பழமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பழமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், டிசம்பர் 08, 2020

எனக்குப் பிடித்த பாடல்

 வானத்தின் விரிபரப்பைவிட

நீலத்திற்குள் அமிழ உனக்குப்பிடிக்கும்
பிரம்மாண்ட தாரைகளை அண்ணாந்து பார்ப்பதைவிட்டு
உள்ளங்கை குவித்து
ஒழுகும் மழை ரசிப்பாய்
அலையாடு கடல்வெளியின் ஓரம்நின்று
சிப்பி பொறுக்கிச் சிரிப்பாய்
காத்திருக்கிறேன்
என்னை எப்படிப் பார்க்கிறாய் என்றறிய ****************************************************
ஆறுதலான சொற்களைத் தேடிக்கொண்டே
நடந்தாய்
கல்
கல்
கல்
கல்
சரியாய்ப் பிடிக்கும் லாவகம்
கை கூடிவிட்டது *******************************************
ஒரு பழைய ஓவியம்
வரைந்த பொழுதில் கற்பனை செய்திருந்த வண்ணக்கலவைகளை நினைவில் கொண்டு வருகிறது
ஒரு பழைய கவிதை
அதன் கட்டுமானத்துக்குள்
சறுக்குமரம் விளையாடி மகிழ்ந்த வாசகனை
நினைவில் கொண்டு வருகிறது
பழமையினால் மட்டும்
செல்லம் கொஞ்சவில்லை
என்ற ஆறுதலை
ஒரு கரண்டி கலந்து பருகிக்கொள்

வெள்ளி, நவம்பர் 22, 2013

மண்ணாகப் போகுமுன்...

கீற்று இணைய இதழில் நேற்று(21 11 13)

வண்ணம் வெளிறிய, பூச்சு உதிரும் 
சுவர்கள் காத்துக் கொண்டே இருக்கின்றன 
எதையாவது கிறுக்கவும்,
நினைவூட்டும் கோடுகள் புள்ளிகள் இழுக்கவும்,
மஞ்சள் வட்டமும் குங்குமமும் 
தீற்றிப் பூசை போடவும் ,
தன்மேல் சாய்ந்தபடி கதைபேச,
மூக்கைச் சிந்தித் துடைக்க,
தோரணையாகக் கையூன்றி நிற்க ...
ஒரு படத்தை, கண்ணாடியை, வாழ்த்துமடலை
எதையாவது மாட்ட -
சுத்தியும் ஆணியுமாக இடம் தேட ...
யாராவது வந்து உறவு கொண்டாடி
வெற்றிலை கிள்ளியபடி மீதிச் சுண்ணாம்பைத்
தடவும் ஒரு நடுங்கும் கையும்
நெருங்காமல்
இடிந்தே போய்விடப் போகிறோமோ
என்ற நடுக்கத்தில் ...
இடம்பெயர்ந்த எவரேனும் மீள வேண்டுமென்ற
வேண்டுதலை
வீட்டுத் தெய்வத்திடம் வைத்தபடி

புதன், டிசம்பர் 19, 2012

தடங்கல(ள )ற்ற பாதை

உன் வழிதான்
என் வழி
என் வழிதான்                                                           
அவன் வழி -அவள் வழி
அவள் ..அவன்..அவள்..
அவர்கள்..இவர்கள்...

யார் பாதம் புல் பூண்டு
மிதித்ததோ ..?
தடம் பிறந்தது என்றோ..?
அறியோம் பராபரமே ..
அடி பிரதட்சிண பாதயாத்ரையில்தான்
என்,உன்,அவன்,அவள்
வாழ்வு நடக்கிறது..


சேறோ ..,நீரோ,
அறியேன்...
ஒடிந்த முள்..,பறக்கப் பார்க்கும்
ஒற்றை இதழ்
எதையும் தலைதூக்க விடாது
பாதங்கள் சுற்றிக்கொண்டேயிருக்கின்றன
என்..,உன்..,அவன்..அவள்..,
இவன்,இவள் ..பாதங்கள்

வெள்ளி, டிசம்பர் 07, 2012

"ஆம்பிள சட்டை "



                                   
பிரிய   நடிகை 
காதலன் பிரிவை 
அவன் சட்டை நிரப்புவதாக 
பட்டன் திருகி நின்ற படம் 
அன்று -வினோதம்.
நாகரிகப் பெண்களின் 
தேநீர்ச் சட்டை வாசகங்கள் 
நாவலில் ,
கவர்ச்சிக்கோ,கேலிக்கோ.....

