம் நெளிநெளியாக நீள
சாய்வளையங்கள் பச்சையில்
எதற்கென்றே தெரியாது 
குறுக்குமறுக்கில் பிரௌன் கோடுகள்
தலைகீழாக வழிகிறது பொன்மஞ்சள்
ஒவ்வொன்றாகப் பொருள் கேட்காதே
சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன்
அதுதான் நான்

******************************************************
வீட்டின் நீள அகலத்துக்குத் தக்க 
திரையில் தீட்ட முடிவதில்லை வாழ்வை
விதிமுறைகளின்படி
சுற்றிலும் இடம்விட்டேன்
மனச்சித்திரத்துக்கேற்ற வண்ணம் 

தோய்த்த தூரிகையைக் கையில் வைத்தபடி
யாருக்கோ பதில் சொல்லித் 

திரும்புவதற்குள் உலர்ந்துவிடுகிறது
கெட்டித்துப்போய்விட்ட தூரிகை 

உதறுவதற்குள் நல்லவேளை
எரிவாயு பதிவுசெய்ய வேண்டுவது 

நினைவுக்கு வந்துவிட்டது
சோறு முக்கியம் சார்





செவ்வாய், ஜனவரி 12, 2016

ஜனவரிப் பூக்கள் 1

ஆக
அந்த வண்ணத்துப்பூச்சியை
நீ
தூரிகையோடுதான்
துரத்துகிறாய்
*****************************
அமர முற்பட்டபோது
கிளைகள்
ஒடிந்ததை அறிந்த
பறவை
பறக்க முற்பட்டபோது
சிறகு உதிர்ந்ததை
உணர்ந்தது

*****************************
வானத்தின் நீலமும்
நீ இறைத்ததாகவே
நம்புகிறேன்
ஊமத்தம்பூ 
நீட்டிய கரம் பற்றிக்கொள்

****************************
உள்ளம் என்பது
இப்படித் ததும்பும் குளமா
மீனாகக்கிடந்து
அறியாது போனேனே

******************************
நிறைய பலூன்கள்
நிறைய காற்றாடிகள்
சந்தேகமே இல்லை
உங்கள் உலகம்
திருவிழா கொண்டாடியபடியே இருக்கிறது
நாங்கள் தான் அறியவில்லை

************************************
எங்கிருந்தோ ஒரு கேள்வி
உரித்த பூண்டுத்தோல் போலவே வீசிப்போகிறாய்
விழுந்த இடம்
உறுதி செய்யாமல்

**************************************
யாருடைய தேன்மொழிகளோ
யாருடைய நஸ்ரியாக்களோ
யாருக்கேனும்
கீதா அக்காகளாகி
ஆறுதல் சொல்கிறார்கள்
அன்பு செய்கிறார்கள்

**************************************
இரண்டு நாட்கள்
ஆகிவிட்டால்
சந்திரன் சுட்டெரித்த வதையும்
மறந்து விடலாம்

*********************************

மூன்று வேளையும்
நிலாவைப் பிட்டுத்தின்று
இரண்டு வேளையும்
நட்சத்திரம்
கரைத்துக் குடிப்பவனிடம்
ஆரஞ்சு மிட்டாய்
விற்கப் பார்க்கிறாய்
அஜீரண மருந்தை
எழுதி அனுப்பாமல் பின்னே

************************************
ஒரு காகிதக்கோப்பையை
ஒரு நெகிழிப்பையை
ஒரு குளிர்பானக்குப்பியை
ஒரு மலிவுவிலை எழுதுகோலை
மட்டுமே
பயன்கொண்டு எறிவதாக
இவற்றின் வருகைக்குப்பின்னே
இத்தத்துவம் அறிந்ததாக
நினைத்தால்
நீ பாவம்
அல்லது பாவி



வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...