செம்பருத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செம்பருத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, டிசம்பர் 27, 2020

அளவில் இல்லா உலகம்

 இதோ இதோ ஒவ்வொரு வரியாக நகர்த்தி பட்டென்று கண்விழிக்கிறது அந்த செம்பருத்தி

கூப்பிடு தூரத்தில்
அயர்ந்திருந்த பூனைக்குட்டி
தலை உயர்த்திப் பார்த்து
ஒரு வித்தியாசமுமில்லா
உலகம் என்ற அலட்சியத்துடன்
காலை மாற்றி மடித்து உறக்கம் தொடர்கிறது
***************************************************
உடைந்துவிடும்
கிழிந்துவிடும்
நசுங்கிவிடும்
நொறுங்கிவிடும்
கலைந்துவிடும்
சொல்லியபடியே
ஒவ்வொன்றாய்
பாப்புவுக்கு எட்டா
உயரத்தில் பத்திரப்படுத்தினேன்
வீம்பாய் நின்றவள்
மறுநொடி
பாவாடையை ஒற்றைவிரலில் உயர்த்திக்கொண்டு
ஒரு தாண்டுகுதியோடு ஓடிவிட்டாள்
எப்படித்தொட
இந்த உயரத்தை ***********************************************

ஞாயிறு, செப்டம்பர் 20, 2020

செம்பருத்தி கனம்

திரும்பிவந்து பார்க்கும்போது 
நிச்சயமாக இவ்விடம்தானா 
எனச்சொல்ல முடியாதபடி 
எல்லாம் மாறிப்போய்விடுகின்றன 
தூரங்களைத் தாண்டுவது 
பாதுகாப்பு என்றிருந்த நாளில் 
பாழ்பட்ட மனைக்கு என்று 
எவ்விதப் பொருண்மையும் இல்லை 
கனவுகளிலும் சிரித்துக்கொண்டிருந்த 
 ஒற்றைச் செம்பருத்திச்செடிதான் 
 கற்றுத் தந்திருந்து கனத்தை 
புத்துருக் கொண்ட இடங்களில் 
 செம்பருத்திக்கு மண்ணில்லை

வியாழன், நவம்பர் 22, 2018

இருப்பு



குளக்கரையின் யானைத்தூணில்
சங்கிலி மட்டுமே ஏழுகோணலாகக் கிடக்கிறது
தென்னைமட்டையை ஒருநாளைப்போல
இழுத்துவருகிறான் குட்டன்




















உன்இருப்பு தரும் அண்மையை
உன்சொற்களின் கரகரப்பை
முன்முற்றச்செம்பருத்தியிடம்
விட்டுச்செல்
நீ வரும்வரை

செவ்வாய், நவம்பர் 21, 2017

கிணற்றகல இருள்

இருளை விசிறுகிறவர்கள்
ஒளியைக் கைப்பற்ற 
உங்களைத் தூண்டுகிறார்கள்
அது விதியாகத்தான் இருக்கட்டுமே

**********************************************

கிணற்றகல இருளில் மிதந்து கொண்டிருந்த 
இரண்டு 
நந்தியாவட்டைகள் மட்டும்
இன்னும் வெளிச்சமாக

**********************************************

தூவானத்துக்கென்று
தனி நிறம்
உங்கள் எந்த தூரிகையிலும் இல்லாதபடி

********************************************************
நினைத்தது நிஜம்
நினைக்காததும்
இங்கிருப்பதெல்லாம்
இங்கில்லாததும்தானே

*****************************************************

செம்பருத்தியின் அடர்சிவப்பு காணாதவனே
சாம்பிய முகத்தோடு நாள் திறப்பதன்றி 
ஏது வழியுனக்கு

