நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூன் 11, 2019

என்னிஷ்டம்

மௌனமாக இருப்பதிலிருந்து தப்பிக்க
எதையாவது பேசி
உன்னைப்பற்றிய பேச்சாக மாறுவதிலிருந்து 
தப்பிக்க
மௌனத்துக்கு மீண்டு
இம்முறை மௌனத்தின் 
சுருக்கிலிருந்து தப்பிக்க
பாடலைச் சரணடைந்து
நினைவுகளைக் 
கடைவாயிலிட்டு அரைக்கும் பாடலோ 
பல்லிளிக்கிறது
நாலு எட்டு வைத்து 
மூச்சிரைக்க 
படங்களின் நிழலுக்குள் புகுந்தேன்
சும்மா சும்மா இதென்ன
படத்தில் அமர்ந்தபடி சலிக்கிறாய்
என்ன செய்யப்போகிறாய் படங்களை வைத்து....
அடப்போப்பா
போனது உன்னிஷ்டம்
நினைப்பது என்னிஷ்டம்

வெள்ளி, ஏப்ரல் 19, 2013

பொருளறியாமல் .....




அலைகளினூடே சாய்ந்து ,
சரிந்து....
அடிவைக்கும்  பாதங்களை,
துடுப்புகளின் தீண்டலை,பாய்ச்சலை
 சுடுகதிர்களின் ஆக்கிரமிப்பை,
நீர்த் தட ஆறுதலை ,
உலவலின் விறுவிறுப்பை ...
எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன
கரையோர ஓடங்கள் ...


மௌனித்துக் கிடக்கிறது கரை...

முகட்டின் இப்புறமான
நதியின் தடமறியாது
மலையேறிக் கொண்டிருக்கிறது
கூட்டம்.

வெள்ளி, மார்ச் 29, 2013

கோள் தாண்டி வந்தவள்

 













இப்படி ஒரு வினாவை
நான் எதிர்கொண்டதேயில்லை...


கனவு என்றால் என்ன...? 


சொல்லோ ,பொருளோ புரியா வினாவோ,
அங்கதமோ எனக் கடக்க முடியாவண்ணம்
உன் குரல் உறுதியாக மீண்டும்...


கனவு என்றால் என்ன....


உலகாயத விடையா ,தத்துவமா,
மருத்துவமா,ஆன்மீகமா
எப்படி விடையிறுப்பது ..?


சொற்களைத் தேடினேன்..
மிரட்சியில் தலைதெறித்தது
அவைதானாம்..


கோடிட்ட இடங்களாகிவிட்டன
என் கவிதைகள் ....


கையடக்கமான தலையணை
நழுவிக் கரைந்தது...


கனவின் தடம் அறியாதவளே
நீ
உறக்கம் தொலைத்தாயா...
உறங்கியே தொலைந்தாயா...


அப்பொழுதுகளிலும்
கனவினை
அம்மாவின் சீலைத் துண்டாகக்
கைக்குள் சுருட்டியே
கிடத்தலன்றோ  மனித வழமை...


ம்ம்ம்ம்ம்
உன் ஊரை நான் கேட்கவேயில்லை...
.

செவ்வாய், பிப்ரவரி 19, 2013

வன தேவதா





பழுத்த இலைகளில்
பாதம்புதைய நடந்துகொண்டிருக்கிறேன் ..
இருள் கவிந்த வனத்தில்
என்றோ கவிந்ததன் எச்சமான
ஒளியின் சாயலில்
நடக்கிறேன்...
செவியுரசும் விழுது ...
வண்ணமோ வடிவமோ
வாழிடமோ காட்டாது
மணத்தால்
உடன் நடந்த பூ..
உணர்ந்தறியாக் குளிர்மையோடு
கால் நனைத்த நீர்ப் பெருக்கு,
தக்க உதாரணங்களோடு
சேகரித்தபடியே நடக்கிறேன்......
மழையுதிரும் மாலையிலோ,
நிலா வழியும் இராமணலிலோ
நாம் நடக்கையில்
கதைக்கத் தோதாக இருக்குமென...