மடித்துவிட்ட

முழுக்கைச் சட்டையோடு வந்து 

பேசினால் -அவள் 

புரட்சிப்பெண் என்பது நம்பிக்கை!
.
பள்ளி நாடகத்தில் 

ஆண்வேட வாய்ப்பை 

அண்ணன் தம்பி உள்ளவளுக்கே 

தருவார் ருக்மிணி டீச்சர்..

எங்கள் வீடு போல், 

பாத்திரம் வாங்க உதவாத 

மாமாவின் கதர்ச் சட்டைகள் 

அத்தைக்குப் பிடித்ததேயில்லை.

யோசனைகளோடு ,

பழைய சட்டைகள் மடிக்கிறேன்-

சேலையின்மேல் அணிந்து 

கல் சுமக்கப்போகும் செல்விக்காகவும்,

நெல் உலர்த்தும் சந்திராவுக்காகவும் .

செவ்வாய், அக்டோபர் 30, 2012

"பஞ்சம் பிழைக்க..."

21 10 12கல்கி இதழில் வெளியானது 



முதுகிலேறி,
எல்லைக்காவல் செய்த 
மண்குதிரைகள் ரெண்டும் 

 
தண்டவாளம் தாண்டி                                  
வண்ணமிழந்து சாய்ந்து கிடக்க ,
அவ்வழி வந்த 
விரைவுரெயிலில் தொற்றி,
கட்டிட மேஸ்திரியாகப்
போயிருக்கலாம் 
நொண்டிக்கருப்பு.. ...
வண்ணக்கொடிகளுடன் 
எல்லைக்கல் கட்டி நிற்கும் 
புதிய நகரில் 
கருவைக்காடும்,கருப்பு கோயிலும் 
தேடிக்கொண்டிருக்கிறான் 
அப்பனின் வேண்டுதலுக்காய்  
புதிய குதிரை 
நேர்ந்துவிட வந்தவன்.

வியாழன், அக்டோபர் 18, 2012

நான்... நான்... நான் ....

  

சின்ன அத்தை போல்  
செவிமடல் ..
வம்சமே ஏறிய  நெற்றிமேடு ..
பிசிறடிக்கும்  பல்வரிசை ,
தலைசாய்த்த உரையாடல் 
ரெண்டுமே தாத்தாவழி ...
வரிக்கு வரி "ம் "போடுவது 
ஆச்சியின் வழக்கம் ..
பெயரின் பின்வால் 
தலைமுறைச் சிந்தனைகளை 
வெட்டி ஒட்டியது !
ஆகிருதி கூட்டும் ஆடைகள் 
அவ்வப்போதைய நடைமுறைப்படி ...

"நான் "

என்னிலிருந்து பிரிவதுமில்லை 
என்னில் உறைவதுமில்லை...                              

செவ்வாய், அக்டோபர் 09, 2012

ரெட்டை வரி நோட்டு




இருளின் முற்றுப்புள்ளி 
வெளிச்சத்தின் 
தொடக்கப் புள்ளியாய் 
இருந்திருக்கலாம் .
ஆனால்..
இருளின் நீள அகலத்துக்குள் 
இடுங்கிப்போன 
வெளிச்சத்தின் முற்றுப்புள்ளியும் 
அதுவானதால் ,
காற் புள்ளிகளோடு  கதைத்தபடி 
இருளின் வரி நீண்டு கொண்டே .....
 உங்களால் 
அதனிடம் ,முற்றுப்புள்ளியை 
நினைவூட்டமுடியுமா ?

செவ்வாய், அக்டோபர் 02, 2012

ஒரு குடம் தண்ணி ஊத்தி....

கீற்று இணையத்தில் இன்று 

                                                                  

கவிழ்ந்த தென்னங்கீற்றாய் 
விரிந்த பஞ்சுத்தலை கோதி
கால் நீட்டிக் கிடக்கும் 
கிழவியைப் 
போகவரப் பார்த்திருக்கிறேன்...
ஒருவேளை 
இவள் அறியக் கூடுமென ,
ஒருநாள் கேட்டேன் 
புதிய வீட்டின் 
வாசலோரப் பூஞ்செடிகள் 
எத்தனைகுடம் 
நீரூற்றியும் 
ஒரு பூ கூட பூக்காததன் 
மர்மத்தை..!
தளும்பத் தளும்ப 
நீர் நிறைந்திருந்த 
குளத்துக்கு
குடங்கள் போதாதென 
வன்மமாய்ச் சிரித்தாள்...
மனநிலை பிறழ்ந்தவளோ
என நழுவியபோது 
பின்னால் சொல்லிக்கொண்டிருந்தாள்
வீடுகளாகிவிட்ட 
குளக்கரையில்,வெகுகாலமாய் 
கூட்டிய செங்கல்லினுள் சிற்றகலாகக் 
காவலிருந்த 
பேச்சி 
தான்தானென்று...!