***************************************************************


ஞாயிறு, ஜூன் 18, 2017

செய்



அந்தந்த நிமிடத்தில் வாழ்வதன் சுமை 
தாங்க இயலாதிருக்கிறது
இதற்கு முந்தைய நிமிடத்திலும் 
இப்படித்தான் தோன்றியது என்பதை 
நினைவில் கொண்டுவந்து 
ஆறுதல் கொள்ள முயற்சிக்கிறீர்கள்
அது எவ்வளவோ இலேசாக இருந்ததே 
எனச்சொல்லியபடி
இந்த நிமிடத்தை இறக்க முற்படுகிறீர்கள்
சங்கிலி எங்கு பிணைத்திருக்கிறது 
என்பதைக் கண்டடைவதற்குள்
இதுவும் முந்தைய நிமிடமாகிவிடுகிறது


*************************************************************************
விருப்பம் என்பது விருப்பமற்றிருப்பதற்கு 
அருகில்தான் இருக்கிறது
ஒற்றைப்படை இலக்கத்திற்கு எதிர்ப்புறமாக
இரட்டைப்படை இலக்கத்தினை
அமைத்திருக்கும் குறைந்தபட்ச
இடைவெளி கூட இல்லாமல்
அடுத்தடுத்தே இருக்கிறது
அடுக்கு செம்பருத்தியின்
இதழ்களைப்போன்ற அமைப்பில்
எது விருப்பம்
எது விருப்பமின்மை என்று
அடையாளம் காண்பதை 
வாழ்நாள் வேலையாகச் 
செய்யப் பணிக்கப்பட்டிருக்கிறாய்
செய்

***********************************************************************************



புதன், ஜூலை 06, 2016

செம்பருத்தி

புரிந்திருக்கும் என்ற
நம்பிக்கையை
ஒரு உச்சு 
இடித்து நசுக்கிவிடுகிறது
அது போக
அடியிலிருந்து சிதிலம் உதறி
எப்போ தலைதூக்க

*********************************************
இவ்வளவுதானே
இதற்குள் எதற்கு
அவ்வளவு

**************************************************
நடந்துவிடும் என்ற நம்பிக்கை
ஓடுடைத்துக் கொண்டிருக்கையில்
சிறகின் கோதுகளில்
முள்வைத்துத் தைக்கிறாயோ

**********************************************************
அந்த மீன்குஞ்சு
மரமேறுவதைப் பார்த்தேன்
பழம் பறித்து இறங்கியதோ
பழமாகித் தொங்கியதோ

********************************************************
இவ்வளவு இலைகளைப்
போர்த்திக்கொண்டு
உறங்கிய செம்பருத்தி
உதிர்ந்தபின்
பூத்திருந்த காட்சியை
ஊகித்து ஊகித்து....
பூத்திருந்தபோது ஒருவர் கண்ணிலாவது பட்டிருக்கலாம்

******************************************************************************

உதிர்த்துவிட ஏதுமிலா
சரஞ்சரமான கிளைகளோடு நிற்கையிலும்
அலைக்கழிப்புக்குக் குறைவில்லை



வியாழன், ஜனவரி 21, 2016

ஜனவரிப்பூக்கள்-4

உறைந்து போயிருக்கும்
வாழ்விலிருந்து
வெடித்துக்கிளம்பும் விதை
அதோ மே...மே என்றபடி
இழுத்துச் செல்லப்படும்
ஆட்டுக்குட்டியின்
எச்சில் குரலிலிருந்து விழுகிறது

******************************************
எனக்குத் தெரியாதவை
எவையென்று உனக்குத்
தெரிந்திருந்தது
என்னால் இயலாதவை
எவையென்று உனக்குத்
தெரிந்திருந்தது
எனக்குப் புரியாதவை கூட
உனக்குத்தெரிந்திருந்தது

அப்புறம்...
அவ்வளவுதான்
****************************************
செம்பருத்தி ஒன்று 
ஆடிக்கொண்டிருக்கும்
தருணத்தில்
நீயாகவே உணர்கிறாயா
வா
கை தட்டிக்கொள்ளலாம்
*********************************************
நிசமாகவே கோளாறு
என்றுதான் நம்புகிறார்கள்
கல் தூக்கும்
கையை இறக்கி விட்டால்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...