ஒருவேளை.....
ஒளியின் தடம் தீண்டாமலே
என் பயணம் முடியவும் கூடும் ..
நெடுக அழைத்தபடி
நீ வரும் நாளில்
இந்தப் பழுப்புகள்
சருகாய் மொடமொடத்தால்
அதன் வழியே
நீ கேட்கலாம் என் சேகரங்களை.....
.
என் சிறகில் ஒளியிருந்ததைச்
சொல்லி அழாதே தயவுசெய்து
....!

திங்கள், ஜனவரி 21, 2013

ஜகன்மோகினி



நான்...
அனாமிகா...
வினோதினி...
தாட்சாயணி...
என் விரிசடையோ .
மூன்றாம் நேத்ரமோ ,
தோள் தொடும் தூக்கிய திருவடியோ
கை ஏந்திய எரிதழலோ,
காணவியலாக் கண்முன்னே
தலையாட்டி பொம்மைகள்
உருண்டு கொண்டிருக்கின்றன !
உருப் பெறும்
சாபவிமோசனம்
எப்போது -உன் கண்ணுக்கு?

சனி, ஜனவரி 05, 2013

நுழையா விருந்து




தேநீர்ப் பித்து
குளம்பி பக்தி
பால்மாப் பாலகர்
எல்லோருக்குமென
எடுத்தெடுத்து வைத்த
உறைபிரிக்காக் கோப்பைகளுக்குத்
துணை
சேர்த்துக் கொண்டேயிருக்கிறேன்
என்றேனும் பரிமாறும்
நம்பிக்கையில்..,
உன் புன்னகையில் தெரியும்
இகழ்ச்சி
என் கண்ணுக்கு தெரியும் .
என் விதைகள்
முளைவிடும் என்பதையோ
நீயும் உன் புன்னகையும்
அறிவதில்லை...

சனி, டிசம்பர் 29, 2012

நடத்தை பழகிடு மகனே





எனக்குப் பிறவாத
என் இனிய பொன்மகளே..!
எனக்குத்தெரியும்
நீ இதையும் தாண்டி
வருவாய்....வருவாய்..!
புதைகுழியில் உன்னை
மூடியிருந்த
மண்ணைக் குழைத்துத்தான்
மேடு சமைத்தாய்...
"அங்கேயே கிடக்காதே "
என உன்னை உலுக்கியதும்
உடன் மண் குழைத்ததும்
ஆணின் கரங்களும் தானே ..
நம்பிக்கையிருக்கிறது..
நீ
நடைபழகி முடிக்கும்போது
மன அழுக்கிலா மகன்கள்
உன்னுடன்
நடை பயில்வார்கள்!



செவ்வாய், டிசம்பர் 25, 2012

தவிப்பின் குரல்

பேசு..பேசாதே..
உன் கண்ணும்  மறைத்திருக்கலாம் ..         
பொட்டு வை..வைக்காதே..
சிறிது,பெரிது,...நீளம்..குட்டை..
உன் மேலாடை ,ஆபரணம்..
பழசு புதுசு..,
மாறு..,மாறாதே..,
சிரி.. பல் தெரியவேண்டாம்...
இருள் தவிர்..
ஒளியும் தவிர்..,

எதையும் சொல்லுங்கள் கேட்கிறேன்..
எந்த வயதில்,இடத்தில்,
நலம் அழிக்க வாய்ப்பிலாத
பத்திரம் தருவீர்..?

புதன், டிசம்பர் 19, 2012

தடங்கல(ள )ற்ற பாதை

உன் வழிதான்
என் வழி
என் வழிதான்                                                           
அவன் வழி -அவள் வழி
அவள் ..அவன்..அவள்..
அவர்கள்..இவர்கள்...

யார் பாதம் புல் பூண்டு
மிதித்ததோ ..?
தடம் பிறந்தது என்றோ..?
அறியோம் பராபரமே ..
அடி பிரதட்சிண பாதயாத்ரையில்தான்
என்,உன்,அவன்,அவள்
வாழ்வு நடக்கிறது..


சேறோ ..,நீரோ,
அறியேன்...
ஒடிந்த முள்..,பறக்கப் பார்க்கும்
ஒற்றை இதழ்
எதையும் தலைதூக்க விடாது
பாதங்கள் சுற்றிக்கொண்டேயிருக்கின்றன
என்..,உன்..,அவன்..அவள்..,
இவன்,இவள் ..பாதங்கள்

செவ்வாய், டிசம்பர் 18, 2012

சற்றே ..