MY SONG.... MY STORY..-1


மீள்பகிர்வு 
                                                     

தேநீர்க்கடையின் 
பண்பலைப்பாடலையோ,
தேநீரையோ-சிலாகித்தபடி 
நீங்கள் கூடியிருக்கையில் 
மௌனமாகச் சில்லறை தந்து 
விலகிப்போகும் 
அவனும் ஒரு பாடலாசிரியன் என 
உங்களுக்குத் தெரியாது ..
அவன் தெரிவிப்பதுமில்லை...
மிகுந்த பிரயாசையோடு 
அவன் எழுதிய வரிகளை 
கருவிகள் விழுங்கியதை -
அவன் பொறுத்துக் கொண்டான் 
வெற்றிக்குப்பின்னான 
ஒரு நேர்முகத்தில் 
தான் தாண்டியதான சவால்களில் 
சொல்லிக்கொள்ளலாம் என்று...!
எவர் பெயரும் போடாது
 ஏதோ ஒரு படத்தின் பின்னொட்டாய் 
வந்த பாடலை 
நூறாய் அழுத்தும் கள்ளத்தகடுகளும் 
ஏந்தவில்லை...
அவன் எழுதிய அந்த ஒற்றைப்பாடலை 
பெயர் சொல்லாமல் யாரேனும் 
முணுமுணுத்தால் கூடப் போதும்.
யாரோ போல் இவனே கேட்டும் 
இருப்பில் இல்லாததாய் 
வானொலிகளும் மறுத்துவிட்ட 
அவன் பாடலை நீங்கள் 
அறிவீர்களா?

வெள்ளி, செப்டம்பர் 28, 2012

இடிந்த வாசல்


புதன், டிசம்பர் 14, 2011

மீள் பகிர்வு 


காலம்கடந்து நிற்கும்                                         
ஆசையில்
1972
என கட்டிய ஆண்டு
பொறித்துக்கட்டிய
முன்வீடு உடைத்து
காரை பெயரும் நடுவீட்டுக்குள்
கிடப்பவளின்
உறக்கம் ,கனவு,இளமை,குடும்பம்
யாவற்றின் மேலும்
ஓடிக்கொண்டிருந்தன
விரிவான சாலையின் வாகனங்கள்...
புல்டோசர் புதைத்த
அவள் வாழ்க்கையில்
புல் முளைக்காததை
உறுதிப்படுத்திப் போகிறது
தாழப் பறக்கும் விமானம்..

சனி, ஆகஸ்ட் 25, 2012

வாழ்வின் தருணங்களை எழுப்புதல்



ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு 
வர்த்தக வளாகம் 
எது வேண்டுமானாலும் 
எழுப்புங்கள்...
தனிமனைகளாகக் கூடப் 
பிரிக்கலாம்.
நோக்கம்போல் செய்யுங்கள்....
சுவரொட்டி ,ஒலிபெருக்கிப் பாடல்கள்,
தட்டிப்படங்கள்,துண்டு விளம்பரங்கள்                   
கோலாகலத் தோரணங்களை 
விலக்கி நுழைவதும்,
கட்டி இறங்குவதுமான உற்சாக முகங்கள்...
வியர்வை ,கசங்கல்,காத்திருப்பு,
தள்ளுமுள்ளு தாண்டி...
கண்ணீரும் புன்னகையும் 
கைத்தட்டலும் சீழ்க்கையுமாய் 
யார் யார் வாழ்வையோ 
அங்கீகரித்த பொழுதுகள் 
அந்த கிழிந்த திரைக்கு 
கீழும் ,
உடைந்த இருக்கைகளின் ஊடேயும் 
உறைந்து கிடக்கின்றன ....
அவற்றை தக்க முறையில் 
அடக்கம் செய்துவிட்டு 
மூடிக்கிடக்கும் 
பழைய திரையரங்கை 
நோக்கம் போல் மாற்றிக்கொள்ளுங்கள் ...
தினமும் காட்சி தொடங்குமுன் 
ஒலித்த 
பழைய பாடலின் எதிரொலி 
தொடர்நதால்
பயப்பட  வேண்டாம் 
மணி அடித்ததும் நின்றுவிடும் 

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...