தேநீர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேநீர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், டிசம்பர் 09, 2021

கட்டுக்குள்

 என்னா வெயிலு

என்றபடி
கீரைக்கட்டுகளின்மேல்
தண்ணீரைத் தெளிக்கிறாள்
அந்த லோட்டாவை வாங்கி
அவள் வாடிய முகத்தின்மேல் தெளிக்க மாட்டோமா என்றிருக்கிறது
மனசுக்குள்
வாய்
இருவத்தஞ்சா அநியாயமால்ல இருக்கு என்கிறது
அடங்காப்பிடாரி
*******************************************************
ஒரு உழக்கு பாலின்
வெண்மை தளர்ந்த சாடையின் இறுதிக்கோட்டைத்தொடுமளவு
விளாவிய தேநீரை
அளந்து அளந்து எல்லோருக்கும் தந்தபிறகான
வண்டலைக் குடித்தே பழகிய அம்மா சொல்கிறாள்
எனக்கு சூடே ஆவறதில்ல என்று
ஏட்டையாவது எடுத்துப்போடு
அப்புறம் அதற்கொரு சாக்கு கண்டுபிடிக்க வேண்டும்

செவ்வாய், ஏப்ரல் 20, 2021

எண்கரத்தாள்

 கடிகாரத்தாலோ நாட்காட்டியாலோ புதிய நாள் புதிய காலம்

முகக் கவசத்தின் காதை
காதோடு தொங்கவிட்டுக்கொண்டு
பீடி பிடித்தபடி வம்பளந்து கொண்டிருக்கும்
பணியாளர் கூட்டம்
வியர்வையை முந்தானையால் ஒற்றிக்கொண்டு வாடிக்கையாளர் குரலுக்கெல்லாம் நீளும் எண்கரத்தாள்
காற்றிலாடும் நிறநிறநிறப் பொட்டலங்கள்
கிழமை தெரியாது சுழலும் இந்தக்காலம்தான்
நிகழ்காலம் அவளுக்கு
ஒருநிமிடம் இடைவெளி கொடுத்தீர்களானால்
அந்த தம்ளரில் ஆறிக்கிடக்கும்
தேநீரால் தொண்டையை நனைத்துக்கொண்டு கேட்பாள்
என்னங்க வேணும்

திங்கள், அக்டோபர் 05, 2020

கால்வலிக்க நிற்கும் அன்பு

 

நீர்த்துப்போ
நீர்த்துப்போ
அகங்காரமே
கதவைத் தட்டிக்கொண்டே 
கால்வலிக்க நிற்கும் அன்பை
சமாதானம் செய்வது என் பாடு

********************************************

இன்றைய தேநீர்
நன்றாக அமைந்துவிட்டதா
அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருப்பவனே
நீ ஏன் உடனருந்தும்படி 
யாரையும்
அழைப்பதில்லை
**************************************

மதிலுக்கு
அந்தப் பக்கமிருந்து
ஒவ்வொன்றாக வந்து விழுகின்றன
உன் உடைமைகள்
ஒட்டுமொத்தமாக
நீ
குதித்தால் என்ன



ஞாயிறு, செப்டம்பர் 20, 2020

தேநீர் நேரம்

 கொதித்துக் கொண்டிருக்கும்

தேநீரிலிருந்து

தப்ப விரும்பிய தூளை

நாளைய தேநீருக்காக

இறுக்கி மூடிவைத்தேன்

**********************************************************

காய்ந்த இலைகளின் மொடமொடப்பு
கறுப்பாக ஊறி ஊறிக்
கொதித்துக் கொண்டிருக்கிறது
உன் தேநீர்தயாராகும்
வரை
காத்திரு

**************************************************
சிறு நூல்வழி
ஆட்டிப்படைக்க முடிகிறது
மலைவிளைந்த தேயிலையின்
கடைசித் தருணத்தை
இறுமாப்புதான்

*******************************************
கோப்பைகளின் அளவைத்
தீர்மானித்தவனுக்கு
ஒரு கரண்டியா
இரண்டு கரண்டியா
எனக் கேட்பது பதில்முறை
**********************************************

புதன், அக்டோபர் 09, 2019

கண்ணீர் நதிசூழ் அறை

ஒரு மழைமாலை
இருளும் குளிருமாக இருக்க வேண்டும்
நீ அண்ணாந்து பார்த்தவுடன்
நட்சத்திரங்கள் மின்ன வேண்டும்
அப்புறம் மொறுமொறுவென ஏதாவது
கொதித்த மணத்தோடு தேநீர்
சரி
உனக்கே தெரியும்
இதெல்லாம் இதே நியமத்தில் வராதென்று
மைக்கை மாற்றிக்கொடு
வேற...வேற...