பழுத்த இலைபோல்
படர்ந்து கிடக்கும்
ஆயாசத்தின் பின்
தேனுண்ட களைப்பா...
தேடிய பிழைப்பா....


வெள்ளி, டிசம்பர் 07, 2012

"ஆம்பிள சட்டை "



                                   
பிரிய   நடிகை 
காதலன் பிரிவை 
அவன் சட்டை நிரப்புவதாக 
பட்டன் திருகி நின்ற படம் 
அன்று -வினோதம்.
நாகரிகப் பெண்களின் 
தேநீர்ச் சட்டை வாசகங்கள் 
நாவலில் ,
கவர்ச்சிக்கோ,கேலிக்கோ.....

மடித்துவிட்ட

முழுக்கைச் சட்டையோடு வந்து 

பேசினால் -அவள் 

புரட்சிப்பெண் என்பது நம்பிக்கை!
.
பள்ளி நாடகத்தில் 

ஆண்வேட வாய்ப்பை 

அண்ணன் தம்பி உள்ளவளுக்கே 

தருவார் ருக்மிணி டீச்சர்..

எங்கள் வீடு போல், 

பாத்திரம் வாங்க உதவாத 

மாமாவின் கதர்ச் சட்டைகள் 

அத்தைக்குப் பிடித்ததேயில்லை.

யோசனைகளோடு ,

பழைய சட்டைகள் மடிக்கிறேன்-

சேலையின்மேல் அணிந்து 

கல் சுமக்கப்போகும் செல்விக்காகவும்,

நெல் உலர்த்தும் சந்திராவுக்காகவும் .

ஞாயிறு, நவம்பர் 25, 2012

நாளையும் வரக்கூடிய பரிசுப்பொதி



ஒரு காலையைப்
பரிசாக அனுப்பியிருந்தார்கள்...                      
வெளிச்சத் தாள் பளபளப்பில் 
பொதியைப் பிரித்தேன் ,...
தெர்மகோலில் செய்த புன்னகை...
சின்னக் கண்ணாடிப் பேழையில் 
நம்பிக்கை..,
உதிரி சாக்லேட்டுகளாய்
சந்தோஷங்கள்..,
பரிசு நியதியை மீறாமல் 
என் நேரம் ஏந்திய கடிகாரம்..,
பானம் தயாரிக்க நினைவூட்டிய 
அரை டஜன் கோப்பைகள்..,
இடம் நிறைத்த 
உதிரித்தாள் உரையாடல்கள்..,
இந்தக் களேபரத்தில் 
நல்லவேளையாய் உடையவில்லை 
கனவுப் பூ பொம்மையின் 
இதழ்கள்...
எல்லாவற்றுக்கும் பக்கமாய்த்தான் 
கிடக்கிறது 
இறுக முடிந்திருந்து 
நான் கத்தரித்த இருள் நாடா...!  

செவ்வாய், அக்டோபர் 30, 2012

"பஞ்சம் பிழைக்க..."

21 10 12கல்கி இதழில் வெளியானது 



முதுகிலேறி,
எல்லைக்காவல் செய்த 
மண்குதிரைகள் ரெண்டும் 

 
தண்டவாளம் தாண்டி                                  
வண்ணமிழந்து சாய்ந்து கிடக்க ,
அவ்வழி வந்த 
விரைவுரெயிலில் தொற்றி,
கட்டிட மேஸ்திரியாகப்
போயிருக்கலாம் 
நொண்டிக்கருப்பு.. ...
வண்ணக்கொடிகளுடன் 
எல்லைக்கல் கட்டி நிற்கும் 
புதிய நகரில் 
கருவைக்காடும்,கருப்பு கோயிலும் 
தேடிக்கொண்டிருக்கிறான் 
அப்பனின் வேண்டுதலுக்காய்  
புதிய குதிரை 
நேர்ந்துவிட வந்தவன்.

வியாழன், அக்டோபர் 18, 2012

நான்... நான்... நான் ....