******************************************************
இடுங்கிய கண்ணும் உதடுமாகச் சிரிக்கும்
மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை 

நேரலையாகப் பார்க்க முடிகிறது
மனசு பொங்கினால் போதாதா
கண்களும் சேர்ந்து கொள்ளணுமா
" அப்பா....காமராவைச் சரியா வைங்கப்பா....
முகத்தைத்தவிர உங்க ரூமெல்லாம் தெரியுது..."
சிணுங்கிச் சிரிக்கிறாள் பெண்ணரசி
இனி
பக்கத்திலொரு கைக்குட்டை 

வாகாக வைக்க வேண்டும்
*********************************************************

செவ்வாய், ஜூன் 11, 2019

அதட்டலின் வேகம்

கனக லக்ஷ்மி என்ற பெயர்
தன்னைத்தவிர
வேறு யாருக்கும் இருக்காது என்றாள் என் பள்ளித்தோழி
இன்று ஒருத்தி
வரிசையில் எனக்கு முன் நின்றிருந்தாள்
அவள் எண் 17
நான் 18
17 அழைக்கப்பட்டது
அவள் சென்றாள்
கனக லக்ஷ்மியா என்றார் அழைத்தவர்
இங்கிருந்தே நான் இல்லை 

எனச் சொல்லிக்கொண்டேன்
அவள் எண் 17 என்றே இருக்கட்டும்


*****************************************************************
எழுதப்படாத குறிப்பு
ஒன்றை வைததிருந்தேன் உன்னைப்பற்றி

ஓரெழுத்தும் பொருந்தாது 
எனப்புரிந்தது நேரில் கண்டபோது

குறிப்பின் உடையவனைக் 
கற்பனைக் கதாபாத்திரமாக்கிவிட்டேன்
இனி எழுத்துகளை எச்சரிக்கையாகக்
கோர்க்கவேண்டும்
**********************************************************
உங்கள் தேநீரில்
உங்கள் பெயரெழுதி வருகிறது
நிறம் மணம் திடம்
எல்லாமே யார் தீர்மானத்திலோ
உனக்கு வேண்டியது தேநீர்தானே
அதட்டலின் வேகத்துக்குமுன் விழுங்குவது என்றாவது ஒருமுறை
சொல்லிவிடுங்கள்
நிறம் மணம் திடம் இனி என் தீர்மானம் என்று

திங்கள், மே 13, 2019

செட்

நிறைய கோப்பைகள்
சேர்ந்துவிட்டன
அடுக்கி வைத்தேன்
தட்டோடு
தட்டின்றி
பிடியோடு
பிடியின்றி
பூப்போட்டு
பொன்னிறக்கோடுகளோடு
கண்ணாடி,பீங்கான்,
எவர்சில்வர்....
ஆறு ஆறாக வைப்பது
எவருடைய யோசனையோ
எந்த ஆறிலிருந்தும்
கலைக்க முடியாமல்
ஒற்றை தம்ளரில் வார்த்த தேநீர்
ஏடு படியாது பருகுதல் என் வழக்கமானது
வருவதென்றால் தயவுசெய்து
ஆறு பேராக வரவும்

திங்கள், அக்டோபர் 15, 2018

எதிர்பார்ப்புகளின் கண்ணாமூச்சி

கண்டிப்பாக மீசை வைத்திருப்பார்
 என நினைத்திருந்தவர் வந்து 
பெயர் சொன்னபோது 
இதற்குமேல் வேண்டாமெனத் தோன்றுகிறது..
பேசுகிறார்.
எத்தனை கற்பிதங்களை நொறுக்குவது?
யாராவது வந்து உட்காருங்கள்
நான் தேநீர் தயாரிக்கப்போகிறேன்

புதன், அக்டோபர் 26, 2016

ரோஜா தேநீர்

இவ்வளவு சர்க்கரை இன்ன நிறஅளவு
இவ்வளவு திடம்
என்று தனது
விருப்பத் தேனீரை 
அடையாளம் காணவும் நிதானமாக அருந்தவும்
உங்களைப்போல
தெருமுனைக்கடை வரையல்ல
நூற்றாண்டுகளைக் கடந்து
நடந்திருக்கிறாள் உங்கள் பிரியசகி
காதலைச்சொல்ல
ரோஜா வேண்டாம்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...