  

சின்ன அத்தை போல்  
செவிமடல் ..
வம்சமே ஏறிய  நெற்றிமேடு ..
பிசிறடிக்கும்  பல்வரிசை ,
தலைசாய்த்த உரையாடல் 
ரெண்டுமே தாத்தாவழி ...
வரிக்கு வரி "ம் "போடுவது 
ஆச்சியின் வழக்கம் ..
பெயரின் பின்வால் 
தலைமுறைச் சிந்தனைகளை 
வெட்டி ஒட்டியது !
ஆகிருதி கூட்டும் ஆடைகள் 
அவ்வப்போதைய நடைமுறைப்படி ...

"நான் "

என்னிலிருந்து பிரிவதுமில்லை 
என்னில் உறைவதுமில்லை...                              

செவ்வாய், அக்டோபர் 09, 2012

ரெட்டை வரி நோட்டு




இருளின் முற்றுப்புள்ளி 
வெளிச்சத்தின் 
தொடக்கப் புள்ளியாய் 
இருந்திருக்கலாம் .
ஆனால்..
இருளின் நீள அகலத்துக்குள் 
இடுங்கிப்போன 
வெளிச்சத்தின் முற்றுப்புள்ளியும் 
அதுவானதால் ,
காற் புள்ளிகளோடு  கதைத்தபடி 
இருளின் வரி நீண்டு கொண்டே .....
 உங்களால் 
அதனிடம் ,முற்றுப்புள்ளியை 
நினைவூட்டமுடியுமா ?

செவ்வாய், அக்டோபர் 02, 2012

ஒரு குடம் தண்ணி ஊத்தி....

கீற்று இணையத்தில் இன்று 

                                                                  

கவிழ்ந்த தென்னங்கீற்றாய் 
விரிந்த பஞ்சுத்தலை கோதி
கால் நீட்டிக் கிடக்கும் 
கிழவியைப் 
போகவரப் பார்த்திருக்கிறேன்...
ஒருவேளை 
இவள் அறியக் கூடுமென ,
ஒருநாள் கேட்டேன் 
புதிய வீட்டின் 
வாசலோரப் பூஞ்செடிகள் 
எத்தனைகுடம் 
நீரூற்றியும் 
ஒரு பூ கூட பூக்காததன் 
மர்மத்தை..!
தளும்பத் தளும்ப 
நீர் நிறைந்திருந்த 
குளத்துக்கு
குடங்கள் போதாதென 
வன்மமாய்ச் சிரித்தாள்...
மனநிலை பிறழ்ந்தவளோ
என நழுவியபோது 
பின்னால் சொல்லிக்கொண்டிருந்தாள்
வீடுகளாகிவிட்ட 
குளக்கரையில்,வெகுகாலமாய் 
கூட்டிய செங்கல்லினுள் சிற்றகலாகக் 
காவலிருந்த 
பேச்சி 
தான்தானென்று...!

MY SONG.... MY STORY..-1


மீள்பகிர்வு 
                                                     

தேநீர்க்கடையின் 
பண்பலைப்பாடலையோ,
தேநீரையோ-சிலாகித்தபடி 
நீங்கள் கூடியிருக்கையில் 
மௌனமாகச் சில்லறை தந்து 
விலகிப்போகும் 
அவனும் ஒரு பாடலாசிரியன் என 
உங்களுக்குத் தெரியாது ..
அவன் தெரிவிப்பதுமில்லை...
மிகுந்த பிரயாசையோடு 
அவன் எழுதிய வரிகளை 
கருவிகள் விழுங்கியதை -
அவன் பொறுத்துக் கொண்டான் 
வெற்றிக்குப்பின்னான 
ஒரு நேர்முகத்தில் 
தான் தாண்டியதான சவால்களில் 
சொல்லிக்கொள்ளலாம் என்று...!
எவர் பெயரும் போடாது
 ஏதோ ஒரு படத்தின் பின்னொட்டாய் 
வந்த பாடலை 
நூறாய் அழுத்தும் கள்ளத்தகடுகளும் 
ஏந்தவில்லை...
அவன் எழுதிய அந்த ஒற்றைப்பாடலை 
பெயர் சொல்லாமல் யாரேனும் 
முணுமுணுத்தால் கூடப் போதும்.
யாரோ போல் இவனே கேட்டும் 
இருப்பில் இல்லாததாய் 
வானொலிகளும் மறுத்துவிட்ட 
அவன் பாடலை நீங்கள் 
அறிவீர்களா?

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...